Home /News /tamil-nadu /

Exclusive | கட்டண கொள்ளையில் ஈடுபடும் பிரபல கல்லூரி; பரிதவிக்கும் மாணவர்கள்!

Exclusive | கட்டண கொள்ளையில் ஈடுபடும் பிரபல கல்லூரி; பரிதவிக்கும் மாணவர்கள்!

வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி

வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி

மாணவர்களுக்கு வேண்டிய கழிப்பறை, மின்சார கட்டணம், வைஃபை, தண்ணீர் மற்றும் காவலாளி சம்பளம் உள்ளிட்ட பராமரிப்பு செலவுகளை யார் கொடுப்பது? அதை தான் மாணவர்களிடம் வாங்குகிறோம்.

  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
மதுரையிலுள்ள அரசு உதவிபெறும் கல்லூரி ஒன்று, நிர்ணயித்ததை விட பலமடங்கு கட்டணம் வசூலிப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் கல்லூரியான வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 55 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கு மதுரை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இங்கு இளநிலை கலை துறை பட்டப்படிப்பிற்கு ஒரு ஆண்டிற்கு 700 ரூபாயும், அறிவியல் துறை பட்டப்படிப்பிற்கு ஆண்டிற்கு 900 ரூபாயும் கட்டணமாக அரசு நிர்ணயித்து உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் மாற்றம் நிகழ்ந்த பின்னர், கல்விக்கட்டணம் பலமடங்கு உயர்த்தி வசூலிக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது.

வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி


அது தொடர்பான பிரத்யேக ஆதாரங்கள் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளன.அதன்படி, செமஸ்டருக்கு 350 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக, 3,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை வசூலித்து வருகின்றனர்.கூடுதல் தொகை, பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப் படுவதாகவும், அந்த ரசீதும் மாணவர்கள் வசம் ஒப்படைக்கப்படாமல் கல்லூரியே வைத்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆவணம்: கட்டண ரசீது


கொரோனா காலகட்டத்தில் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்ட நிலையில், அப்போதும் பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பல ஆயிரங்கள் வசூலிக்கப்பட்டதாகவும், அப்படி கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமலும், டிரான்ஸ்பர் சான்றிதழில் தவறான மதிப்பீடுகளை வழங்கி தங்கள் வாழ்க்கையை கல்லூரி நிர்வாகம் கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் கட்டண கொள்ளை புகார் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார். "கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த கல்லூரி துவக்கப்பட்டது. ஆனால், இன்று அதன் கொள்கையே மாறி கட்டண கொள்ளையில் ஈடுபட்டு ஏழை மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்கள்.

ஆவணம்: கட்டண ரசீது


பூ விற்பது, கல் உடைப்பது, விவசாய கூலி வேலை செய்வது போன்ற ஏழ்மை சூழலில் உள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் தான் அதிகமாக இந்த கல்லூரியில் பயின்று வருகிறோம். அரசு தரும் நிவாரண தொகையினை வைத்து பிழைத்து வரும் நிலையில், ஆயிரக் கணக்கில் கட்டணம் கட்டி எப்படி படிக்க முடியும்? இவர்களின் நெருக்கடிகளால் ஒரு மாணவர் அவரது தாயின் தோடை விற்று கட்டணம் செலுத்தினார்.

Also Read: பாகிஸ்தான் சுதந்திர தினத்தன்று பெண்ணுக்கு நேர்ந்த அவலம் -

கல்லூரி திறக்கப்படாத நிலையிலும், பராமரிப்பு கட்டணம் வசூலித்து உள்ளார்கள். ஆனாலும், மாணவர்களின் அடிப்படை தேவையான குடிதண்ணீர், கழிப்பறை வசதிகள் கூட சரிவர செய்யப்படவில்லை.

பராமரிப்பு கட்டணத்தை செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத முடியும் என நிர்பந்தம் செய்த நிலையில், காமராஜ் பல்கலை துணை வேந்தர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் உள்ளிட்டோரிடம் பேசிய பின்னர் பழைய கட்டணத்தை பெற்றுக் கொண்டு தேர்வு எழுத அனுமதித்தனர்.

விளம்பரப் பலகை


மாணவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டணம் கட்டிய ரசீது பிரதிகளையும் கல்லூரி நிர்வாகமே வைத்துக்கொள்கிறது. இந்த விவகாரங்கள் தொடர்பாக பலமுறை உயர்கல்வித்துறை அமைச்சர், செயலர், அதிகாரிகள் ஆகியோருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.

Also Read:  இத்தனை அம்சங்களுடன் கூடிய Motorola Edge 20 மற்றும் Edge 20 Fusion ஸ்மார்ட்போன்களின் விலை இவ்வளவு தானா?

கல்லூரி கட்டணம் வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக அரசு ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும். மதுரை நகர் பகுதியில் ஒரு அரசு மகளிர் கல்லூரி மட்டுமே உள்ள நிலையில், மாணவர்கள் பயில்வதற்கு ஏதுவாக அரசு கல்லூரி ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.

மற்றொரு மாணவர் பேசுகையில்,"நான் ஈரோட்டை சேர்ந்தவன். என் அப்பா பழம் விற்று என்னை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். மதுரையில் உடல் நலம் இல்லாத என் தாத்தாவை கவனித்துக்கொண்டு, சொற்ப செலவில் கல்லூரி படிப்பை முடிக்கலாம் எனும் நோக்கத்தில் இந்த கல்லூரியில் சேர்ந்தேன்.

முதல் செமஸ்டரில் 350 ரூபாய் மட்டுமே என்னிடம் கட்டணம் வசூலித்தனர். 3 வது செமஸ்டர் வரைக்கும் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலித்தார்கள். 4 வது செமஸ்டரில் இருந்து 10 மடங்கு கட்டணம் அதிகமாக வசூலித்தார்கள்.இதனால் என் வகுப்பில் இரண்டு மாணவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்று விட்டனர்.

இது குறித்து கேள்வி கேட்டதற்காக எங்களுடைய டிரான்ஸ்பர் சான்றிதழில் "good" என்பதற்கு பதிலாக வேண்டுமென்றே "satisfied" என குறிப்பிட்டு கொடுத்தனர். இருந்த ஒரே ஒரு இடத்தை விற்று, 60 ஆயிரம் ரூபாய் கட்டி இப்போது மேற்படிப்பாக ஒரு டிப்ளமோ படிப்பு படித்துத் கொண்டிருக்கிறேன். வேலைக்காக செல்கையில், கல்லூரி கொடுத்த டிரான்ஸ்பர் சான்றிதழை பார்த்து விட்டு, உங்களுக்கு ஏன் "satisfied" என குறிப்பிடப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியவர்கள்? எனக்கு வேலை தர மறுத்து விட்டனர்.

கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, கொரோனா கால ஆன்லைன் வகுப்புகளால் எல்லோருக்கும் இப்படி தான் கொடுத்தோம் என பொய் சொல்கின்றனர்" என்றார்.

கல்லூரி செயலாளர், சிவகாசி எம்.எல்.ஏ.
அசோகன்


கல்லூரியின் செயலாளரும், சிவகாசி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான அசோகனிடம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டோம்.அதற்கு பதிலளித்த அவர், "மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அரசு நிர்ணயித்த ஆண்டு கட்டணம் 1000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், அரசாங்கம், ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுக்கிறது. ஆனால், மாணவர்களுக்கு வேண்டிய கழிப்பறை, மின்சார கட்டணம், வைஃபை, தண்ணீர் மற்றும் காவலாளி சம்பளம் உள்ளிட்ட பராமரிப்பு செலவுகளை யார் கொடுப்பது? அதை தான் மாணவர்களிடம் வாங்குகிறோம்.

கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்லூரிக்கு வராவிட்டாலும், கல்லூரியை பராமரிக்க தானே வேண்டும்? பிற கல்லூரிகளில் 30,000 முதல் 40,000 வரை கூடுதலாக வாங்குகிறார்கள். நாங்கள் வெறும் 4,000 மட்டுமே கூடுதலாக வாங்குகிறோம். அது கூட ஒரு மாணவரிடம் வாங்கா விட்டால் எப்படி கல்லூரி நடத்துவது?

மதுரையில் உள்ள கல்லூரிகளில் நாங்கள் மட்டுமே குறைவாக கட்டணம் வாங்கி வருகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாணவர்களிடம் விபரம் தெரியாமல் குறைவாக கட்டணம் வசூலித்து உள்ளார்கள்.சுயநிதி படிப்புகளை பயிலும் மாணவர்கள் மீது சுமையை ஏற்ற கூடாது எனும் நோக்கில் மற்ற மாணவர்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்கிறோம். வாங்கிய கட்டணத்திற்கு முறையாக ரசீது கொடுக்கிறோம்.

இதற்கு முன்னால் மாணவர்களுக்கு வெறும் கல்வி மட்டுமே கொடுத்தோம். இப்போது நாங்கள் அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதி செய்து கொடுக்கிறோம்.

காமராஜ் பல்கலை குழுவினர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக குழுவினர் ஆகியோர் எங்கள் கல்லூரியில் ஆய்வு நடத்தி, எங்கள் கல்லூரி நடைமுறையில் தவறேதும் இல்லை என ஏற்றுக் கொண்டு விட்டனர்.

இணை இயக்குநர் அலுவலகம்


கல்லூரியில் பணிபுரியும் ஒரு சில பேராசிரியர்கள் நிர்வாகத்தின் மீது உள்ள கோபத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
கேள்வி கேட்ட ஒரு மாணவரின் டிரான்ஸ்பர் சான்றிதழில் நாங்கள் அவரது தரத்தை குறைக்கும் வகையில் குறிப்பிட்டு கொடுத்தோம். அதனால், அந்த மாணவர் வந்து அழுதார். அதன் பின்னர் அவருக்கு சான்றிதழில் மாற்றம் செய்து கொடுத்த பின்னர் அவருக்கு வேலை கிடைத்தது" என மாணவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்.

கூடுதல் கட்டண வசூலிப்பு புகார் தொடர்பாக கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன் முத்துராமலிங்கத்திடமும் விளக்கம் கேட்கப்பட்டது."சம்பந்தப்பட்ட கல்லூரி கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக புகார் வந்துள்ளது, ஆனால் அது தொடர்பான ஆதாரங்களை மாணவர்கள் கொடுக்கவில்லை.

மாணவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உடனே ஆய்வு நடத்தப்பட்டது.இதுவரை நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக எந்த ஆதாரங்களும் கல்லூரியில் கிடைக்கவில்லை.கட்டணத்தை கூடுதலாக வாங்கி மறைத்து உள்ளார்களா என்பது அடுத்தகட்ட விசாரணையில் தெரிய வரும்.

கட்டணம் செலுத்தாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்ற புகாரின் படி, அவர்கள் தேர்வு எழுத கல்லூரி நிர்வாகத்தை அனுமதிக்க உத்தரவு கொடுத்தோம்.டிரான்ஸ்பர் சான்றிதழில் மாணவர்களின் நடத்தை குறித்து தவறுதலாக குறிப்பிட்ட விவகாரம் தொடர்பாக இதுவரை புகார் எதுவும் வரப்பெறவில்லை. அப்படி செய்திருந்தால் அது  தவறு. அது குறித்து புகார் எதுவும் வந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்லூரி பராமரிப்பு செலவுகளை கல்லூரி நிர்வாகம் தான் கையாள வேண்டும், அதனை மாணவர்களிடம் வசூலிக்க கூடாது.கட்டணம் கூடுதலாக வாங்கியது உறுதி செய்யப்பட்டால், கட்டணத்தை திரும்ப அளிக்க உத்தரவு இடுவோம். அல்லது, எந்த படிப்பிற்கு கட்டணம் வாங்கி உள்ளார்கள், என விசாரித்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கல்லூரி நிர்வாகம் சார்பில் கொடுக்கப்படும் விளக்கமும், அரசு கல்லூரி கல்வி இயக்ககம் சார்பில் கொடுக்கப்படும் விளக்கமும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. இருவரின் பதில்களும் மாணவர்களின் குற்றச்சாட்டின் மீதான சாத்தியத்தை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளன.

 தமிழ்நாடு கல்வி பாதுகாப்பு குழு அமைப்பாளர் ஶ்ரீநிவாசன்


இந்த விஷயம் தொடர்பாக தமிழ்நாடு கல்வி பாதுகாப்பு குழு அமைப்பாளர் ஶ்ரீநிவாசன் கூறுகையில்,
"மதுரை காமராஜ் பல்கலை கட்டுப்பாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவைகள் பெரும்பாலும் வணிக நோக்கத்துடன் இயங்கி வருகின்றன.அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட இவ்வளவு கட்டணம் கூடுதலாக வசூலிக்க யார் அனுமதி கொடுத்தது?கல்லூரி நிர்வாகம் இப்படி கூடுதல் கட்டணம் வசூலிப்பது அதிகாரிகளுக்கு தெரியும்.இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகளும் இதே நிலையில் தான் உள்ளன" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொடர்ந்து பேசியவர், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, செயலாளர் ஆகியோருக்கும் புகார் கடிதம் அனுப்பப்பட்டும் இதுவரை கல்வித்துறை அதிகாரிகள் யாரும் கட்டண கொள்ளை குறித்து கண்டு கொள்ளாமல் உள்ளார்கள் என்றார்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை பெரும்பாலான கல்லூரிகளும் பின்பற்றவில்லை என்ற புகார் பரவலாக நிலவி வரும் நிலையில்,இதை உடனே அரசு கண்காணித்து கட்டுப்படுத்தினால் மட்டுமே பல்லாயிரம் ஏழை மாணவர்களின் கல்வி கனவுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Published by:Arun
First published:

Tags: College, Madurai

அடுத்த செய்தி