தந்தை கொலை வழக்கில் கைதானவர் வெட்டிப்படுகொலை - மர்மநபர்களை தேடும் காவல்துறை

மாதிரிப்படம்

முதற்கட்ட விசாரணையில் முத்து முனியாண்டியின் தந்தை கொலை வழக்கில் தொடர்புடைய உறவினரான அருள் என்பவர் முத்து முனியாண்டியை இன்று காலை அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

 • Share this:
  மதுரையில் தந்தை கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வெளிவந்த நபர் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட வலையங்குளம் பகுதியை சேர்ந்தவர் மொட்டையன் - முருகேஸ்வரி தம்பதியினர் இவர்களுக்கு  முத்து முனியாண்டி, பூபதி, சதிஷ், தினேஷ், என 4 மகன்கள் மற்றும் பூ பிரியா என்ற ஒரு மகள் என ஐந்து பிள்ளைகள். இதில் மூத்த மகன் முத்து முனியாண்டி, கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி அவரது தந்தை மொட்டையனை சொத்து தகராறு காரணமாக கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  இந்நிலையில் சிறைக்கு சென்ற முத்து முனியாண்டி சிறையிலிருந்து வெளிவந்து சில நாட்களிலே ஆன நிலையில் இன்று காலை 7 மணியளவில் ஏழு பேர் கொண்ட கும்பலால்  சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தை நேரில் கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி வினோதினி தலைமையிலான பெருங்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும்., சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வலையங்குளம் சௌராஷ்ட்ரா காலனி பகுதியில் முத்து முனியாண்டி(37), தனது மனைவி முத்துமணியுடனும் (33) குழந்தைகள் பூஜா ஶ்ரீ(15), மோனிகா ஶ்ரீ(12), விஷ்ணு ஶ்ரீ(9), நவினா ஶ்ரீ(4), கருப்பு ராஜா என்ற 3 மாத ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார்.பெயிண்டர் ஆக வேலை பார்த்து வரும் முத்து முனியாண்டி நேற்று குடிபோதையில் அப்பகுதியில் இளைஞர்களுடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது, மேலும் ஏற்கனவே சொத்துக்காக தனது தந்தையை கொலை செய்த நிலையில் அவரது உடன்பிறந்த சகோதரர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் திருமங்கலம் துணை கண்காணிப்பாளர் வினோதினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்ட நிலையில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.
  முதற்கட்ட விசாரணையில் முத்து முனியாண்டியின் தந்தை கொலை வழக்கில் தொடர்புடைய உறவினரான அருள் என்பவர் முத்து முனியாண்டியை இன்று காலை அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  காலை வீட்டில் இருந்து வெளியே வந்த முனியாண்டி வீட்டின் அருகே அருளுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை தடுக்க முயன்ற போது அருளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்ததில் லேசான வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அக்கும்பல் அங்கிருந்து தப்பி ஒடியதாக சொல்லப்படுகிறது .

  இச்சம்பவத்தில் கொலை தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும் கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி என்ற வாலிபரையும் முனியாண்டி உறவினர் அருளையும் போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த காரணத்திற்காக பழிக்குப்பழி வாங்க சகோதரர்கள் கொலை செய்தார்களா.? அல்லது நேற்று அப்பகுதி இளைஞர்களுடன் குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா.? என்ற இருவேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக உள்ள மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வலையங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர் - சிவக்குமார் தங்கையா


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: