ஆக்சிஜன் பற்றாக்குறையை தவிர்க்க எளிய வழி: மதுரை மருத்துவர் சொல்லும் தொழில்நுட்பம் என்ன?

மருத்துவர்

ஆக்சிஜன் சிலிண்டரில் சிறிய மாறுதல்களை செய்வதன் மூலம், அதன் பற்றாக்குறையை குறைத்து உயிரிழப்புகளை தவிர்க்கும் வழியை கண்டறிந்துள்ளார் மதுரையை சேர்ந்த மருத்துவர்.

  • Share this:
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இழப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க எளிய செயல்நுட்பத்தை கண்டறிந்துள்ளார் மதுரை மகபூப் பாளையத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் சர்மேஷ் கான்.

அவர் கூறுகையில்,"ஒரு நோயாளிக்கு ஒரு சிலிண்டர் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. அதை மாற்றி, ஒரே சிலிண்டரில் இருந்து இரண்டு அல்லது மூன்று நோயாளிகளுக்கு அவர்களுடைய ஆக்சிஜன் தேவைக்கு ஏற்ப அளவை இறுதி செய்து கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு அளவு ஆக்சிஜன் அவர்களது சுவாசத்திற்கு செல்ல வேண்டுமோ அதை எளிமையாக நிர்ணயம் செய்யலாம். அவசர காலத்தில் இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உதாரணத்திற்கு 1,000 நபருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது எனில் 250 சிலிண்டர்களை வைத்தே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். இது போல ஒரு கருவியை செய்வதற்கு சுமார் 300 ரூபாய் மட்டுமே செலவாகும்.

இந்த நடைமுறையை இதுவரை யாரும் பின்பற்றவில்லை. மேலும், இந்த பரிசோதனை முயற்சி எவ்வித சிக்கலும் இல்லாமல் செயல்படுகிறது. இதுவரை ஒரே புளோ மீட்டரில் (flow meter) இரண்டு இணைப்பு கொடுத்து இரண்டு நோயாளிக்கு ஆக்சிஜன் அளித்து உள்ளார்கள். அதில் இருவருக்கும் ஒரே அளவில் தான் ஆக்சிஜன் அளிக்க முடியும். ஆனால், இந்த புதிய செயல்நுட்பம் மூலம் இரண்டு புளோ மீட்டர் வைத்து இருவருக்கும் வெவ்வேறு அளவு ஆக்சிஜன் அளிக்க முடியும்" என்றார்.

அவருடைய மருத்துவமனையில் இதை செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளதாகவும், இந்த புதிய செயல்நுட்பத்தை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று கூறியவர், இதன் மூலம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதை தவிர்த்து, ஆக்சிஜன் சிலிண்டர்களை மிச்சம் வைத்து அதிகமான உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: