மதுரையில் தீண்டாமையை கடைப்பிடிக்காமல் சாதித்துக் காட்டிய கொடிக்குளம் கிராமத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அளித்து கவுரவித்த ஆட்சியர், அடுத்த ஓராண்டுக்கு அந்த கிராமத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு தனியாக முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாவட்டம் தோறும் தீண்டாமையை கடைபிடிக்காத மற்றும் மத நல்லிணக்கத்தை காக்கும் கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டு முதல் அந்த கிராமத்திற்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அத்திட்டத்தின் படி கிராமத்தை தேர்வு செய்வதற்கு 8 வழிமுறைகளும், ஆட்சியர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும் செயல்பட்டு வருகிறது.
• அந்த கிராமத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பொதுக்கோவில், குடிநீர் கிணறு, கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றை அனைவரும் சுதந்திரமாக அனுபவிக்கும் நிலை இருக்க வேண்டும்.
• தனியாருக்கு சொந்தமான கிணறுகளில் ஆதி திராவிடர் மக்கள் தண்ணீர் எடுப்பதற்கு தடை இருக்க கூடாது.
• ஆதி திராவிட மக்களுக்கு இதர சமூக மக்கள் அவர்களின் வீடுகளை வாடகைக்கு கொடுக்க வேண்டும்.
• விழாக்களில் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்று ஒன்றாக அமர்ந்து விருந்து உண்ண வேண்டும்.
• பிற சமூக மக்களின் விழாக்களின் ஆதி திராவிட மக்களை பங்கேற்க அழைக்க வேண்டும்.
• அனைத்து சமூகத்தினரும் நல்லுறவுடன், சுமூகமாக வாழ வேண்டும்.
• தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்ற தத்துவத்தை அக்கிராம மக்கள் அனைவரும் கண்ணியமாக கடைபிடிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த விதிகளில் 5 அல்லது 5-கும் மேற்பட்ட விதிகளை பின்பற்றும் கிராமத்தினை கண்காணித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உள்ளிட்டோர் ஆட்சியர் தலைமையிலான குழுவுக்கு பரிந்துரை செய்வர்.
அப்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட கொடிக்குளம் எனும் கிராமம் பரிந்துரை செய்யப்பட்டு, அதனை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் அங்கீகரித்து இன்று அந்த கிராமத்தில் விழா நடத்தி ஊராட்சி மன்ற தலைவர் வனிதாவிடம் 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை ஒப்படைக்கப்பட்டது.
15 சமுதாய மக்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் நூறாண்டுகளுக்கு முன்பே இரட்டைக் குவளை முறை ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், தீண்டாமை ஒழிப்பை மேற்கொள்ள தேவையான வழிமுறைகளை நெடுங்காலமாக பின்பற்றி மக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதாகவும் மக்கள் பெருமிதத்துடன் விழாவில் தெரிவித்தனர்.
விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர்,
"இந்த விருது மக்களுக்கு, அவர்களின் ஒற்றுமைக்கு கொடுக்கப்பட்ட விருது. தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பின் மீது அவர்கள் கவனம் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விருதின் வழியாக கொடிக்குளம் கிராமம் மற்ற கிராமங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும்" என கூறியவர்,
"கிராம மக்கள் 100 பேருக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தலா 20,000 ரூபாய் சிறப்புக் கடன் வழங்கப்படும்" என அறிவித்து அதற்கான காசோலைகளையும் பயனாளர்களுக்கு வழங்கினார்.
மேலும், "கொடிக்குளம் கிராமத்திற்கு வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஒரு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அடுத்த ஓராண்டுக்கு கிராம வளர்ச்சிக்குத் தனிக்கவனம் செலுத்தப்படும்" என அறிவித்ததோடு, அடுத்த ஓராண்டில் பிளாஸ்டிக் இல்லாத கிராமமாகவும், அதிக மரங்களை வளர்த்த கிராமமாகவும், நீர் நிலைகள் பராமரிப்பில் முழுமையான கிராமமாகவும் மாற்றிக் காண்பித்தால் அதற்கும் தனி பரிசு வழங்கப்படும்" என அறிவித்து மக்களுக்கு உற்சாகம் அளித்தார்.
கிராம மக்கள் கூறுகையில், "எங்க கிராமத்தில சாதி வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரையும் மாமன், மச்சான், அத்தை, மதினி, அக்கா முறை சொல்லி தான் அழைப்போம்.
எல்லோருடைய வீட்டு விஷேஷங்களிலும் எல்லோரும் உறவினர்கள் போல பங்கேற்று மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
யாரையும் சாதி சொல்லி அழைக்க மாட்டோம். யாருக்கு என்ன சிரமம் வந்தாலும் எல்லா சாதி மக்களும் வந்து நிற்பார்கள். வெளி ஊரில் எந்த பிரச்சனை என்றாலும் எல்லா சாதி மக்களும் ஒன்றாக வருவார்கள். துக்க வீடுகளில் எல்லா சாதி மக்களும் முதலில் சென்று நிற்பார்கள். யாரும் யாரையும் தள்ளி நில் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். தலைமுறை தலைமுறையாக குழந்தைகளுக்கு தீண்டாமை ஒழிப்பு குறித்து அறிவுறுத்தி வளர்த்து வருகிறோம்" என தெரிவித்தனர்.
Also read... மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் 50 அதிகாரிகள் திடீர் ஆய்வு - எடை இயந்திரங்கள் பறிமுதல்
கொடிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா கூறுகையில்,
"எங்களுக்குள் எந்த ஜாதி மத வேறுபாடுகளும் இல்லை.எல்லா சமூக மக்களுக்கும் சமமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்துள்ளோம்.
பரிசுத் தொகை பெற்றதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த தொகையின் மூலம், குடிநீர், சாலை, பள்ளி கட்டிட சீரமைப்பு, விளக்குகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளோம்" என தெரிவித்தார்.
கொடிக்குளம் கிராமத்தைப் பார்த்து பிற கிராமங்களும் தீண்டாமை ஒழித்து மத நல்லிணக்கத்தை காப்பாற்றி, பரிசு பெற்று கிராமத்தை முன்னேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஆட்சியர், சாதி வேறுபாடுகள் அதிகமுள்ள பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி மதுரையின் அடையாளத்தை மாற்றிக் காட்டுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Madurai