மதுரையில் 28 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கத்தினர், கார்ப்பரேட் மாடல் நிர்வாகத்தை செயல்படுத்தி வரும் ஆணையரை உடனே பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாநகராட்சியின் அனைத்து பிரிவு பணியாளர்கள் 28 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சுகாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் ஆகிய சங்கங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினக்கூலி தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும், 7வது ஊதியக்குழு நிலுவை தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகையை வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களை வார்டு கவுன்சிலர்கள் மிரட்டுவதை தடுக்க வேண்டும், பணியாளர்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி தொழிலாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், "அனைத்து பிரிவு தொழிலாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு பலமுறை மாநகராட்சி அனையருக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எதுவும் நிறைவேற்றி தரப்படவில்லை. தொழிலாளர் விரோத போக்குடன், அதிகார மனநிலையில் ஆணையர் செயல்படுகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு திராவிட மாடல் ஆட்சியை தருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
ஆனால், மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயன் கார்ப்பரேட் மாடல் நிர்வாகத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்றால் ஆணையர் கார்த்திக்கேயனை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்து பேசினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.