• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நியூஸ் 18 செய்தி எதிரொலி - கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்த விவகாரம் - மதுரை பிரபல கல்லூரி மீது நடவடிக்கை!

நியூஸ் 18 செய்தி எதிரொலி - கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்த விவகாரம் - மதுரை பிரபல கல்லூரி மீது நடவடிக்கை!

மதுரை கல்லூரி

மதுரை கல்லூரி

கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்லூரிக்கு வராவிட்டாலும், கல்லூரியை பராமரிக்க தானே வேண்டும்.

  • Share this:
மதுரையில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் கல்லூரி, விதியை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தது தொடர்பாக, நியூஸ் 18 வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக, கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள பிரபல அரசு உதவி பெறும் கல்லூரியான வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி 55 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கு மதுரை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

இங்கு இளநிலை கலை துறை பட்டப்படிப்பிற்கு ஒரு ஆண்டிற்கு 700 ரூபாயும், அறிவியல் துறை பட்டப்படிப்பிற்கு ஆண்டிற்கு 900 ரூபாயும் கட்டணமாக அரசு நிர்ணயித்து உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் மாற்றம் நிகழ்ந்த பின்னர், கல்விக்கட்டணம் பலமடங்கு உயர்த்தி வசூலிக்கப் படுவதாக புகார் எழுந்தது.

அதன்படி, செமஸ்டருக்கு 350 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக, 3,500 ரூபாய் முதல் 4,000 ரூபாய் வரை வசூலித்து வருகின்றனர்.கூடுதல் தொகை, பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் வசூலிக்கப் படுவதாகவும், அந்த ரசீதும் மாணவர்கள் வசம் ஒப்படைக்கப்படாமல் கல்லூரியே வைத்துக் கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

Also Read:  6 லட்சம் கடனுக்கு ரூபாய் 3 கோடி வட்டி.. வசூல் வேட்டை நடத்திய கந்துவட்டி கும்பல் - கண்ணீர் விடும் இளம்பெண்

கொரோனா காலகட்டத்தில் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்ட நிலையில், அப்போதும் பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் பல ஆயிரங்கள் வசூலிக்கப்பட்டதாகவும், அப்படி கட்டணம் செலுத்தாத மாணவர்களை தேர்வு எழுத அனுமதிக்காமலும், டிரான்ஸ்பர் சான்றிதழில் தவறான மதிப்பீடுகளை வழங்கி தங்கள் வாழ்க்கையை கல்லூரி நிர்வாகம் கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும் மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.கல்லூரியின் செயலாளரும், சிவகாசி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான அசோகனிடம் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்ட போது,"மூன்று வருடங்களுக்கு முன்பு வரை அரசு நிர்ணயித்த ஆண்டு கட்டணம் 1000 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்துள்ளது. மேலும், அரசாங்கம், ஆசிரியர்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுக்கிறது. ஆனால், மாணவர்களுக்கு வேண்டிய கழிப்பறை, மின்சார கட்டணம், வைஃபை, தண்ணீர் மற்றும் காவலாளி சம்பளம் உள்ளிட்ட பராமரிப்பு செலவுகளை யார் கொடுப்பது அதை தான் மாணவர்களிடம் வாங்குகிறோம்.

கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்லூரிக்கு வராவிட்டாலும், கல்லூரியை பராமரிக்க தானே வேண்டும். பிற கல்லூரிகளில் 30,000 முதல் 40,000 வரை கூடுதலாக வாங்குகிறார்கள். நாங்கள் வெறும் 4,000 மட்டுமே கூடுதலாக வாங்குகிறோம். அது கூட ஒரு மாணவரிடம் வாங்கா விட்டால் எப்படி கல்லூரி நடத்துவது.

Also Read:  பிரதமர் மோடி கொடுத்த காசு தரமுடியாது.. அடம்பிடிக்கும் இளைஞர்.. விழிபிதுங்கும் வங்கி ஊழியர்கள்

மதுரையில் உள்ள கல்லூரிகளில் நாங்கள் மட்டுமே குறைவாக கட்டணம் வாங்கி வருகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை மாணவர்களிடம் விபரம் தெரியாமல் குறைவாக கட்டணம் வசூலித்து உள்ளார்கள்.சுயநிதி படிப்புகளை பயிலும் மாணவர்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது எனும் நோக்கில் மற்ற மாணவர்களிடம் கட்டணம் அதிகமாக வசூலிக்கிறோம். வாங்கிய கட்டணத்திற்கு முறையாக ரசீது கொடுக்கிறோம்.

இதற்கு முன்னால் மாணவர்களுக்கு வெறும் கல்வி மட்டுமே கொடுத்தோம். இப்போது நாங்கள் அவர்களுக்கான வேலை வாய்ப்பையும் உறுதி செய்து கொடுக்கிறோம்.காமராஜ் பல்கலை குழுவினர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் அலுவலக குழுவினர் ஆகியோர் எங்கள் கல்லூரியில் ஆய்வு நடத்தி, எங்கள் கல்லூரி நடைமுறையில் தவறேதும் இல்லை என ஏற்றுக் கொண்டு விட்டனர்.

கல்லூரியில் பணிபுரியும் ஒரு சில பேராசிரியர்கள் நிர்வாகத்தின் மீது உள்ள கோபத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.கேள்வி கேட்ட ஒரு மாணவரின் டிரான்ஸ்பர் சான்றிதழில் நாங்கள் அவரது தரத்தை குறைக்கும் வகையில் குறிப்பிட்டு கொடுத்தோம். அதனால், அந்த மாணவர் வந்து அழுதார். அதன் பின்னர் அவருக்கு சான்றிதழில் மாற்றம் செய்து கொடுத்த பின்னர் அவருக்கு வேலை கிடைத்தது" என மாணவர்கள் தெரிவித்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் வகையில் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக, பல்வேறு ஆதாரங்களுடன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி சில நாட்களுக்கு முன்னர் பிரத்யேக செய்தி தொகுப்பு வெளியிட்டிருந்தது.அதன் விளைவாக கல்லூரி கல்வி இணை இயக்குனர் முத்துராமலிங்கம் நேரில் ஆய்வு நடத்தி, கட்டணம் கூடுதலாக வசூலித்து உள்ளார்களா என நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்தது உறுதியாகி உள்ளதும், அது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குனருக்கு அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.மேலும், கூடுதலாக வசூலித்த கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி அளிக்கவும், இதன்பிறகு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: