Home /News /tamil-nadu /

சித்திரைப் பெருவிழா 5ம் நாள் வீதி உலா - தங்க குதிரை வாகனத்தில் மீனாட்சியும் சொக்கரும்!

சித்திரைப் பெருவிழா 5ம் நாள் வீதி உலா - தங்க குதிரை வாகனத்தில் மீனாட்சியும் சொக்கரும்!

சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சியும் சொக்கரும் தங்க குதிரையில் வலம் வந்தனர்.

    மதுரை சித்திரைப் பெருவிழாவின் ஐந்தாம் நாள் வீதி உலா நிகழ்வில் தங்க குதிரை வாகனத்தில் ராமாயண சாவடி மண்டகப்படியில் இருந்து வீதி உலா வந்த மீனாட்சி - சுந்தரேசுவரரை ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து மகிழ்ந்தனர்.

    பண்பாட்டின் தலைநகரம் மதுரையில் 16 நாட்கள் நடைபெறும் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 5 ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக கற்பக விருட்சம், சிம்மம், தங்க சப்பரம், பூதம் - அன்னம், கைலாச பர்வதம், காமதேனு உள்ளிட்ட வாகனங்களிலும், நேற்று தங்கப் பல்லக்கிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    சித்திரைத் திருவிழா


    ஐந்தாம் நாளான இன்று காலையில் தங்க சப்பரத்தில் நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து வடக்கு மாசி வீதியில் உள்ள ராமாயண சாவடி மண்டகப்படியில் தங்கினர். பின்னர், மாலையில் தங்க குதிரை வாகனத்தில் ராமாயண சாவடி மண்டகப் படியில் இருந்து வடக்கு மாசி வீதி, கீழ மாசி வீதி, சுவாமி சந்நிதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    வீதிகளின் இரு புறமும் திரளாக குவிந்திருந்த மக்கள் சுவாமி ஊர்வலத்தின் முன்பாக மீனாட்சி, கருப்பசாமி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் சென்ற குழந்தைகளையும் ரசித்தும், நாட்டுப்புறக் கலை ஆட்டங்களில் பங்கேற்றும், மேள தாள கொண்டாடத்தின் உற்சாகத்துடன் சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

    சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கோலாகலம் (படங்கள்)

    இதே போன்று தினமும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்வுகளும், அதனை தொடர்ந்து ஏப்ரல் 12 ஆம் தேதி பட்டாபிஷேகமும், 13 ஆம் தேதி திக் விஜயமும், 14 ஆம் தேதி திருக்கல்யாணமும், 15 ஆம் தேதி தேரோட்டமும், 16 ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
    Published by:Karthick S
    First published:

    Tags: Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி