முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரை சித்திரைத் திருவிழா - அறிந்த கதையும், அறியாத உண்மைகளும்!

மதுரை சித்திரைத் திருவிழா - அறிந்த கதையும், அறியாத உண்மைகளும்!

சித்திரை தேரோட்டம்

சித்திரை தேரோட்டம்

Madurai Chithirai kallazhagar thiruvizha 2022 | ஏப்ரல் 5-ம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கும் விழா, 12-ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகத்துடனும், 14-ம் தேதி மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணத்துடனும், 15-ம் தேதி தேரோட்டத்துடனும் தொடரும் விழாவின் உச்சமாக 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது...

மேலும் படிக்கவும் ...
  • 6-MIN READ
  • Last Updated :

மதுரை சித்திரைத் திருவிழா சார்ந்து மக்களிடம் புழங்கும் பிரபலமான பழமரபுக்கதையும், அதற்கு பின்னால் உள்ள உண்மைகளும், அதனை நிறுவுவதற்கான சான்றுகளும் என பல பண்பாட்டு முடிச்சுக்களை இந்தக்கட்டுரை அவிழ்க்கிறது. 40 ஆண்டுக்கு முன்னால் இவை குறித்து தொ.பரமசிவன் நடத்திய முழுமையான ஆய்வின் நீட்சி இன்றளவும் மாறாமல் தொடர்வதும், அதனை இப்போது புரட்டிப் பார்ப்பதும் காலத்தின் கட்டாயமாகிறது.

தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தலைநகரம் - மதுரை. இலக்கியங்களில் நெடுங்காலமாக பேசப்படுகின்ற ஊர் என்பதாலும், இங்கு அரசாளும் மீனாட்சி தாய்வழிச்சமூகத்தின் எச்சப்பாடாக இருப்பதாலும் மதுரைக்கு அப்படியொரு சிறப்பு. மேலும், ஒரு பெண்தெய்வம் தனியாக முடிசூடி திக்விஜயம் செய்யும் வழக்கம் வேறெந்த ஊரிலும் இல்லை. அதேபோல, அவளுடைய பெயரை சாதி வேறுபாடுகள் இல்லாமல் எல்லோரும் சூட்டிக்கொள்கிறார்கள். இந்தச் சிறப்பும் வேறெந்த தெய்வத்திற்கும் கிடையாது.

எனவே, பெண்ணின் தனித்த உரிமையை பேணி காக்கும் சடங்குகளும், திருவிழாக்களும் உணர்வு மாறாமல் தகித்துக் கொண்டிருப்பதால் பண்பாட்டின் விழுமியங்களில் மதுரைக்கு எப்போதும் தனிப்பெருமை உண்டு என்கிறார் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன்.

மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு - "திருவிழாக்களின் திருவிழா" என்றதொரு மங்காத புகழ்மொழியுண்டு. இந்த விழாவில் தமிழகம் முழுவதும் இருந்தும் (பெரும்பாலும் தென்மாவட்டங்களில் இருந்து) சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மதுரைக்கு வந்து செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

இதை வெறும் சைவ - வைணவ சமயங்களின் விழாவாக சுருக்கி விட முடியாது. மீனாட்சி கோவில் கொடியேற்றத்தில் துவங்கி அழகர் மீண்டும் மலைக்கு திரும்பும் வரை மொத்தம் 16 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவில் பெரும் பொருளாதார சுழற்சியும், சமூக தொடர்பும் நிகழ்கின்றன.

திருவிழாவிற்கு முன்னதாக அழகர் வேடமிடுவதற்கான பிரத்யேக உடைகளை, உபகரணங்களை புதுமண்டபத்தில் வாங்குவது, தேர் முட்டி அருகே ஆட்டுத் தோலில் செய்யப்பட்ட பையை வாங்கி துருத்தி நீர் தெளிக்க பயன்படுத்துவது, திரியெடுத்து ஆடுவது, நீர் - மோர் பந்தல்கள் அமைப்பது, குழந்தைகளுக்கு தலைமுடி மழித்து காது குத்துவது, சாதி பேதமில்லாமல் எல்லா மக்களும் அழகரை காண ஒன்றாக திரள்வது என இது போன்ற நிகழ்வுகள் எதையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரங்கேற விடாமல் கொரோனா பெருந்தொற்று தடுத்து விட்டது.

வரலாற்றில் முதன்முறையாக இரண்டாண்டுகள் திருவிழாவில் மக்கள் பங்கேற்பு தடைபட்டு, இந்தாண்டு மீண்டும் மக்கள் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது. எனவே, இதுவரை இல்லாத கொண்டாட்டத்தையும், பொருளாதார ஊக்கத்தையும், சமூக புத்துணர்வையும் இந்த திருவிழாவில் அனுபவிக்க முடியும் என்பதற்கான கொம்பொலி எட்டுத்திக்கும் எதிரொலிப்பதை உணர முடிகிறது.

கள்ளழகர் திருக்கோலம்

ஏப்ரல் 5-ம் தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கும் விழா, 12-ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேகத்துடனும், 14-ம் தேதி மீனாட்சி - சொக்கநாதர் திருக்கல்யாணத்துடனும், 15-ம் தேதி தேரோட்டத்துடனும் தொடரும் விழாவின் உச்சமாக 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்த பட்டியலில், மீனாட்சி கல்யாணம் மற்றும் கள்ளழகர் மதுரை வரும் நிகழ்வையும் தொடர்புப்படுத்தி புழங்கும் பழமரபுக்கதை ஒன்று மக்களிடமுண்டு.

"தன் தங்கை மீனாட்சியின் திருமணத்திற்காக சீர்வரிசைகளுடன் மதுரை வருகிறார் கள்ளழகர். அவர் வருவதற்கு முன்னரே மீனாட்சியின் கல்யாணம் முடிந்து விட்டதால், கோபித்துக் கொண்ட அவர் வைகையாற்றில் இறங்கி குளித்து விட்டு வண்டியூர் சென்று விடுகிறார். அன்றிரவு அங்கு தன் காதலி துலுக்க நாச்சியார் வீட்டில் தங்கி விட்டு மீண்டும் அழகர் மலைக்கு திரும்பி விடுகிறார்" என்பது தான் அந்தக்கதை. இந்த கதையின் திரையை நூலளவு விலக்கிப் பார்த்தால் கூட சமயம், பண்பாடு, சமூகம், அரசியல் சார்ந்து பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் நம்மை துளைப்பதை தவிர்க்க முடியாது.

உண்மையில் எதற்காக மதுரை வருகிறார் அழகர்?

சைவ தெய்வமான மீனாட்சி கல்யாணத்திற்கும், வைணவ தெய்வமான அழகர் ஊர்வலத்திற்கும் என்ன தொடர்பு?

அழகர் கோவிலில் இருந்து 'கள்ளர்' வேடமேற்று மதுரை வருவது ஏன்?

தல்லாகுளம் வரை கள்ளழகர் வேடத்தில் வந்தவர் அங்கு மீண்டும் அழகராக மாறுவது ஏன்?

அழகர் கோவிலில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக மதுரை வரும் அழகர் தன் தங்கை மீனாட்சி கோவிலுக்கு செல்லாதது ஏன்?

ஆற்றில் இறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடக்கும் கல்யாணத்திற்கு ஏன் வரவில்லை?

தல்லாகுளம் வரை வந்து விட்டு ஆற்றைக்கடந்து மதுரைக்குள் நுழையாமலேயே திரும்பி விடுவது ஏன்?

வண்டியூரில் உள்ள பெருமாள் கோவிலில் தங்கும் அழகரை துலுக்கநாச்சியார் வீட்டிற்கு செல்வதாக கூறுவது ஏன்?

இப்படியாக அழகரின் மதுரை வருகை குறித்து எழுந்த பல்வேறு கேள்விகளால் அலைக்கழிக்கப்பட்ட மனதிற்கு அமைதி தேடும் விதமாகவே மக்கள் அப்படி ஒரு  கதையினை படைத்து வழங்கி வருகின்றனர் என தன்னுடைய 'அழகர் கோயில்' ஆய்வு நூலில் குறிப்பிட்டுள்ள பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன், அதற்கான உண்மை காரணங்களை தகுந்த ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார்.

மீனாட்சி - சொக்கர் திருக்கல்யாணம்

அழகரின் மதுரை பயண நோக்கம்:-

மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக வண்டியூர் அருகில் உள்ள தேனூர் மண்டபத்திற்கும், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெற்றுக்கொள்வதற்காக தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கும் வருவது தான் அழகரின் மதுரை பயணத்தின் நோக்கம் என கோயில் திருவிழா அழைப்பிதழ் கூறுகிறது.

மேலும் படிக்க... மதுரை சித்திரை திருவிழா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மீனாட்சி கல்யாணத்திற்கும் அழகர் வருகைக்கும் உள்ள தொடர்பு:-

பாண்டிய நாட்டில் சைவ - வைணவ எதிர்ப்பு போராட்டம் நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது. எனவே, சைவ - வைணவ சமயங்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவே இரு விழாக்களும் இணைக்கப்பட்டுள்ளன. மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண திருவிழாவை, அறுவடை முடியாத நிலையில் வேளாண்மை பெருமக்களால் காணமுடியாமல் இருந்ததால் அந்த விழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சித்திரை திருவிழா தேரோட்டம் மாசி வீதியில் நடப்பது இதற்கான சான்று.

சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் எனும் இடத்திற்கு சென்று வந்து கொண்டிருந்த அழகர் ஊர்வலம், திருக்கல்யாணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து மதுரைக்கு வரும்படி மாற்றப்பட்டுள்ளது. வண்டியூர் அருகே மண்டூக முனிவருக்கு சாப விமோஷனம் (நாரைக்கு முக்தி) கொடுக்க அழகர் செல்லும் மண்டபத்தின் பெயர் 'தேனூர் மண்டபம்'. தேனூரை சேர்ந்தவர்களே இங்கு கோயில் மரியாதை பெறுகின்றனர் என்பதும் அதற்கான சான்றாக அமைந்துள்ளது.இந்த இரண்டு விழாக்களையும் திருமலை நாயக்கர் அவரது ஆட்சிக்காலத்தில் (கி.பி.1623 - 1659) தான் இணைத்துள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமைத்த தேர்களை இழுக்க ஆட்களை சேர்க்கவும், கால்நடை சந்தைகளை நடத்தவும், மக்கள் தம்முள் கலந்துறவாடவும், மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழாவை மாற்றும் நோக்கத்திலும் திருமலை நாயக்கர் இதை செய்துள்ளார். திருவிழாக்களை மாற்றக்கூட தனக்கு அதிகாரம் இருப்பதாக காட்டவும் அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அழகர் ஊர்வலத்தில் உடைகள், நகைகள், பிற அணிகலன்களை எடுத்து வரும் வண்டிகளும், உண்டியல்களை ஏந்திய வண்டிகளும் வரும். அதனையே தங்கை மீனாட்சிக்கு அண்ணன் அழகர் திருமண சீர் கொண்டு வருவதாகவும் நம்பி மக்கள் தங்கள் கதைக்குள் சேர்த்துள்ளனர். மற்றபடி அழகர் ஊர்வலத்திற்கும் மீனாட்சி கல்யாணத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அழகர் - கள்ளழகராக மாறுவதன் காரணம்:-

திருமலை நாயக்கர் காலத்திற்கு பின்னர் மதுரையை ஆண்ட விஜயரங்கசொக்கநாதன் ஆட்சிக்காலத்தில் (கி.பி.1706 - 1717) ஊருக்குள் புகுந்து தாக்கும் அளவிற்கும், அழகர் கோவில் பகுதியில் உழவுத்தொழில் நடத்த இயலாமல் தொல்லை தருமளவும் கள்ளர் சாதியினர் வலிமை பெற்றிருந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் அழகர் ஊர்வலத்தை ஒருமுறை கள்ளர்கள் மறித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக அந்த சமூகத்தினருக்கு 'இறைவனின் கள்ளர் திருக்கோல மரியாதை' தருவதற்கு கோவில் உடன்பட்டிருக்கிறது. மேலும், கோவில் சொத்துடைமை நிறுவனமாக இருந்ததால் அதனை காத்துக் கொள்வதற்கும், கள்ளர்களோடு உறவு கொண்டு அதற்கு ஆன்மீக வண்ணமும் தரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... இந்த ஆண்டு மதுரை சித்திரை திருவிழா நடக்கும்... சித்திரை பொருட்காட்சி நடக்குமா? - குழம்பும் மதுரைவாசிகள்

இதன் காரணமாகவே அழகர் கோவிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பும் அழகர், ஒரு கையில் வளரித்தடி, மற்றொரு கையில் சாட்டைக்கம்பு, ஆண்கள் இடுகின்ற ஒரு வகையான கொண்டை, உருமால், காதுகளில் கடுக்கன், 'காங்கு' எனப்படும் கருப்பு புடவை ஆகியவை அணிந்து கள்ளர் தோற்றத்தில் வருகிறார்.

தல்லாகுளத்தில் கள்ளழகர் - அழகராக மாறுவதன் காரணம்:-

அழகர் ஊர்வலம் மதுரையை சேர்ந்த உயர்சாதியினரால் (சைவர்களால்) தல்லாகுளத்தில் மறிக்கப்பட்டிருக்கலாம். பிராமண பூசைபெறும் பெருந்தெய்வமான அழகர், கள்ளர்களை போல வேடமணிந்து வந்தது இதற்கு வலுவான காரணமாகயிருக்கலாம். மோதலுக்கு பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டில் அழகர் மதுரை நகருக்குள் வருவது தடுக்கப்பட்டு, வைகையாற்று பகுதியிலும், வண்டியூரிலும் கள்ளர் வேடம் தடை செய்யப்பட்டிருக்கலாம்.

"அழகரின் ஊர்வலம் தல்லாகுளம் பகுதிக்கு வரும்போது ஒருமுறை பாண்டிமுனி அதனை மறித்துக் கொண்டதாகவும், உடனே அழகர் அவரது காவலாளியான பதினெட்டாம்படி கருப்பனை நினைத்ததாகவும், கருப்பன் வந்து பாண்டிமுனியை விரட்டிவிட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும்" என தல்லாகுளத்தில் கருப்பசாமி கோவில் ஏற்பட்டதற்கு ஒரு கதையும் வழக்கில் இருக்கிறது.

வைகையாற்றில் எழுந்தருளல்

மதுரை நகருக்குள் அழகர் வராததன் காரணம்:-

"மதுரை தங்கச்சி பூமி; அழகருக்கு அக்கரையும் மீனாட்சிக்கு இக்கரையும் தீந்திட்டு; அழகருக்கு எல்லை அவ்வளவு தான்" எனும் புழங்குமொழிகள் அழகருக்கும் மீனாட்சிக்கும் எல்லைகள் வரையறுக்கப்பட்டன என்பதை உணர்த்துகின்றன.

அழகருக்கு வைகையாற்றின் தென்கரையில் நகர்ப்பகுதிக்குள் ஒரே ஒரு திருக்கண் உண்டு. யானைக்கல் பகுதியில் திருமலைராயர் படித்துறையை அடுத்து (கல்பனா திரையரங்கம் இருந்தவிடம்) ஐயங்கார் தோப்பு மண்டகப்படி எனும் திருக்கண் உண்டு. இந்த மண்டகப்படிக்கு அழகர் பல்லக்கு வருவதில்லை. மாறாக, வைகையின் வடகரையில் ஒரு மண்டகப்படியில் அழகரின் பல்லக்கு இருக்க, அழகரின் திருவடியாக கருதப்படும் சடாரியை மட்டும் ஒரு சிறிய பல்லக்கில் எடுத்து வந்து பூசை செய்து திரும்பவும் கொண்டு செல்கின்றனர். அழகர் வர முடியாத காரணத்தால் தான் அவரது திருவடியை மட்டும் அங்கு எடுத்து செல்கிறார்களோ என்ற எண்ணம் அழகரின் வருகை நகருக்குள் தடுக்கப்பட்டதை உறுதி செய்கிறது.

அப்படியெனில், அழகர் கள்ளர் வேடம் ஏற்க துவங்கும் முன்னர் நகருக்குள் வந்திருப்பாரா? எனும் கேள்விக்கும் ஒரு சான்று இருக்கிறது.

மதுரை அரசரடி - ஆரப்பாளையம் பகுதியில் 'அழகரடி' எனும் பகுதி இருக்கிறது. அங்கு அழகரின் இரு பாதங்கள் கல்லில் செதுக்கப்பட்டு, அது ஒரு சிறிய கோவிலாக மாற்றப்பட்டு மக்களால் அழகரடி என அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் அழகர் வந்து இங்கு தங்கியதாக ஒரு வழக்குமரபும் இப்பகுதி மக்களிடத்தே நிலவுவதாலும், 'அடி' எனும் சொல் இடத்தை குறிப்பதாலும் இப்பகுதி அழகரடி என குறிப்பிடப்படுகிறது.

எனவே, கிராமப்புற தாழ்த்தப்பட்ட சாதியினரான அழகரின் அடியவர்களுக்கும், மதுரை நகரத்து உயர்சாதியினராக கூறப்பட்ட சைவர்களுக்கும் நடந்த போராட்டங்கள் காரணமாகவே அழகர் மதுரை நகருக்குள் வருவதில்லை.

மேலும் படிக்க... மதுரை சித்திரை திருவிழா 2022 - இன்று சப்பர முகூர்த்த விழா

துலுக்கநாச்சியார் வீட்டிற்கு அழகர் செல்வதாக கூறுவதன் நோக்கம்:-

வண்டியூரில் துலுக்கநாச்சியார் கோயில் இல்லை, அங்குள்ள பெருமாள் கோவிலில் தான் அழகர் தங்குகிறார். அதையே துலுக்கநாச்சியார் கோவில் எனவும், அங்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் அழகர் தங்கும் இரவில் இஸ்லாமியர்களும் கலந்துகொண்டு வாணவேடிக்கைகள் நடத்தியதாகவும் தகவல்கள் உண்டு.

இஸ்லாமியர்கள் படையெடுப்பின் போது திருவரங்கம் கோவிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களுக்கு பின்னர் திருமால் ஆணையால் 'சாந்து நாச்சியார்' எனும் துலுக்க நாச்சியார் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா... தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கொட்டகை மூகூர்த்தம் நிகழ்வுடன் தொடங்கியது....

எனவே, துலுக்கநாச்சியார் கதை இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் திருவரங்க கோவில் சிதைவு ஆகியவற்றின் நினைவில் இருந்து உருவாகியிருக்கும். துலுக்கநாச்சியார் கதை வழியாக தெய்வீகச்சாயலுடன் ஒரு உறவுமுறையை கற்பித்துக்கொண்டு, வலிமையான எதிரிகளான இஸ்லாமியர்களின் பகையுணர்ச்சியை தமிழ்நாட்டு வைணவம் மழுங்கச்செய்திருக்கிறது. இதுவே, வண்டியூரில் தன் காதலி துலுக்கநாச்சியார் வீட்டில் அழகர் இரவு தங்குவதாக கூறப்படும் கதைக்கு காரணம்.

சித்திரை தேரோட்டம்

சித்திரைத்திருவிழா அளிக்கும் அடிப்படை புரிதல்:-

மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா மதுரை நகருக்குள், வைகை நதிக்கு தென்புறத்திலேயே முடிந்து விடுகின்றன. அழகர் திருவிழா வைகை நதி படுகையிலும், நதிக்கு வடகரையிலுமே நடைபெறுகின்றன.

மீனாட்சி திருவிழாவில் நகர மக்கள் பெரும்பகுதியினரும், அழகர் விழாவில் நாட்டுப்புற மக்கள் பெருமளவிலும் பங்கேற்கின்றனர். முன்னது நகரமக்களின் விழா; பின்னது நாட்டுப்புற மக்களின் விழா.அழகர் விழாவில் பங்குபெறும் மக்களிடம் பக்தி உணர்வுடன் சுற்றுலா உணர்வும் நிறைந்து காணப்படுகிறது. எளிமையினையும், ஏழ்மையினையும் வெளிக்காட்டும் வாழ்க்கை இவர்களிடம் தெரிகிறது. இவ்வகையான மக்களே சித்திரைத் திருவிழாவுக்கு உயிர்ப்பூட்டுகிறார்கள். திருவிழா கூட்டத்தில் எங்கும் நிறைந்திருக்கிறார்கள்!

(குறிப்பு : இக்கட்டுரையில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பண்பாட்டு ஆய்வறிஞர் தொ.பரமசிவன் எழுதிய 'அழகர் கோயில்' எனும் ஆய்வு நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன)

First published:

Tags: Kallazhagar, Madurai, Madurai Chithirai Festival