Home /News /tamil-nadu /

"இந்த இடத்தைப் பார்த்தால் இறப்பதற்கும் ஆசை வரும்..." - மணக்கும் மயானத்தின் கதை!

"இந்த இடத்தைப் பார்த்தால் இறப்பதற்கும் ஆசை வரும்..." - மணக்கும் மயானத்தின் கதை!

அஞ்சலி மின் மயானம்

அஞ்சலி மின் மயானம்

ஒரு மயானம் இவ்வளவு அழகாக இருந்தால் இறப்பதற்கே ஆசை வரும் என நன்மாறன் நெகிழ்ந்த மதுரை அஞ்சலி மின் மயானம், மக்கள் சேவையில் 12 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதன் நிலைத்த அழகிற்கும், நேர்மைக்கும் யார் காரணம்? 

மதுரை கீரைத்துறை பகுதியில் அமைந்துள்ள மின் மயானம் கடந்த 2009 ஆம் ஆண்டு மாநகராட்சியால் கட்டப்பட்டது. அப்போது, தமிழகம் முழுவதும் பல்வேறு மயானங்களை ரோட்டரி சங்கங்கள் பராமரித்து வந்த நிலையில், இந்த மயானத்தை பராமரிக்க "ரோட்டரி மதுரை மிட் டவுன்" என்ற அமைப்பு முன்வந்தது.

முழு மனதுடன் மயானத்தை அவர்கள் வசம்  ஒப்படைத்தது மாநகராட்சி. முதல் வேலையாக இனி அது மயானம் என அழைக்கப்பட கூடாது என முடிவு செய்த ரோட்டரி அமைப்பு, அதற்கு "அஞ்சலி" என பெயரிட்டது.

பெயர் மாற்றத்தில் துவங்கிய சீர் திருத்தம், வளாகத்தை பசுமை சூழ் உலகாக மாற்றுவது, துக்கம் அனுசரிக்க வரும் மக்களை ஆற்றுப்படுத்த தேவையான கட்டமைப்பை உருவாக்குவது, ஊழியர்களிடம் நேர்மையை நீடிக்க வைப்பது, அவர்களுக்கான பரிபூரண பாதுகாப்பை உறுதி செய்வது என, ஒரு மயானத்தில் யாராலும் செய்ய இயலாது என நாம் நம்பும் அனைத்தையும் சில ஆண்டுகளிலேயே சத்தமில்லாமல் சாதித்துக் காட்டியது ரோட்டரி அமைப்பு.

2010 ஜனவரி 1 ஆம் தேதி துவங்கிய இந்த அரும்பணி 12 ஆண்டுகளை கடந்தும், முதல் நாளில் இருந்த அதே உறுதியுடனும், உற்சாகத்துடனும் இயங்கிக் கொண்டிருக்கிறது. கீரைத்துறை பகுதிவாசி செந்தில் பேசுகையில்,"சுடுகாடு என்றால் ஒரு பயமும், அங்கு பெண்கள் வரக்கூடாது என்ற கட்டுப்பாடும் இருப்பதை அறிந்திருப்போம். ஆனால், இங்கு சுடுகாடு என்ற உணர்வே இருக்காது.பூங்கா போல பெண்கள், குழந்தைகள் எல்லோரும் வந்து செல்கிறார்கள்.


சில சமூகத்தினர் உணவு சமைத்து வந்து தகனம் செய்த பின்னர் அமர்ந்து சாப்பிட்டு செல்கின்றனர். அதற்கு தேவையான வசதிகள் இங்கு சிறப்பாக செய்யப்பட்டு உள்ளன. இந்த வளாகம் மட்டுமல்ல மயானம் அமைந்துள்ள சாலை பகுதியையே மாற்றி விட்டனர். அருகிலுள்ள அங்கன்வாடி மையம், நியாய விலை கடை கட்டிடங்களையும் மேம்படுத்தி உள்ளனர்.

இது தவிர, உடல் தகனம் செய்ய பணம் இல்லாத நபர்களிடம் கட்டணம் வாங்காமலேயே இலவசமாக தகனம் செய்தும் தருகிறார்கள்" என்றார். அஞ்சலியில் உடல் தகனம் செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர் ராமகிருஷ்ணன் கூறுகையில்,"பல தலைமுறையாக எங்கள் குடும்பம் இந்த வேலை தான் செய்து கொண்டிருக்கிறது. நான் 12 வயதில் இருந்து இந்த வேலையை மேற்கொண்டு வருகிறேன்.

இங்கு வருவதற்கு முன்பு தத்தனேரி மயானத்தில் வேலை பார்த்தேன். அங்கு பல்வேறு போதை பழக்கங்களுக்கு நான் அடிமையாக இருந்தேன். இங்கு வந்த பின்பு என்னையும் ஒரு மனிதனாக மாற்றியது ரோட்டரி அமைப்பின் தலைவர் மதன் சார் தான். உடல் தகனம் செய்பவர்கள் போதையில் தான் இருப்பார்கள் என்பதற்கு விதிவிலக்காக நாங்கள் இங்கு சுத்தமாக இருக்கிறோம் .

கொரோனா காலங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 40 முதல் 50 உடல்கள் வரை தகனம் செய்த போதும் கூட எங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்து, என்ன ஆனாலும் நான் இருக்கிறேன் என தைரியம் அளித்தார். எல்லோரும் எங்களை ஒதுக்கி வைத்து பார்த்த போது, அவர் மட்டுமே எங்களை அவருடன் சேர்த்து வைத்து பார்த்தார்.காரணம், அவர் தன்னையே தலைமை வெட்டியான் என குறிப்பிடுபவர்" என உணர்ச்சி பொங்க கூறினார்.

அஞ்சலியின் "தலைமை வெட்டியான்" என தன்னை பெருமையுடன் அறிமுகம் செய்து கொள்ளும் ரோட்டரி அமைப்பின் தலைவர் மதன் பேசுகையில்"மயானத்தை நாங்கள் பராமரிக்க துவங்கிய போது உடலுக்கு இறுதி சடங்கு செய்ய ஒரே ஒரு மேடை மட்டுமே இருந்தது.கூடுதலாக சில உடல்கள் வந்தால் அதை தரையில் வைத்து இறுதி சடங்கு செய்யும் நிலை இருந்தது அதனால் உடனடியாக கூடுதலாக 3 இறுதி சடங்கு மேடைகளை அமைத்தோம். மக்கள் அமர்வதற்கு அதிகமான இருக்கை வசதிகளை செய்தோம்.

வளாகத்தில் நானூறுக்கும் மேற்பட்ட மரங்களை நட்டு சிறிய காடு ஒன்றையும் வளர்த்து வருகிறோம். இங்கு கட்டணமாக 1350 ரூபாய் மட்டுமே வாங்குகிறோம். 12 ஆண்டுகளாக அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட யாரிடமும், யாரும் வாங்கியதில்லை.

இப்படியான நேர்மையை தக்க வைக்க காரணம், ஊழியர்களுக்கு தேவையான சம்பளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருவதால் தான். இங்கு மொத்தம் 13 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் யாரும் 13 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் சம்பளம் வாங்குபவர்கள் அல்ல. உடல் தகனம் செய்யும் ஊழியர்களுக்கு 23 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ஊதியத்துடன், ஊக்கத்தொகையும் அளிக்கிறோம்.கொரோனா காலத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும் 1140 உடல்கள் தகனம் செய்யப்பட்டன; அந்த மாதம் ஊழியர்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இங்குள்ள நந்தவனத்தில் பல்வேறு பழ மரங்கள், காய்கறி செடிகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் பழங்களையும், காய்களையும் ஊழியர்களுக்கே கொடுத்து விடுகிறோம்.

ஆரம்பத்தில் ஊழியர்களுக்கு நாங்கள் அறிவுரை சொல்லிக் கொடுத்த நிலை மாறி இப்போது அவர்கள் எங்களுக்கு அறிவுரைகளை வழங்குகிறார்கள். உடல் தகனம் செய்யும் அறைக்குள் ஊனமுற்ற நபர்களால் செல்ல முடியவில்லை, அவர்களும் அங்கு செல்ல ஏதுவாக ஒரு சக்கர நாற்காலி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்களின் யோசனையின்படி அந்த வசதியும் ஏற்படுத்தி உள்ளோம்.

இதையும் படிங்க: மழையால் வரத்து குறைவு... மதுரை சந்தையில் கிலோ ரூ. 4 ஆயிரத்திற்கு மல்லிப்பூ விற்பனை


மதுரையின் எந்த பகுதியில் இறந்தாலும், அருகில் வேறு மயானம் இருந்தாலும் அஞ்சலியை தேடி வருகிறார்கள் மக்கள். அதற்கு காரணம் எங்களின் அணுகுமுறை. இறந்தவர்கள் யாராக இருந்தாலும் மருத்துவ சான்றிதழ் அவசியம்; உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற எந்த பாரபட்சமும் பார்க்காமல் வரிசைப்படியே உடல் தகனம் செய்யப்படுகிறது; அரசின் விதிகளை மீறியதாக இதுவரை ஒரு புகாரும் எங்கள் மீது வந்ததில்லை.

வளாகத்தின் தூய்மையை உணர்ந்து மக்களும் விதிகளை மீற மாட்டார்கள். மயானத்திற்குள் வாத்திய கருவிகளை ஒலிக்க மாட்டார்கள்; பூக்களை உதிர்க்க மாட்டார்கள்; முக்கியமாக மது அருந்த மாட்டார்கள்" என்றார்.

அஞ்சலியை பராமரிப்பது தங்களுக்கு சேவை அல்ல, அது கடமை என கூறும் மதன், இதற்கு அப்பாலும் சில சமூக பொறுப்புள்ள பணிகளை ரோட்டரி அமைப்பு செய்து வருவதாக கூறினார் மதன்.
"கஜா புயல் காலத்தில் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கிராமத்தில் 3.75 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஒன்றை கட்டிக் கொடுத்தோம். இப்படி ஒரு திட்டம் இருக்கிறது என்று சொன்னவுடன் அஞ்சலியின் ஊழியர்களும் அவர்களுடைய ஒருநாள் சம்பளத்தை மனமுவந்து கொடுத்தார்கள்.

மேலும், பள்ளி பொதுத்தேர்வு காலத்தில் மதுரையில் 4 மாநகராட்சி பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு மாநகராட்சியுடன் சேர்ந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கினோம்.
இதில், பழங்காநத்தம் பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அனைவரும் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றார். அதில், ஒரு மாணவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றார்" என பெருமையுடன் கூறினார்.

திருப்பூரில் இருந்து உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்க அஞ்சலிக்கு வந்திருந்த பார்த்திபன் கூறுகையில், ”இப்படி ஒரு மயானத்தை எந்த ஊரிலும் நான் பார்த்ததில்லை.

தூய்மையாகவும், நேர்த்தியாகவும் இது பராமரிக்கப்பட்டு வருகிறது. இறுதி சடங்கு செய்யும் மண்டபம், தியான மண்டபம் ஆகியவையும் சுத்தமாக உள்ளன. பசுமை சூழ்ந்த இந்த வளாகத்திற்கு உள்ளேயே கார் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் படிக்க: நரிக்குறவ தம்பதிக்கு பாத பூஜை செய்த போக்குவரத்து ஊழியர்கள் - வைரலாகும் வீடியோ


அஞ்சலி வளாகத்தில் இப்படி ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. "அஸ்தி பெறும் நபர் அஞ்சலி ஊழியருக்கு லஞ்சம் கொடுத்தால் உங்களால் ஊழியருக்கு வேலை இழக்க நேரிடும்" - இந்த வார்த்தைகளின் அர்த்தத்தையும், மேன்மையையும் வெறும் வார்த்தைகளாக அல்லாமல் வாழ்க்கையாகவே கொண்டுள்ள அஞ்சலி ஊழியர்கள் மதுரை மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கிறார்கள்.


மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், மதுரை கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நன்மாறன், அஞ்சலிக்கு முதன் முதலாக வருகை தந்த போது, "என்னய்யா மயானத்தை இவ்வளவு அழகா வச்சிருக்கீங்க... இப்படியெல்லாம் ஒரு மயானம் இருந்தா சாகுறதுக்கு கூட ஆசை வருமேய்யா..." என தெரிவித்திருந்தார்.

அவரின் ஆசிகளுக்கும், பாராட்டுக்களுக்கும் தகுதியான இடமாக அஞ்சலியை என்றென்றும் பராமரிப்போம் என புன்சிரிப்புடன் தெரிவித்து விட்டு ஊழியர்களுடன் ஊழியராக நடந்து சென்றார் "தலைமை வெட்டியான்" மதன்.
Published by:Murugesh M
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி