தென் இந்தியாவின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில்
மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2019ம் ஜனவரி 27 ஆம் தேதி "மதுரை எய்ம்ஸ்" மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர
மோடி அடிக்கல் நாட்டினார். புதிய திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடு ரூ.1977.80 கோடியாக உள்ள நிலையில், திட்ட அமலாக்க குழுவிற்கான பதவிகள் உருவாக்கப்பட்டு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் (நிர்வாகம்), கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடிக்கல் நாட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்தும் இதுவரை சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மட்டும் நடைபெற்றுள்ளது. கட்டுமான பணிகள் எதுவும் துவங்கப்படாமல் உள்ளது. ஜைக்கா நிறுவனம் சார்பில் வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்திருந்தது.
நடப்பு 2022-23 கல்வி ஆண்டிலேயே 50 மாணவர்களை சேர்த்து வகுப்புகளை துவக்க நிர்வாக குழு திட்டமிட்டிருந்த நிலையில், கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ஒப்பந்த அடிப்படையில் இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு 4 பேரும், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு 4 பேரும் என மொத்தம் 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் எம்.பி.பி.எஸ். மாணவர்களுக்கான முதல்கட்ட வகுப்புகள் துவங்கும் என அதன் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இந்த வகுப்புகள் துவங்க உள்ளதாகவும், வகுப்புகள் துவங்கிய பின்னர் மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை என்பதால் மாணவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளுடன் வர வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மாணவர் மற்றும் மாணவிகளுக்கு என தனித்தனியே ஹாஸ்டல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், மாணவர்கள் அனைவரும் அலுவல் உடையில் (Formal clothes) மட்டுமே வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் எனவும், கொரோனா பாதுகாப்பு விதிகள் அனைத்தையும் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் ஐந்தாம் தளத்தில் இயங்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான அலுவலகத்தில் வருகையை உறுதி செய்ய வேண்டும் எனவும், கூடுதல் விபரங்களை
https://jipmer.edu.in/aiims என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.