முதலமைச்சர் நிவாரண நிதிக்கு சேமிப்பு பணம் ரூ.10,000 அனுப்பிய 8 வயது இசையமைப்பாளர்

மதுரை சிறுவன்

கொரோனா கால நிவாரண நிதியாக தனது சேமிப்பு தொகை 10,000 ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி நெகிழ வைத்துள்ளார் மதுரையை சேர்ந்த 8 வயது சிறுவன் பிரணவ்.

  • Share this:
மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கோசாகுளத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இரும்பு கிரில் பட்டறை வைத்து நடத்தி வரும் இவரது 8 வயது மகன் பிரணவுக்கு 3 வயதில் இருந்தே இசையின் மேல் பேரார்வம். டிரம்ஸ், பியானோ, பறை, கர்நாட்டிக் ஆகிய இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்று வரும் இவர், சென்னையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தி வரும் இசைக் கல்லூரியில் பயின்று வருகிறார்.

மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவிலான பல்வேறு இசை போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ட்ரம்ஸ் இசைக்கும் போட்டியில் பங்கேற்று இரண்டாம் பரிசு வென்றார். அப்போது அவருக்கு 5,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அந்த தொகையுடன், அவருடைய சேமிப்பு பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து மொத்தம் 10,000 ரூபாயை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா நிவாரண நிதியாக அனுப்பியுள்ளார்.

கொரோனா பாதிப்பில் மக்கள் படும் சிரமங்களை பார்த்து, அதற்கு என்னால் ஆன பங்களிப்பை செய்ய நினைத்து இசைப் போட்டியில் வென்ற பணத்தையும், வீட்டில் உள்ளோர் அளித்த சேமிப்பு பணத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ளேன். இதே போல தங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களும் மக்களுக்கு செய்ய வேண்டும்" என மழலை குரலில், தன் மனதை வெளிப்படுத்தினார் பிரணவ்.

அவரது தாய் ராஜலட்சுமி கூறுகையில், "பள்ளி பாடங்களையும், இசையையும் ஒருசேர கற்று வந்த பிரணவ் தற்போது கொரோனா காலத்தில் ஆன்லைன் வாயிலாகவும் அதனை விடாமல்  தொடர்கிறார். கொரோனா காலத்தில் நாடு முழுவதும் இருக்கும் இக்கட்டான சூழல்களை ஊடகம், நாளிதழ்களில் பார்த்து எங்களைப் போலவே பிரணவும் வருத்தப்பட்டார். அவருடைய சேமிப்பு தொகையை முதல்வருக்கு அனுப்புவோமா என கேட்டதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார். ஆனால், தான் செய்தது எவ்வளவு பெரிய செயல் என்று அவருக்கு புரியவில்லை. ஆனால், தன்னால் முடிந்த உதவியை செய்துள்ளோம் என்கிற சந்தோஷம் அவருக்கு இருக்கிறது" என பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கொரோனா காலம் கற்பனை செய்யவியலா சோகத்தை ஒருபுறம் ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், இளம் தலைமுறை மீதான நம்பிக்கையை தளர விடாமல் இருக்கும்படியாக சில நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மதுரையில் இருந்து ஏற்கனவே ஒரு சிறுவன் அவரது சேமிப்பை முதல்வரிடம் நிவாரண நிதியாக அளித்துள்ள நிலையில், இப்போது அந்த பட்டியலில் பிரணவும் சேர்ந்து மதுரையின் மாண்பை அவர்கள் பங்கிற்கு நிரூபித்துள்ளார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: