Home /News /tamil-nadu /

கலைஞர் நினைவு நூலகம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

கலைஞர் நினைவு நூலகம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

கலைஞர் நினைவு நூலகம்

கலைஞர் நினைவு நூலகம்

மதுரையில் அமைக்கப்பட உள்ள கலைஞர் நினைவு நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பெயரில், மதுரையில் சர்வதேச தரத்தில் நூலகம் அமைக்கப்படும் என சட்டப் பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, மதுரை புதுநத்தம் சாலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 2.7 ஏக்கர் நிலத்தில் கலைஞர் நினைவு நூலகம் அமைய உள்ளது.

    சர்வதேச தரத்தில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கலைஞர் நினைவு நூலகம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ், மூர்த்தி, எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கலைஞர் நூலக சிறப்பம்சங்கள் :

    அடித்தளம் -2300 ச.மீட்டரில் அமைய உள்ளது.இதில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.  மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவு, மாநாட்டுக் கூடம் (250 நபர்கள்), சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு, பல்வகைப் பயன்பாட்டு அரங்கம், வலைதள கட்டுப்பாட்டு அறை மற்றும் உணவருந்தும் அறை அமையவுள்ளது.

    முதல் தளம் - 3110 ச.மீட்டரில் கலைஞர் பிரிவு, குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள். நாளிதழ்கள் பிரிவு, குழந்தைகளுக்கான நூலகப்பிரிவு, சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு அமையவுள்ளது.

    இரண்டாம் தளம் -3110 ச. மீட்டரில் - தமிழ் நூல்கள் பிரிவு அமையவுள்ளது. மூன்றாம் தளம் -2810 ச.மீட்டரில் ஆங்கில நூல்கள் பிரிவு (நூல் இரவல் பிரிவு) அமையவுள்ளது. நான்காம் தளம் -1990 ச.மீட்டரில் - ஆங்கில நூல்கள் பிரிவு (ஆங்கில குறிப்புதவி நூல்கள் பிரிவு) மற்றும் அமரும் வசதியுடன் கூடிய திறந்தவெளி மாடித்தோட்டம் அமைய உள்ளது.

    ஐந்தாம் தளம் -1990. ச.மீட்டரில் மினி நூலகம், அரிய நூல்கள் பிரிவு, ஆராய்ச்சி இதழ்கள் பிரிவு, போட்டித் தேர்வு நூல்கள் பிரிவு அமையவுள்ளது. ஆறாம் தளம் -1990 ச.மீ - நூல் பகுப்பாய்வு. நூற்பட்டி தயாரித்தல் பிரிவு, கூட்ட அரங்கு. நூலக ஸ்டுடியோ நூல் பாதுகாப்பு பிரிவு, மின்னுருவாக்கப் பிரிவு. நுண்படச்சுருள்/நுண்பட அட்டை அறை நூலக நிர்வாகப்பிரிவு, நூல் கொள்முதல் பிரிவு ஆகியவை அமைக்கப்பட உள்ளன.
    Published by:Vijay R
    First published:

    Tags: Madurai, MK Stalin

    அடுத்த செய்தி