• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "இது வீடா? இல்ல லாட்ஜ் அறையா?" : மதுரை குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டுமானத்தில் பயனாளிகள் குற்றச்சாட்டு

"இது வீடா? இல்ல லாட்ஜ் அறையா?" : மதுரை குடிசைமாற்று வாரிய குடியிருப்பு கட்டுமானத்தில் பயனாளிகள் குற்றச்சாட்டு

மதுரையில் குடிசை மாற்று வாரியம் கட்டும் குடியிருப்பில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக பயனாளிகள் புகார் தெரிவித்துள்ள நிலையில், அரசின் ஒப்புதலுடனேயே வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

  • Share this:
மதுரை ஆரப்பாளையம் மஞ்சள் மேடு பகுதியில் இருந்த குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த 300 குடும்பங்களுக்கு, மாற்று வீடுகள் கட்டிக் கொடுப்பதற்காக கடந்த 2019 ஆண்டு அங்கிருந்த குடும்பங்கள் காலி செய்யப்பட்டு பழைய வீடுகள் இடிக்கப்பட்டன.

மத்திய அரசின் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் கடந்த 2020 அக்டோபர் மாதம் முதல் புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் 4.80 கோடி ரூபாய், தமிழக அரசின் 29.24 கோடி ரூபாய் மற்றும் பயனாளிகளின் பகிர்வு தொகையான 3.20 கோடி ரூபாய் என மொத்தம் 37 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படும் வீடுகள், அடுத்தாண்டு ஜனவரியில் பயன்பாட்டிற்கு கொடுக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அந்த வீடுகள் கட்டுமானத்தில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக பயனாளிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். அங்கு குடியிருந்த 300 குடும்பங்களுக்கு புதிதாக 300 வீடுகள் கட்டுவதற்கு பதிலாக 320 வீடுகள் கட்டப்பட்டு வருவதாகவும், அதனால் 480 சதுர அடிக்கு கட்ட வேண்டிய வீடுகளின் அளவு குறைத்து 276 சதுர அடிக்கு மட்டுமே கட்டப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

குறைந்த அளவிலான வீடுகளுடன் கட்டுமான பணிகளை தொடர்ந்து நடத்த கூடாது என ஐம்பதுக்கும் மேற்பட்ட பயனானிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also read: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை.. பட்டாசு விற்பனை கடுமையாக பாதிப்பு..

பயனாளியும், ஆதி தமிழர் பேரவையின் மாவட்ட செயலாளருமான லட்சுமி சசிக்குமார் பேசுகையில், "பல தலைமுறைகளாக இந்த இடத்தில் வசித்து வந்தோம். எங்களுடைய வீடுகள் சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளதாக கூறி, அதை விட விசாலமாக 480 சதுர அடியில் நல்ல வீடுகள் கட்டிக் கொடுப்பதாக கூறி அதிகாரிகள் எங்களை இடத்தை காலி செய்ய சொன்னார்கள். அதன்படி 2019-ம் ஆண்டு எங்களுடைய வீடுகளை காலி செய்து கொடுத்து விட்டு மாற்று வீடுகளில் வசித்து வருகிறோம். அதன் பின்னர் தற்போது வரை எங்களுக்காக கட்டப்படும் இந்த வீடுகளை பார்ப்பதற்கு கூட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கட்டுமான இடத்தில் மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடும் எனக்கூறி எங்களை உள்ளே விடாமல் தடுத்து வைத்திருந்தனர். இன்று தான் கட்டுமான பணிகளை நேரில் பார்க்க முடிந்தது. நாங்கள் வசிக்க போகிற வீடுகளை ஆவலுடன் பார்க்கையில் தான் எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நாங்கள் ஏற்கனவே வசித்த வீட்டின் அளவை விட மிக குறைந்த அளவான 276 சதுர அடி பரப்பளவில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளை மாற்றி அமைத்து, கொடுத்த வாக்குறுதிப்படி கட்டிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் பெரும் போராட்டம் நடத்துவோம்" என தெரிவித்தார்.



பயனாளியும், அந்த குடியிருப்பின் சங்க தலைவருமான ஆறுமுகம் கூறுகையில்,"தற்காலிக மாற்று வீடுகளுக்கு மாறும் போது 8,000 ரூபாய் முன்பணம் தருவதாக சொன்னார்கள். அதுவும் தரவில்ல, மாதம் தோறும் தருவதாக சொன்ன வாடகை பணத்தையும் கொடுக்கவில்லை. தற்போது, எங்களுடைய சொந்த வீட்டையும் இழந்து, வாடகை வீட்டில் வசித்து அதற்கான வாடகையும் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றோம். இந்த கவலைகளிலேயே சிலர் உயிரிழந்தும் உள்ளனர். முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.

பயனாளி வீரம்மாள் பேசுகையில், "ஹால், சமையலறை, கழிப்பறையின் அளவுகள் கணிசமாக குறைக்கப்பட்டு உள்ளன. வீட்டிற்குள்  நடந்து செல்வதற்கு கூட வழியில்லாமல் மிக குறுகலாக சந்து போன்ற அமைப்பில் கட்டி உள்ளார்கள். கழிப்பறையில் ஒரு ஆள் உட்கார்ந்து எழுந்திருக்க கூட முடியாத அளவில் உள்ளது. ஒரு வாளி வைத்து குளிக்க கூட முடியாத அளவில் குளியலறை உள்ளது. ஒரு குடும்பம் வசிக்கும் வகையில் வீடுகள் கட்டப்படவில்லை, ஏதோ லாட்ஜ் அறை போல வீடுகளை கட்டி உள்ளார்கள். இடம் இருந்தும் இப்படி சிறிய அளவில் ஏன் வீடுகளை கட்டுகிறார்கள்? அதற்கு, எங்களுடைய பழைய வீடுகளே போதும் என தோன்றுகிறது. புதிதாக வீடுகள் கட்டி தருவதாக கூறி அதிகாரிகள் எங்களுக்கு மிகவும் சிரமம் அளித்து வருகிறார்கள்" என தெரிவித்தார்.



இந்த விவகாரங்கள் தொடர்பாக மதுரை சரக குடிசைப்பகுதி மாற்று வாரிய அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டோம். "மஞ்சள் மேடு பகுதியில் ஏற்கனவே இருந்த குடியிருப்பு 1987 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அது சேதமடைந்து விட்டதனால் தற்போது புதிய வீடுகளை கட்டிக் கொடுக்கிறோம். ஏற்கனவே, தரை தளம் மற்றும் மேலே இரண்டு தளங்கள் மட்டுமே இருந்தன, தற்போது தரை தளம் மற்றும் அதற்கு மேல் மூன்று தளங்கள் கட்டப்படுகின்றன. நான்கு தளங்களுக்கான வீடுகளின் அமைப்பின்படி 320 வீடுகள் இயல்பாகவே அமைந்துள்ளன. அவைகளை ரேஷன் கடை, சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் போன்ற பொது பயன்பாட்டிற்கோ அல்லது, மக்களின் பயன்பாட்டிற்கோ கொடுக்கப்படும்.

முதலில் இருந்த வீட்டின் அளவு 172 சதுர அடி தான். இப்போது கட்டப்படும் அளவு 256 சதுர அடி. முதலில் ஒரு ஹால், ஒரு சமையலறை, கழிப்பறை & குளியலறை சேர்ந்து இருந்ததால் அளவு பெரிதாக தெரிந்துள்ளது. இப்போது, ஹால், படுக்கையறை, சமையலறை, கழிப்பறை மற்றும் குளியலறை தனித்தனியாக உள்ளன அதனால் அளவு சிறியதாக தெரிகிறது. இந்த கட்டுமானங்கள் முழுமையாக அரசின் ஒப்புதலுக்கு பிறகே கட்டப்படுகின்றன.மாற்று வீடுகளுக்கு மாறும் போது சில இடங்களில் வாடகை வீட்டிற்கான உதவி தொகைகளை வழங்கப்பட்டு உள்ளன. ஆனால், மஞ்சள் மேடு திட்டத்தில் அவ்வாறு கொடுக்கவில்லை" என தெரிவித்தனர்.



புதிய வீடுகளை விட பழைய வீடுகள் விசாலமாக தெரிந்திருக்கலாம், ஆனால் அவைகளை நவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படி கட்டுவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், நவீனம் என்ற பெயரில் வசிக்க வழியின்றி வீடுகள் கட்டுவதில் என்ன பயன் என பயனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்.குடிசை மாற்று வாரிய வீடுகளின் கட்டமைப்பில் பயனாளிகளின் கருத்துக்களை கேட்டு கட்டுவதில் அரசு கவனம் செலுத்துமா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: