மதுரையில் மறைக்கப்பட்டதா கொரோனா மரணங்கள்? உண்மை தகவல்களை வெளியிட்டார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கொரோனா மரணங்கள் தொடர்பான முரண்பாடான தகவல்கள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்று கூறியதுடன், இது தொடர்ந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.

  • Share this:
மதுரையில் கொரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையின் கொரோனா பாதிப்பின் நிலவரங்களை வெளிப்படையாக தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுகாதாரத்துறை அறிக்கையின்படி மதுரை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு தினமும் ஆயிரத்தை கடந்தும், இறப்பு எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலும் பதிவாகி வருகிறது. ஆனால், மதுரையில் உள்ள தத்தனேரி மற்றும் மூலக்கரை ஆகிய இரண்டு மின்மயான வளாகங்களில் இயல்பை விட அதிகமான பிணங்கள் தினமும் எரியூட்டப் படுவதாக புகார்கள் குவிந்தன.

கடந்த மே 14 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் மதுரை மாவட்டத்தில் கொரோனா மரணங்கள் மறைக்கப்டுவதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.

இவர்களின் குற்றச்சாட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியும் வழிமொழிந்து கொரோனா மரணங்கள் தொடர்பான முரண்பாடான தகவல்கள் உடனடியாக சரி செய்யப்பட வேண்டும் என்று கூறியதுடன், இது தொடர்ந்தால் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.இந்நிலையில், நிதி அமைச்சரும், மதுரை மாவட்ட கொரோனா தடுப்பு பணிகளின் பொறுப்பாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் மதுரையின் கொரோனா இறப்பு விகிதங்கள் குறித்தும், எரியூட்டப்பட்ட உடல்களின் எண்ணிக்கை குறித்தும் பகிர்ந்துள்ளார்.

மதுரையில் கொரோனா பாதிப்பால் மே 15 அன்று இறந்தவர்கள் 17 பேர் என் சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிட்ட நிலையில்,மொத்தம் 75 உடல்கள் நேற்று மதுரையிலுள்ள இரண்டு மின் மயான வளாகங்களில் எரியூட்டப்பட்டு உள்ளன என்று இவரது அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும், மதுரை மாவட்டத்தின் இறப்பு விகிதம் கடந்த ஆண்டு 2.50 சதவிகிதமாக இருந்த நிலையில், தற்போது அது 1.44% சதவிகிதமாக உள்ளது என்பதும் தெரிய வருகிறது.

நிதி அமைச்சரின் இந்த பதிவுக்கு டிவிட்டரில் பலரும் வரவேற்பு தெரிவித்து, தமிழகம் முழுமைக்கும் இதே போன்று வெளிப்படையான விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: