போடியில் பெண் வனக்காவலரை கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் ஆயுதப்படை காவலரை போலீஸார் கைது செய்தனர்.
மதுரை சதாசிவம் நகரில் உள்ள திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சரண்யா (27). தேனி வனச்சரகத்தில் வனக்காவலராக பணியாற்றி வந்த இவருக்கு பொன்பாண்டி என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 4வருடங்களுக்கு முன் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவர் பொன் பாண்டி உயிரிழந்தார். இவர்களது இரண்டு குழந்தைகளும் மதுரையில் உள்ள சரண்யாவின் பெற்றோரிடம் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் போடியில் வனச்சரக அலுவலகம் அருகே உள்ள தனிநபர் வீட்டில் தனியே வசித்து வந்த சரண்யாவை தான் கொலை செய்ததாக மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த திருமுருகன்(27) என்பவர் இன்று அதிகாலை மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இவர் மதுரை ஆயுதப்படை காவல் பிரிவில் சிறப்பு காவலராக பணியாற்றி வருகின்றார். கீரைத்துறை போலீஸார் தகவலின் பேரில், போடியில் சரண்யா வசித்து வந்த வீட்டிற்கு சென்ற போடி காவல்துறையினர், சரண்யாவின் பிரேதத்தை கைப்பற்றினர்.
கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினரின் விசாரணையில், சரண்யாவும் - திருமுருகனும் மதுரையில் வசித்து வந்த போது இருவரும் காவல்துறையில் சேருவதற்காக பயிற்சி வகுப்புக்கு சென்றதில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த திருமுருகனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமான பிறகும் சரண்யாவுடனான பழக்கம் நீடித்துள்ளது. அதன் காரணமாக திருமுருகனின் மனைவி பிரிந்து சென்று விட்டதால், அடிக்கடி போடிக்கு வந்து சரண்யா வீட்டில் திருமுருகன் தங்கிவிட்டு செல்வதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் நேற்று இரவிலும் திருமுருகன் வழக்கம்போல் போடி வந்துள்ளார். அவர்களுக்குள் திருமணம் செய்வது தொடர்பாக பேசியபோது இருவருக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதில் திருமுருகன் சரண்யாவின் கழுத்தை நெறித்து கொலை செய்திருப்பதாக தெரியவந்துள்ளது. திருமுருகன் பணிபுரிந்து வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போடி நகர் காவல்துறையினர் திருமுருகனை கைது செய்ய மதுரை விரைந்துள்ளனர்.
செய்தியாளர் : பழனிகுமார்
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.