Home /News /tamil-nadu /

"நீ செத்துப் போயிருக்கலாம்னு திட்டுறாங்கயா..." - முதல்வரிடம் உதவியை எதிர்பார்க்கும் பணியின்போது கையை இழந்த தூய்மைப் பணியாளர்

"நீ செத்துப் போயிருக்கலாம்னு திட்டுறாங்கயா..." - முதல்வரிடம் உதவியை எதிர்பார்க்கும் பணியின்போது கையை இழந்த தூய்மைப் பணியாளர்

தூய்மைப் பணியாளர் ஸ்டாலின்

தூய்மைப் பணியாளர் ஸ்டாலின்

மதுரை மாநகராட்சியில் கொரோனா கால முன்களப் பணியின்போது ஏற்பட்ட மின் விபத்தில் ஒரு கையை இழந்த தூய்மை பணியாளர் ஸ்டாலினுக்கு உரிய நிவாரணமும், வேலையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
மதுரை விளாச்சேரி பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஸ்டாலின், மாநகராட்சியில் 14 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக இருந்து வருகிறார். கடந்த மே 26ம் தேதி, மாநகராட்சி 100-வது வார்டில் தூய்மைப் பணி செய்து கொண்டிருந்தபோது மின் வயரில் உரசி விபத்து ஏற்பட்டது.

அந்த விபத்தில், அவரது இடது கை முழுமையாக எரிந்த நிலையில், இரண்டு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், வலது கையின் முழங்கைக்கு கீழ் உள்ள பகுதி வெட்டி எடுக்கப்பபட்டுள்ளது.

ஸ்டாலினின் 13 ஆயிரம் ரூபாய் சொற்ப ஊதியத்தை கொண்டு அவரது மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் மற்றும் பேர குழந்தைகள் என 10 பேர் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த விபத்தால் தனது வேலையை இழந்துள்ள ஸ்டாலின், உணவுக்கும், குடும்பத்திற்கும், மருத்துவச் செலவிற்கும் வழியின்றி தவித்து வருகிறார்.

அரைகுறையாக கட்டியும் கட்டாமலும் அவலமாக நிற்கும் ஒரு வீட்டில் வசித்து வரும் ஸ்டாலினை நேரில் சந்தித்தபோது, ’கண்கள் கலங்கிய நிலையில், நா தழுதழுக்க நம்மிடம் பேசினார்.
அப்போது அவர், ‘விபத்து நடந்த அன்று, 100 வது வார்டில் வாய்க்கால் ஓரம் கிடந்த மர கட்டைகளை அகற்றி குப்பை தொட்டியில் போடும் பணியை செய்து கொண்டிருந்தேன். அப்போது மின் வயரில் உரசி திடீரென ஷாக் அடித்து விபத்து ஏற்பட்டது. செய்வதறியாது ஓலமிட்டு அழுதேன். ஏற்கனவே, இதே பணியை செய்த என் மைத்துனனும் இதே போல் இறந்திருந்த நிலையில், அவன் தான் என்னை அழைக்கிறானோ என்கிற பயம் கூட அந்த நொடியில் வந்து போனது.

பாதி உடல் எரிந்த நிலையில், என்னை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க மேஸ்திரி முயன்ற போது, ஆம்புலன்சில் ஏற்றி அனுப்புங்கள். அப்போது தான் எனக்கு மரணமே ஏற்பட்டாலும் அது கணக்கில் வரும். என் குடும்பத்திற்கு உரிய நிவாரணமாவது கிடைக்கும் எனக்கூறிய பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த விபத்தால் ஒரு கையை இழந்து வேலை இல்லாமல் வீட்டில் உள்ளேன். வேலையில் இருந்த வரை மாதம் தோறும் 15ஆம் தேதிக்கு மேல் தான் சம்பளம் வரும். என் வங்கி கணக்கு புத்தகம் கூட கடன் கொடுத்த நபரிடம் இருப்பதால், சம்பளத்தை கூட முழுதாக வீட்டிற்கு கொண்டு வந்ததில்லை. இப்போது சில மாதங்களாக கடனும் கட்ட முடியாமல் வட்டி தொகையும் அதிகரித்து வருகிறது. கடன் கொடுத்தவர்கள் சில நேரம், "நீ செத்து கூட போயிருக்கலாம்யா... உயிரோட இருந்து கடனும் கட்ட முடியாம, வீட்டுக்கும் செலவு வச்சுக்கிட்டு இருக்க" என்றெல்லாம் திட்டுவார்கள்.

பல ஆண்டுகளாக கட்ட முடியாமல் பாதியில் நிற்கும் என்னுடைய இந்த வீட்டை ஆயுள் முடிவதற்குள் கட்டி முடித்து விட வேண்டும் என்பது தான் எனக்கிருக்கும் ஒரே ஆசை. முதலமைச்சர் ஸ்டாலின் பெயரைத் தான் நானும் கொண்டுள்ளேன். எனவே, அவர் எனக்கு கருணை காட்டி மாற்று வேலையும், உரிய நிவாரணமாக 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும்" என்று கண்ணீர் கசிய கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது மனைவி சந்திரா பேசுகையில்,’என் கணவருக்கு வேலை போனதால், என் மகன் நாகலிங்கம் அவருக்கு பதிலாக அந்த வேலையை செய்து வருகிறார். குடும்பத்திற்கு கிடைத்து வந்த இரண்டு சம்பளம் இப்போது ஒரு சம்பளமாகி விட்டது. எனவே மாநகராட்சி நிர்வாகம் என் மகனது வேலையை நிரந்தரம் செய்ய வேண்டும். என் கணவருக்கு அவரால் செய்ய முடிகிற ஏதேனும் ஒரு மாற்று வேலையை ஏற்படுத்தி வாய்ப்பு வழங்கி எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித நிவாரணமும் ஸ்டாலினுக்கு வழங்கப்படாத நிலையில், சக பணியாளர்கள் இணைந்து அவர்களால் முடிந்த உதவி தொகையை மட்டும் வழங்கி உள்ளனர். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசனும், ஸ்டாலினை நேரில் வந்து சந்தித்து அவருடைய நிலையை அறிந்து, அவருக்கு மாற்று வேலையும், நிவாரணமும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆணையருக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை பலனில்லை. மாநகராட்சி ஆணையர் கார்த்திக்கேயனிடம் இது குறித்து கேட்டதற்கு, "அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது" என மட்டும் பதிலளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒற்றைக்கையுடன் வறுமையை எதிர்த்து போராடி வரும் ஸ்டாலினின் நிலையுணர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Published by:Karthick S
First published:

Tags: Madurai, MKStalin

அடுத்த செய்தி