மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுக கூறுவது பிரதமர் மனதை காயப்படுத்தி இருக்கும் - செல்லூர் ராஜூ
மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுக கூறுவது பிரதமர் மனதை காயப்படுத்தி இருக்கும் - செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ
Sellur Raju | திமுக மத்திய அரசை ஒன்றிய அரசு என கூறி சிறுமைப்படுத்தி வருவது பிரதமர் மனதை காயப்படுத்தி இருக்கும் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாடக்குளம் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தை திறந்து வைத்த பின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது, ரவுடிகளுக்கு சுதந்திரம் கிடைக்கிறது, திமுகவின் முக்கிய நிர்வாகிகளே ரவுடிகள் பட்டியலில் உள்ளதால் ரவுடிகளை கைது செய்ய காவல்துறை அச்சப்படுகிறது என்று தெரிவித்தார்.
மேலும், கைப்பேசி பயன்பாடு அதிகரித்து வருவதன் காரணமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. கைப்பேசியில் விரும்பத்தகாத காட்சிகள் வருவதால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக அமைச்சர்கள் மத்திய அரசை ஒன்றிய அரசு என சொல்லி சிறுமைப்படுத்தி வருவது பிரதமர் மனதை காயப்படுத்தி இருக்கும். தமிழக மக்களின் நலனுக்காக அதிகமான கோரிக்கைகளுடன் பிரதமரை சந்திக்கும் டெல்லி பயணத்தில் முதல்வர் வெற்றி பெற்று வர வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதி பெயரை கூறி திட்டியதாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட ராஜகண்ணப்பன் குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜூஅமைச்சரை ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டது தண்டனை ஆகாது என தெரிவித்தார். தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு மத்திய மாநில அரசுகளை கண்டித்து அதிமுக வலுவான அழுத்தம் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
-செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.