சொத்து வரி உயர்வை எதிர்த்து ஏப்ரல் 5 ம் தேதி மதுரையில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் அதிமுக அலுவலகத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சொத்துவரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்த அரசு திமுக. வாக்களித்த மக்களுக்கு இந்தளவுக்கு யாரும் துரோகம் செய்தது கிடையாது. சொத்து வரி உயர்வை கண்டித்து, ஏப்ரல் 5 ம் தேதி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் , தற்போதைய திமுக அரசால் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தற்போது திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகிறது.கடந்த 11 மாத காலமாக மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. சொத்து வரி உயர்வு குறித்து, தி.மு.க அமைச்சர் நேரு, கூறுகையில் பிப்ரவரி 31 ம் தேதிக்குள், சொத்து வரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசு கூறியதாக அமைச்சர் கூறினார். எந்த காலத்திலாவது பிப்ரவரி 31 ம் தேதி வந்துள்ளதா என கேள்வி எழுப்பினார்.
மேலும் பத்தாண்டு காலம் அதிமுக நடத்தியது ராமராஜ்ஜியம். அதிமுக ஆட்சியில் , அனைத்து மக்களும் சுபிட்சமாக நலமாக வாழ்ந்தார்கள் அதுவே ராமராஜ்ஜியம். தற்போதைய திமுக ஆட்சியால் , தமிழகம் கலியுகமாக மாறிவிட்டது. விரைவில் தமிழகம் ராம ராஜ்ஜியமாக மாறும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராமராஜ்ஜியத்தை கொடுக்கும்.
ALSO READ | சாக்கு இல்லை.. குவியல் குவியலாக நெல்மூட்டைகள் தேக்கம் - வேதனையில் நெல்லை சாலையில் கொட்டிய விவசாயி
வருகிற நாடாளுமன்ற தேர்தலில், டெல்லியில் திமுக தலைவர் மு.கஸ்டாலின் பிரதான இடத்தை பிடிப்பார் என்பது பகல் கனவு . தமிழகத்திலேயே தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு என பல பரிசுகள் தமிழக மக்களுக்கு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் பிரதான இடத்தை பிடிப்பது என்பது கனவு காண்பது போன்றது. சொத்து வரி உயர்வை எதிர்த்து மதுரையில் பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று கூறினார்.
செய்தியாளர்: சிவக்குமார் ( திருமங்கலம்)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.