Home /News /tamil-nadu /

மதுரையில் ஒரே அரசுப் பள்ளியிலிருந்து 5 மருத்துவர்கள்: ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நீட் தேர்வில் சாதித்த ஏழைவீட்டுப் பிள்ளைகள்

மதுரையில் ஒரே அரசுப் பள்ளியிலிருந்து 5 மருத்துவர்கள்: ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் நீட் தேர்வில் சாதித்த ஏழைவீட்டுப் பிள்ளைகள்

மதுரை மாணவர்கள்

மதுரை மாணவர்கள்

மதுரை அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவிகள் 5 பேர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டீன் கீழ் மருத்துவ இடங்களைக் கைப்பற்றி சாதித்துள்ளனர்.

மதுரை அவ்வை மாநகராட்சி பள்ளி மாணவிகள் 5 பேர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டீன் கீழ் மருத்துவ இடங்களை கைப்பற்றி சாதித்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் இந்தாண்டு நீட் தேர்வு எழுதிய நிலையில், அதில் மொத்தம் 182 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில், 73 மாணவர்கள் 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் கீழ் தகுதி பெற்றிருந்த நிலையில், முதற்கட்ட மருத்துவ கலந்தாய்வில் 17 மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைத்துள்ளன.

மதுரை மாநகராட்சி பள்ளிகளான அவ்வை மற்றும் ஈ.வெ.ரா பள்ளிகளை சேர்ந்த 8 மாணவிகள் மருத்துவ இடங்களை பெற்றுள்ளனர். இதில், கீழஆவணி மூல வீதியில் உள்ள அவ்வை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மட்டும் பிரியங்கா, தீபா ஶ்ரீ, வினோதினி, சங்கீதா, கௌசல்யா ஆகிய 5 மாணவிகள் மருத்துவ இடங்களை கைப்பற்றி பெருமை சேர்த்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி பள்ளிகளின் நீட் திட்ட ஒருங்கிணைப்பாளரும், அவ்வை பள்ளியின் உதவி தலைமை ஆசிரியருமான பாலுமணி கூறுகையில், ’மாநகராட்சி பள்ளிகளில் 10 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவிகளை அவ்வை பள்ளியில் மையம் அமைத்து இரண்டு ஆண்டுகளாக நீட் பயிற்சி வழங்கினோம்.

பயிற்சியின் போது மாணவிகளின் போக்குவரத்து, நூல்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் மாநகராட்சியே ஏற்றுகொண்டதால், மாணவிகளின் பொருளாதார சுமை பெருமளவு குறைந்தது. மேலும், தனியார் ஆசிரியர்களையும் அழைத்து சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வாயிலாகவும் பயிற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன.

மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக, அவ்வை பள்ளியில் மட்டும் 5 மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில், 4 மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ் இடங்களும், 1 மாணவிக்கு பி.டி.எஸ். இடமும் கிடைத்துள்ளது.

நீட் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு மதுரை மாநகராட்சி முன்னாள் ஆணையர் விசாகன் வாரம் ஒரு நாள் நேரில் வந்து ஊக்கம் அளித்தார். மாணவிகளுக்கு, நீட் தேர்வு குறித்த பயத்தை குறைக்கும் வகையில் பாடங்களை எளிமையாக்கி வகுப்புகள் எடுக்கப்பட்டன. இவைகளே மாணவிகளுக்கு அவர்களின் மருத்துவ கனவு குறித்த நம்பிக்கையை அதிகரித்தன" என்றார்.

414 மதிப்பெண் பெற்று மதுரை மாவட்டத்தில் முதலிடத்தை  பிடித்த பிரியங்கா பேசுகையில், "7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் மூலமாக தேர்ச்சி பெற்றதால், மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மாவட்டத்தில் முதலிடம் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன்.

அப்பா கூலி வேலை செய்தாலும், பயிற்சி காலத்தில் எங்களுடைய அடிப்படை தேவைகள் அனைத்தையும் ஆசிரியர்கள் கவனித்துக் கொண்டார்கள். என்னை போலவே 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வாய்ப்பை பயன்படுத்தி இன்னும் பல மாநகராட்சி பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும்" என்றார்.

மற்றொரு மாணவி சங்கீதா பேசுகையில், "தமிழ்நாடு பாடத் திட்டத்தில் பயின்ற எங்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி குழுவின் நூல்களை பயில்கையில் முதலில் மிக சிரமமாக இருந்தது. பின்னர், ஆசிரியர்களின் தொடர் பயிற்சிகள் மற்றும் மாதிரி தேர்வுகளால் நீட் தேர்வில் வென்றேன்.

மருத்துவர் ஆக வேண்டும் என்பது தான் என் வாழ்க்கையின் கனவு. அரசு பள்ளியில் பயிலும் உன்னால் மருத்துவராக ஆக முடியாது என நிறைய பேர் விமர்சித்தார்கள். அவர்களின் இகழ்ச்சிகளை கடந்து வென்று காட்ட வேண்டும் என முயன்று, அவர்களுடைய வார்த்தைகளை பொய்யாக்கி உள்ளேன்." என உணர்ச்சி பொங்க கூறினார்.

சங்கீதாவின் தந்தை பாஸ்கரன் கூறுகையில், ’தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் கூலி வேலை பார்க்கிறேன். தினக்கூலியின் மூலமாக கடன் வாங்கி தான் என்னுடைய மற்ற இரண்டு பிள்ளைகளை படிக்க வைத்தேன். அந்த கடன்களை கட்டக்கூட வழியின்றி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், என் மகள் இந்த தேர்வில் வென்று விட வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 24,418 பேருக்கு கொரோனா பாதிப்பு



நம்ம வீட்டில் ஒரு மருத்துவர் வர வேண்டும் என மிக எதிர்பார்ப்புடன் இருந்தோம். எங்கள் எதிர்பார்ப்பை இன்று என் மகள் நிறைவேற்றி விட்டாள்" என பெருமை பொங்க தெரிவித்தார்.


7.5 சதவிகித உள் ஒதுக்கீடு நடைமுறையால் தான் தங்களை போன்ற ஏழைகளின் மருத்துவக்கனவு நிறைவேறி உள்ளதாக மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் பெருமை கலந்த நன்றியை அரசுக்கு தெரிவிக்கின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி