• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Exclusive: இருளில் மதுரை புதுமண்டபம்.. இந்து சமய அறநிலையத்துறைக்கு வியாபாரிகள் கண்ணீர் கேள்வி..

Exclusive: இருளில் மதுரை புதுமண்டபம்.. இந்து சமய அறநிலையத்துறைக்கு வியாபாரிகள் கண்ணீர் கேள்வி..

மதுரை புதுமண்டபம்

மதுரை புதுமண்டபம்

புது மண்டப வியாபாரிகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளனர்.

  • Share this:
மதுரை புதுமண்டபத்தில் இயங்கி வரும் கடைகளை இடமாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைப்பு அளித்தும் முன்னறிவிப்பின்றி கடைகளுக்கான மின் இணைப்பை துண்டித்து கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

உலகின் முதல் ஷாப்பிங் மால் என அழைக்கப்படும் மதுரை புதுமண்டபத்தில் சுமார் 200 ஆண்டுகள் பாரம்பரியம் நிறைந்த பூஜை பொருட்கள் விற்கும் கடைகள், அலங்கார பொருட்கள் விற்கும் கடைகள், புத்தக கடைகள், பாத்திர கடைகள், தையல் கடைகள் மற்றும் பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் இயங்கி வருகின்றன.

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த மண்டபத்தில் கலை நயமிக்க சிலைகள், சிற்பங்கள், நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் உள்ளமையால் இதனை காட்சி பொருளாக மாற்றி பாதுகாக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவெடுத்தது.
அது தொடர்பாக அங்குள்ள வியாபாரிகளிடம் ஆலோசித்து, கடைகள் அனைத்தையும் புதுமண்டபம் அருகில் உள்ள குன்னத்தூர் சத்திரத்தில் இடமாற்றம் இறுதி செய்யப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 7.91 கோடி ரூபாய் மதிப்பில் அங்கு இரண்டு தளங்களாக கடைகள் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு (2021) நவம்பர் மாதத்திற்குள் இடமாற்றம் செய்ய வியாபாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

2018 செப்டம்பர் மாதம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வீர வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின்னர் 7 மாதங்கள் புதுமண்டபத்தில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும், கொரோனா ஊரடங்கு காரணமாக ஓராண்டு காலம் கடைகள் அடைக்கப்பட்டு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வந்த வியாபாரிகளுக்கு, தற்போது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் எதிர்பாராத அதிர்ச்சியை அளித்துள்ளனர்.

Also read: தங்கள் கிராமத்தில் மதுக்கடை அமைக்க வேண்டும் என பெண்கள் போராட்டம் – விசித்திரமான காரணம்..

கடந்த திங்கள் கிழமை (நவ.8) முதல் புது மண்டபத்தில் இருந்த கடைகளுக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து வழங்கப்பட்ட மின் இணைப்பை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி துண்டித்து உள்ளனர்.

வியாபாரிகள்...


வியாபாரிகள் சங்க தலைவர் முத்துப்பாண்டி கூறுகையில்,
"புது மண்டபத்தில் உள்ள கடைகளை காலி செய்வது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. இன்னும் 36 கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படவில்லை. இருந்தும் முழு மனதுடன் இடம் மாறுவதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கும் நிலையிலும், எங்களை ஏன் இவ்வளவு நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும்?
எங்களுக்கு இவ்வளவு பெரிய தண்டனை ஏன் அளிக்க வேண்டும்?
புதிய இடத்தில் மின்சார வசதி முறையாக ஏற்படுத்தி தராத நிலையில், எங்களை மகிழ்ச்சியாக இடமாற்றம் செய்து வைக்க வேண்டியது அரசின் தார்மீக கடமை.

மின்சார துண்டிப்பு என்பது எங்களுக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது. கடையின் வாடகை தொகைகளை சரியாக செலுத்தி உள்ளோம். மேலும், புதிய கடைக்கான முன் வைப்பு தொகையை முழுமையாக செலுத்தி உள்ளோம். எனவே அதிகாரிகள் எங்களை கருணையுடன் நடத்த வேண்டும்" என்றார்.

புது மண்டப கடைகள்


வியாபாரி குமரன் கூறுகையில், "குன்னத்தூர் சத்திரத்தில் கட்டிடம் மட்டுமே கட்டப்பட்டு உள்ளது. அடிப்படை மின் வசதி ஏற்படுத்தி தரப்படவில்லை. இப்போது திடீரென காலி செய்ய சொல்லி இருந்த மின் இணைப்பை துண்டித்து உள்ளார்கள். தினமும் எங்களுக்கு கிடைக்கும் சில நூறுகளை வைத்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறோம். அதில் தான் வாங்கிய கடனுக்கான தவணை தொகையை கட்ட வேண்டும். இந்த சூழலில் திடீரென மின் இணைப்பை துண்டித்தால் என்ன செய்வது?

Also read:  கடந்த ஆண்டு வணிகர்கள் அதிகளவில் தற்கொலை – NCRB அதிர்ச்சி ரிப்போர்ட்

இங்குள்ள எல்லோரும் நகையை அடமானம் வைத்து, கடன் வாங்கி புதிய கடைக்கான தொகையை கட்டியுள்ளோம். நான் என் மனைவியின் நகையை அடமானம் வைத்து பணம் செலுத்தியுள்ளேன். இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் எங்களுடைய கடமைகளை நாங்கள் சரியாக செய்துள்ளோம். ஆனால், அதிகாரிகள் அவர்களுடைய வேலைகளை சரியாக செய்யாமல் எங்களை அவதிக்கு உள்ளாக்குவது ஏன்?

நாங்கள் இங்கு நேற்று வந்தவர்கள் அல்ல, பல தலைமுறைகளாக வசிப்பவர்கள். இது எங்களுடைய அடையாளம். இதை விட்டுப்போவதே எங்களுக்கு பெரும் வேதனையான விஷயம். இந்த நிலையில், இவ்வளவு அவமானத்துடன் வெளியே போவது எங்களுக்கு இன்னும் வேதனையாக உள்ளது. கழுத்தை பிடித்து வெளியே தள்ளுவது போல தள்ளுகிறார்கள்" என தெரிவித்தார்.

மற்றொரு வியாபாரி முருகன் பேசுகையில்,  "நான்கு தலைமுறையாக வசித்து வந்துள்ளார். திடீரென கரண்ட்டை கட் பண்ணி விட்டு வெளியே போக சொல்கிறார்கள். குன்னத்தூர் சத்திரத்தில் எங்களுக்கு எந்த வசதியும் கிடையாது. இருந்தும் வேறு வழியில்லாமல் செல்கிறோம். மக்கள் இங்கு போல அங்கு பொருட்கள் வாங்க வர மாட்டார்கள். விருப்பமே இல்லாமல் செல்கிறோம்.
தாய் மீனாட்சி பார்த்துக் கொள்ளுவாள் என நம்புகிறோம். எங்களை இப்படியெல்லாம் சிரமத்திற்கு உட்படுத்தினால் மருந்தை குடித்து சாவதை தவிர வேறு வழியில்லை" என கண்கள் கலங்க கூறினார்.

Also read:  தேவருக்கு அவமதிப்பு.. நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைப்பவருக்கு ரொக்கப்பரிசு – அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது தொடர்பாக மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினரிடம் கேட்டதற்கு, மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசி ஏற்படுத்திக் கொள்ளுமாறும், மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு மின்துறை அதிகாரிகளிடம் பேசி ஏற்பாடு செய்து கொள்ளும்படி கூறியதாகவும் வியாபாரிகள் குழப்பத்துடன் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரையிடம் விளக்கம் கேட்டோம்.
"மாற்று இடத்திற்கு கடைகளை இடமாற்றம் செய்வதற்கான உத்தரவு வழங்கி ஒரு மாதம் ஆகி விட்டது. ஒரு மாதமாக அவர்கள் இடமாற்றம் செய்வதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மின் இணைப்பு வேண்டுமெனில் அவர்கள் தான் கேட்க வேண்டும்.
குன்னத்தூர் சத்திரத்தில் மின் இணைப்பு மட்டும் தான் இல்லை. ஆனால், கடைகள் அமைப்பதற்கான பிற பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அவர்களுக்கு இணைப்பு வழங்க பிற துறை அதிகாரிகளுக்கு நாங்கள் உத்தரவிட முடியாது.

புது மண்டபத்தில் உள்ள சேதமடைந்த சிலைகளை படங்கள் எடுத்து புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு கடைகள் இடைஞ்சலாக உள்ளன. எனவே தான் இடமாற்றம் செய்ய அழுத்தம் கொடுத்து வருகிறோம். ஒரு மாதமாகியும் ஒரு கடைக்கு கூட மின் இணைப்பு வாங்காமல் உள்ளார்கள். எனவே தான் அழுத்தம் கொடுக்கிறோம். அவர்களை பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் என எந்த நோக்கமும் இல்லை" என கூறினார்.

Also read: குளித்து முடித்த கணவருக்கு துண்டு கொடுக்காததால் மனைவி கொலை..

மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்டதற்கு,
"குன்னத்தூர் சத்திரத்தில் உள்ள கடைகள் அனைத்திற்கும் மின் இணைப்பிற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இணைப்பை பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் தான் பணம் செலுத்தி இணைப்பு பெற வேண்டும். தற்போது அவர்களுக்கு அந்த இணைப்பு கிடைப்பதற்கான பணிகளை செய்ய அதிகாரிகளை நியமித்து உள்ளோம்" என்றார்.

குன்னத்தூர் சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள 190 கடைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், அதற்கென தனியாக டிரான்ஸ்பார்மர் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என மின்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளதாகவும், அதற்கான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், குன்னத்தூர் சத்திரத்தில் முழுமையாக மின்சார வசதி ஏற்படுத்தி தரும் வரை, புது மண்டபத்தில் கடைகளுக்கு மின்சார இணைப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும், அதுவரை அரசும், அதிகாரிகளும் நூற்றாண்டு அடையாளத்தை சுமந்து கொண்டிருக்கும் வியாபாரிகளை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: