COVID-19 Vaccine : மதுரையில் தடுப்பூசி இல்லை.. முன்பதிவு செய்யாமல் மக்கள் மையங்களுக்கு வர வேண்டாம் - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தடுப்பூசி

தடுப்பூசி கையிருப்பு இல்லை என்ற தகவல் தெரியாததால் பலரும் மையத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றனர்.

  • Share this:
மதுரையில் இன்றைக்கு மட்டுமே தடுப்பூசி கையிருப்பு உள்ளதால், முன்பதிவு செய்தவர்களை தவிர மற்றவர்கள் மையங்களுக்கு வர வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு 900 ஊசிகளும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2,570 ஊசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளன. இந்நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் இளங்கோ பள்ளியில் நடத்தப்படும் தடுப்பூசி மையத்திற்கு ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.அதனால், தடுப்பூசி இருப்பின் அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

டோக்கன் வாங்குவதற்காக காலை 6 மணி முதல் வரிசையில் காத்திருந்த நபர்கள் கூறுகையில், "தடுப்பூசி செலுத்தும் முன் உணவு சாப்பிட சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் காலையில் இருந்து காத்திருக்கிறோம். உணவு மற்றும் தண்ணீர் பெறுவதற்கு எந்த வசதிகளும் இல்லை. எனவே, குடிதண்ணீர் வசதியாவது ஏற்படுத்தி தர வேண்டும். சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளவர்களும், முதியவர்களும் நீண்ட நேரம் காத்திருக்க இயலாது எனவே விரைவாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: தமிழகத்தில் ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிக நிறுத்தம்! - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

தடுப்பூசி கையிருப்பு இல்லை என்ற தகவல் தெரியாததால் பலரும் மையத்திற்கு வந்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

அவர்கள் கூறுகையில், "தடுப்பூசி மட்டுமே கொரோனாவிற்கு தீர்வு என்று நம்பி இங்கு வருகிறோம். இங்கும் தடுப்பூசி இல்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள். போக்குவரத்து வசதிகள் இல்லாமல் வெகு தொலைவில் இருந்து வந்து திரும்பி செல்கிறோம். தடுப்பூசி இல்லை என்கிற தகவலையாவது முறையாக அறிவிக்க வேண்டும்" என்றனர்.

அரசு ராஜாஜி மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் நாளை முதல் முன்பதிவு நடைமுறை அமலுக்கு வர உள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைவது தவிர்க்கப்படும் என்றும், விரைவில் தடுப்பூசி செலுத்திவிட்டு அனுப்பபடுவர் என்றும் அரசு மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

7823995550 என்ற உதவி எண்ணில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்பு கொண்டு ஊசி வகை மற்றும் தவணைக்கான தேதி, நேரத்தை பதிவு செய்து கொள்ளலாம். இதன்படி நாளொன்றுக்கு சுமார் 1500 நபருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

 



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: