இ-பதிவு நடைமுறையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், முந்தைய அரசின் இ-பாஸ் நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் கபசுர குடிநீர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது தமிழகத்தில் அரசின் சரியான திட்டமிடல் இல்லாததால் இ-பதிவு நடைமுறையில் பெரும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. முதல் அலை வீசிய போது அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி
மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறையை அறிமுகம் செய்தார்.
இதில் விண்ணப்பிப்பவர்கள் முகவரி, அதேபோல் என்ன தேவைக்காக செல்ல வேண்டுமோ அதை அதற்குரிய ஆவணத்தில் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனை மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் வழங்குவார்கள். இதனால் மக்கள் சிரமமின்றி மக்கள் சென்றனர்.
அதேபோல் தேவையில்லாமல் வெளியே செல்லுவது தடுக்கப்பட்டது. தற்போது வெளி மாவட்டங்களுக்கு செல்ல இ-பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட சான்றை மட்டும் வைத்துக் கொண்டால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு விதமான இ- பாஸ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் ஒரு காவல் நிலைய எல்லையில் இருந்து மற்றொரு காவல் நிலைய எல்லைக்குள் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் வேண்டும் என்று கூறப்பட்டது. ஆகவே தமிழகத்தில் ஒரே மாதிரியான இ - பாஸ் முறையை அரசு செயல்படுத்த வேண்டும்.
ஏற்கனவே இருந்த இ-பாஸ் நடைமுறை 38 வருவாய் மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டது. இதில் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்கள் ஆகியவற்றிக்கு செல்ல இந்த நடைமுறை சிறப்பாக இருந்தது.
மக்களும் மிகவும் கவனத்துடன் இருந்து திருமணம், இறப்பு, மருத்துவம் ஆகிய முக்கிய நிகழ்வுகளுக்கு உரிய ஆவணம் கொடுத்து சென்றனர் இதில் நல்ல பலன் கிடைத்தது.
ஆகவே அரசு, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி செயல்படுத்திய இ - பாஸ் நடைமுறையை தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக செயல்படுத்த வேண்டும். அப்படி செயல்படுத்தினால் தமிழகத்தில் எந்த குளறுபடியும் இல்லாமல் மக்களுக்கு தெளிவான வழிகாட்டுதல் இருக்கும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று குறுகிய காலம் தான் ஆகிறது ஆகவே பிரச்சனைகளை உள்வாங்கிக்கொண்டு உயிர்பலி ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். முதல் அலையின் போது ஆக்சிஜன் தேவை என்பதற்கும், தற்போது உள்ள ஆக்ஸிஜன் தேவை என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
தற்போது, கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இது புதிய அரசுக்கு சவாலான பணி ஆகும். இதில் முழு கவனம் செலுத்தினால் மக்கள் உயிரை காப்பாற்றலாம் என அரசின் மேலான கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம் என தெரிவித்தார்.
செய்தியாளர் - சிவக்குமார் தங்கைய்யா
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.