மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட உள்ள இடத்தில் பென்னி குக் வாழ்ந்ததாக கூறப்படும் கட்டிடம் குடும்ப நிதியில் இருந்து கட்டப்படவில்லை என்றும், அதில் பென்னி குக் குடும்பத்தார் வசிக்கவில்லை எனவும் அவரது பேரன் விளக்கமளித்துள்ளார்.
மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடமாக கலைஞர் நினைவு நூலகம் அமைக்க மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. நூலகம் கட்டுவதற்காக மதுரையில் மொத்தம் 7 இடங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து, இறுதியாக பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த இடம் நூலகம் கட்ட ஏதுவாக இருக்கும் என கருதி இதனை இறுதி செய்திருந்தனர்.அந்த இடத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில், பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னி குக் வாழ்ந்ததாக கூறி நூலகம் கட்டுவதற்கு பெரியாறு - வைகை பாசன ஆயக்கட்டு விவசாய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
கர்னல் பென்னிகுக் 15.01.1841-ல் பிறந்து, 09.03.1911-ல் இறந்துள்ளதாகவும், அதன் பின்னர் 1912-ல் பொதுப்பணித்துறை இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டு 1913-ல் கட்டி முடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது.பென்னிகுக் மறைந்த பின்னர் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அங்கு அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என முதலமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும் விளக்கம் அளித்திருந்தனர். மேலும், சட்டசபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், லண்டன் வாழ் தமிழர் பீர் ஒலி என்பவர், இமெயில் மூலம் கேட்டிருந்த தகவலுக்கு, பென்னி குக் பேரன் ஸ்டூவர்ட் சாம்சன் விளக்கம் அளித்துள்ளார்.அதில், "எனக்கு தெரிந்து அந்த கட்டிடம் எங்கள் குடும்ப நிதியில் இருந்து கட்டப்படவில்லை. அங்கு பென்னி குக் வசிக்கவில்லை. அந்த கட்டிடம் பொது நிதியில் இருந்து கட்டப்பட்டிருந்தால் அது தொடர்பான முடிவுகளை அரசு எடுக்கலாம்" என தெரிவித்துள்ளார்.
தற்போது, அந்த பொதுப்பணித்துறை கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு நூலக கட்டுமான பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், பென்னி குக் பேரன் அளித்துள்ள இந்த தகவல் கலைஞர் நூலக இட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.