ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கொரோனா பிணங்களை கையாளும் பணியில் ஆயுஷ் மருத்துவர்கள்; மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சர்ச்சை நடவடிக்கை!

கொரோனா பிணங்களை கையாளும் பணியில் ஆயுஷ் மருத்துவர்கள்; மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சர்ச்சை நடவடிக்கை!

மதுரை ராஜாஜி மருத்துவமனை

மதுரை ராஜாஜி மருத்துவமனை

ஆயுஷ் மருத்துவர்களை இந்த பணிகளில் அமர்த்திய விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் கேட்டதற்கு, "அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகமே மருத்துவர்களுக்கான பணிகளை நிர்ணயம் செய்ததாக" தகவல் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

மதுரையில் ஓராண்டாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஆயுஷ் மருத்துவர்களை, தற்போது கொரோனாவால் இறக்கும் உடல்களை கையாள்வது தொடர்பான பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபடுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுவதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 29 ஆயுஷ் மருத்துவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் கொரோனா முதல் அலை மற்றும் இரண்டாம் அலையில் 11 மாதங்களாக அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர். கொரோனா வார்டு, ஐசியு வார்டு உள்ளிட்ட வார்டுகளில் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கான சிகிச்சை பணிகள், ஆக்சிஜன் கண்காணிப்பு பணிகள் மட்டுமல்லாது நோயாளிகளின் மன நலன் சார்ந்தும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

இந்நிலையில், கடந்த மே 29 அன்று புதிதாக 80 அலோபதி மருத்துவர்கள் ராஜாஜி மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, அந்த 29 ஆயுஷ் மருத்துவர்களும் ஜூன் 1 அன்று முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். திடீரென பணி நீக்கப்பட்டு உள்ளதால் மன உளைச்சலுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளோம், எங்களுக்கு மீண்டும் பணி வழங்குங்கள் என, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோரை சந்தித்து அந்த மருத்துவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Also Read:   ‘சச்சினிடம் கற்றேன்; இந்த டெக்னாலஜி அப்போதே இருந்திருந்தால்’: ஆதங்கத்தை கொட்டிய வீரேந்தர் சேவக்!

அதனை தொடர்ந்து ஜூன் 3 அன்று செய்தியாளர்களை சந்தித்த வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, "மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் ஆயுஷ் மருத்துவர்களுக்கு மீண்டும் பழைய பணியிடங்களிலேயே பணிபுரிவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டு விட்டதாக" கூறினார்.

சம்பந்தப்பட்ட மருத்துவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, தாங்கள் அளித்த நெருக்கடிகள் காரணமாகவே உடனடியாக பணி அமர்த்தப்பட்டதாகவும், அதிலும் ஒரு மாதத்திற்கு மட்டுமே மீண்டும் பணி வழங்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்ததாக கூறினர்.

இப்படியான சூழலில், மதுரையை சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா தொற்று பாதித்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முதல் "தான் மரணிக்க போவதாகவும், தனக்கு மரணம் குறித்த பயம் அதிகமாகி வருவதாகவும், தன்னை உடனே வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்" என்றும் நாள் முழுவதும் புலம்பிக்கொண்டே இருந்துள்ளார்.

Also Read:   புதிய PF விதி அமல்: இதை செய்யலனா இந்த மாதத்தில் இருந்து உங்கள் கணக்குக்கு பணம் வராது!

அவருக்கு மன நல ஆலோசனை தேவைப்படுவதை அவருடைய உறவினர்கள் மூலம் அறிந்த நியூஸ் 18 தொலைக்காட்சி செய்தியாளர் குழு, அந்த ஆயுஷ் மருத்துவர்களை தொடர்பு கொண்ட போது, "மீண்டும் பணி அமர்த்தப்பட்ட 29 மருத்துவர்களில் ஒருவருக்கு மட்டும் தோப்பூர் நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிகிச்சை பணியில் அமர்த்தியுள்ளதாகவும், மற்ற 28 மருத்துவர்களை சிகிச்சை பணிகளில் அமர்த்தாமல் கொரோனா பாதித்து இறக்கும் நபர்களின் உடல்கள் குறித்த அறிக்கைகள் தயார் செய்து அதை விரைவாக அப்புறப்படுத்தும் பணிகளை மேற்பார்வை செய்யும் வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும்" கூறினர்.

மேலும், "இதன் காரணமாக தங்களால் நோயாளிக்கு தற்போது மன நல ஆலோசனை வழங்க இயலாத நிலையில் உள்ளதாகவும்" வருத்தத்துடன் தெரிவித்தனர்.

ஆயுஷ் மருத்துவர்கள்

நோயாளிகளின் உடல் நலனுடன் சேர்த்து மன நலனிலும் அக்கறை எடுத்துக் கொண்ட ஆயுஷ் மருத்துவர்கள் இப்படியான கையறு நிலையில் இருக்க, மரண பயத்தால் புலம்பிய அந்த நோயாளி அடுத்த ஓரிரு நாளில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆயுஷ் மருத்துவர்களை இந்த பணிகளில் அமர்த்திய விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் கேட்டதற்கு, "அரசு ராஜாஜி மருத்துவமனை நிர்வாகமே மருத்துவர்களுக்கான பணிகளை நிர்ணயம் செய்ததாக" தகவல் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அரசு ராஜாஜி மருத்துவமனை தலைவர் ரத்தினவேலிடம் கேட்டதற்கு, "ஆயுஷ் மருத்துவர்கள் உயிரிழக்கும் நபர்களின் இறப்பு குறித்து அறிக்கை தயாரிக்கும் பணிகளிலேயே ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும், அதுவும் சுழற்சி முறையில் மாறுதலுக்கு உட்பட்டது" என்று கூறினார்.

கொரோனா பாதித்த நபர்கள் அதிலிருந்து மீள்வதற்கு முதல் மருந்தே நம்பிக்கை தான். சிகிச்சையுடன், நம்பிக்கையையும் சேர்த்தளிக்கும் இது போன்ற ஆயுஷ் மருத்துவர்களை அவர்களின் தகுதிக்கு உரிய பணிகளில் அமர்த்துவதே, நோயாளிகளுக்கு அரசு அளிக்கும் அத்தியாவசிய ஆறுதல்!

Published by:Arun
First published:

Tags: COVID-19 Second Wave, Madurai