Home /News /tamil-nadu /

சித்திரை திருவிழாவை பார்த்தால் தான் மதுரை மக்களுக்கு கொண்டாட்டமே - சிலிர்க்கும் மதுரைவாசிகள்

சித்திரை திருவிழாவை பார்த்தால் தான் மதுரை மக்களுக்கு கொண்டாட்டமே - சிலிர்க்கும் மதுரைவாசிகள்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Madurai Chithirai Thiruvizha | 2 வருடமாக மதுரை, மதுரையாகவே இல்லை, சித்திரை திருவிழாவை பார்க்க முடியாமல்  மக்கள் சோர்ந்து போய் உள்ளார்கள், திருவிழாவை பார்த்தால் தான் மதுரை மக்களுக்கு கொண்டாட்டமே என்கின்றனர் மதுரைவாசிகள்.

  • News18
  • Last Updated :
    மதுரை சித்திரைத்திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் பங்களிப்புடன் நடைபெற உள்ள நிலையில் புத்துணர்ச்சியுடன் விழாவை கொண்டாட மக்களும், வியாபாரிகளும் தயாராகி வருகிறார்கள்.

    தமிழகத்தில் ஏராளமான திருவிழாக்கள் நடைபெற்று வந்தாலும், கோவில்களின் தலைநகரம், பண்பாட்டு தலைநகரம் மற்றும் திருவிழாக்களின் தலைநகரம் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவானது மிகச்சிறப்பு வாய்ந்த திருவிழாவாக பார்க்கப்படுகின்றது.

    மாசி மாதத்தில் நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையும், சோழவந்தான் அருகே தேனூரில் நடைபெற்ற கள்ளழகர் ஊர்வலத்தையும்  ஒன்றிணைத்து சித்திரை திருவிழாவாக  திருமலை நாயக்கர் மாற்றினார்.

    இத்தகு சிறப்பு வாய்ந்த "திருவிழாக்களின் திருவிழாவாகவும்" மதுரையின் அடையாளமாகவும், ஒவ்வொரு வருடமும் மக்கள் வெள்ளத்தில், வைகை ஆற்றங்கரையோரம்  வெகு விமரிசையாக நடைபெறும் சித்திரை திருவிழாவானது, கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகள் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.

    தென்மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதிலும் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்கும் சித்திரை திருவிழா,  இந்தாண்டு பக்தர்கள் அனுமதியுடன் நடைபெறவுள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வருகின்ற ஏப்ரல் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, திக்குவிஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் மற்றும் ஏப்ரல் 15 ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமானது நடைபெறவுள்ளது.

    திருவிழா ஒருபுறம் நடக்க, மதுரையை சுற்றி பெருமளவில் வணிகமும் நடைபெறுகிறது. குறிப்பாக, திருவிழாவன்று பொருட்காட்சி, வண்டியூரில் தற்காலிக விளையாட்டு பூங்கா, உணவகங்கள் என அமைக்கப்படுகின்றன.

    மேலும், சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அணியும் உடைகள், சல்லடம் தொன்மையான மற்றும் பழமையான பொருட்கள் மற்றும் திருக்கல்யாணத்திற்கு பெண்கள் வாங்கும் மஞ்சள் கயிறு, குங்குமம், ஆகியவை புதுமண்டபத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரத்திலும், தண்ணீரை பீய்த்து அடிக்கும் தோல் பை, சந்தனம் ஆகியவை தேர்முட்டியிலும் விற்கப்படுகின்றன.

    சித்திரை திருவிழா தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து குன்னத்தூர் சத்திரம் கடை வியாபாரி பிரபு கூறுகையில், "நாங்கள் 3 தலைமுறையாக சித்திரை திருவிழாவில், பக்தர்கள் அணியும் கோமாளி உடை , கருப்பணசாமி உடை , மாறுவேட உடை , குல்லா, திரி, மயில் விசிறி, குடை போன்றவை சொந்தமாக தயார் செய்து விற்று வருகிறோம். ஆனால், கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவானது பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறாததால் வியாபாரம் இல்லாமல் பெரும் இழப்பை சந்தித்தோம். இந்த ஆண்டு சித்திரை திருவிழா பக்தர்கள் அனுமதியோடு  நடைபெறவுள்ளதால், தற்போது வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது"என்றார்.

    மேலும், குன்னத்தூர் சத்திரம் கடை வியாபாரி சித்திக் கூறுகையில், 20 நாட்களுக்கு முன்னதாகவே சித்திரை திருவிழா விற்பனை தொடங்கிவிடும், ஆனால்,கொரோனாவிற்கு பின்பு திருவிழா விற்பனையானது தாமதமாக தொடங்குகிறது.   வியாபாரம் என்பது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை, பொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. திருவிழாவிற்கு இரண்டு நாட்கள் முன்னர் வியாபாரம் நடைபெறும், இந்துக்களின் விழாவாக அறியப்பட்டாலும், உண்மையில் இது இந்து - இசுலாம் மதங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விழா. இந்த விழாவில் பல்லாண்டுகளாக இஸ்லாமியர்களின் பங்களிப்பு இருக்கிறது. தனிப்பட்ட முறையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய பங்களிப்பும் இதில் இருக்கிறது. சித்திரை திருவிழாவில் நாங்களும் பங்கு வகிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்"என்றார்.

    தொடர்ந்து புதுமண்டபம் வியாபாரிகள் தையல் தொழிலார்கள் சங்க தலைவர் முத்துப்பாண்டி கூறுகையில்," இந்த ஆண்டு சித்திரை திருவிழா பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து கள்ளழகரை குலசாமியாக வழிபடுகின்றனர், இந்த குன்னத்தூர் சத்திரத்தில் 50 க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் தையல் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் இந்த திருவிழாவில் பக்தர்கள் அணியும் உடைகளை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், மிகவும் கைதேர்ந்தவர்களாக உள்ளார்கள்" என்றார்.

    மேலும் அமுதா கூறுகையில்," ஒவ்வொரு வருடமும் அழகர்கோவிலுக்கு சென்று கள்ளழகருக்கு தேங்காய், பூ , பழங்கள் ஆகியவை வைத்து பூஜை செய்து மதுரைக்கு அழைத்து வருவோம், அதே போல் கள்ளழகரை வழியனுப்பியும் வைப்போம், ஒரு பித்தளை சொம்பில் சக்கரை வைத்து இலை மற்றும் பூ கட்டியும், அதே போல் குழந்தைக்கு மொட்டை அடித்து பூ மாலை அணிவித்தும் ஆற்றில் குளித்து கள்ளழகரை வழிபடுவோம், அதேபோல், திருக்கல்யாணத்தன்று சிறு குழந்தைகள் மாறு வேடமிட்டு  மாசி வீதிகளில் கோலாட்டம், நடனம் ஆகியவை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்" என்றார்.

    மேலும், தனலெட்சுமி கூறுகையில்,"  " வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை, ராமராயர் மண்டபத்தில் அழைத்து வந்து பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிக்க வைப்பார்கள் சிறுவயதில் என்னுடைய அப்பா திருவிழாவிற்கு அழைத்து சென்றிருக்கிறார் , மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஆங்காங்கே, பொங்கல், மோர், சர்பத் மற்றும் ஒவ்வொரு மண்டக்கப்படிகளிலும் உணவு கொடுத்து கொண்டே இருப்பார்கள்" என்றார்.

    மேலும், ஆட்டோ ஓட்டுநர் அழகர் கூறுகையில்," என்னுடைய மகன் ஒவ்வொரு சித்திரை 1 முதல் 15 நாட்கள் விரதமிருந்து மாலை அணிந்து, கள்ளழகர் வரும்பொழுது அவர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பார். மாலை அணிந்திருந்தாலும் சவரம் செய்து, மேக்கப் செய்து "அழகரை பார்க்க அழகாக" செல்வோம் என்றார்.

    Also read... Gold Rate: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை... இன்று (மார்ச் 25. 2022) சவரன் எவ்வளவு தெரியுமா?

    2 வருடமாக மதுரை, மதுரையாகவே இல்லை, சித்திரை திருவிழாவை பார்க்க முடியாமல்  மக்கள் சோர்ந்து போய் உள்ளார்கள், திருவிழாவை பார்த்தால் தான் மதுரை மக்களுக்கு கொண்டாட்டமே என்கின்றனர். 2 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவில் பங்கேற்க முடியாமல், மதுரையும், மக்களும் களையிழந்து இருப்பதாகவும், திருவிழா பார்த்தால் தான் கொண்டாட்டமே என்கின்றனர்.

    -செய்தியாளர்: ஹரிகிருஷ்ணன்.

     
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Madurai, Madurai Chithirai Festival

    அடுத்த செய்தி