Home /News /tamil-nadu /

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இறுதிச்சுற்று: வரலாற்றில் மறக்கவியலாத ஒரு அத்தியாயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இறுதிச்சுற்று: வரலாற்றில் மறக்கவியலாத ஒரு அத்தியாயம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் இறுதிச் சுற்று இதுவரையில் பார்வையாளர்கள் கண்டிராத அளவுக்கு விறுவிறுப்பாக இருந்தது.

கோலாகலமாக நடைபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத வகையில் மிகுந்த பரபரப்பையும், சுவாரஸ்யத்தை கொண்டதாகவும் அமைந்தது. இறுதிச்சுற்றில் நடந்தது என்ன என இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் முதல் சுற்று முடிவில் சித்தாலங்குடியை சேர்ந்த 20 வயது கோபாலகிருஷ்ணன் (மஞ்சள் உடை எண் : 3) முதல் சுற்றிலேயே 10 காளைகளை பிடித்து முதல் இடத்தில் இருந்தார். நான்காம் சுற்றின் முடிவு வரையிலும் கோபால கிருஷ்ணன் தான் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தார்.

நான்காம் சுற்றில் களமிறங்கிய குருவித்துறை பகுதியை சேர்ந்த விஜய் (ஆரஞ்சு உடை எண்: 7) அந்த சுற்றிலேயே 7 காளைகளை பிடித்து இரண்டாம் இடத்திற்கு வந்தார்.
இவருக்கு நாளை (ஜனவரி 18) திருமணம் நிச்சயிக்கபட்டிருந்த நிலையிலும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.

ஐந்தாம் சுற்றில் போட்டியின் போக்கு சட்டென்று மாறியது. ஐந்தாம் சுற்றில் களமிறங்கிய அலங்காநல்லூரை சேர்ந்த 23 வயது ராம்குமார் (பச்சை உடை எண் :48) அந்த சுற்றில் மட்டும் 14 காளைகளை பிடித்து முதலிடத்தை தனது வசமாக்கினார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் அலங்காநல்லூர் போட்டியில் முதல் பரிசை வென்றிருந்த நிலையில், இந்த ஆண்டும் இவரே வெல்வார் என்ற எண்ணம் பார்வையாளர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்தது.

பார்வையாளர்கள் மத்தியில் சூழ்ந்திருந்த கணிப்பை உடைக்கும் வகையில் ஆறாம் சுற்றில் களம் இறங்கினார் 21 வயதே ஆன இளைஞர் ஒருவர். மதுரை கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் (ரோஸ் நிற உடை எண்: 38) என்ற இளைஞர் 7 ஆம் சுற்றின் முடிவில் 12 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்திற்கு வந்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு


எட்டாம் சுற்று இறுதிச்சுற்றாக நடைபெற்றது. அலங்காநல்லூர் போட்டியை பொறுத்த வரைக்கும், ஒவ்வொரு சுற்றிலும் தேர்வாகும் சிறந்த வீரர்கள் அடுத்து ஒரு சுற்றிற்கு மட்டும் விளையாட அனுமதிக்கப்பட்டனர். இப்படி ஒவ்வொரு சுற்றிலும் தேர்வான சிறந்த வீரர்கள் சுமார் 30 பேர் இறுதிசுற்றில் களமிறக்கப்பட்டனர்.

இறுதிச்சுற்றில் அலங்காநல்லூர் ராம்குமார், கருப்பாயூரணி கார்த்திக், சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணன் ஆகிய இந்த மூன்று வீரர்கள் மீதே பார்வையாளர்களின் மொத்த கவனமும் குவிந்திருந்தது. இறுதி சுற்றில் களமிறங்கிய காளைகளும் நாள்முழுவதும் பார்வையாளர்கள் எதிர்பார்த்திருந்த ஆட்டத்தை அப்போது வெளிப்படுத்தின.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு


12 காளைகளை பிடித்திருந்த கார்த்தி 15 காளைகளை பிடித்து முதலிடத்தை சமன் செய்தார். கோபாலகிருஷ்ணன் 12 காளைகளை பிடித்து முதலிடத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். முதலிடத்தை கார்த்தியும், ராம்குமாரும் சமன் செய்த உடனே அலங்காநல்லூர் களம் பரபரப்பின் உச்சத்திற்கு சென்றது. கார்த்தியும், ராம்குமாரும் மாறி மாறி ஆளுக்கொரு காளையை பிடித்து, தலா 18 காளைகள் என்ற நிலையில் மீண்டும் முதலிடத்தை சமன் செய்தனர்.

இப்போது அமைச்சர்கள், ஆட்சியர், அதிகாரிகள், பார்வையாளர்கள் என எல்லோரும் இருக்கையில் இருந்து எழுந்து நின்று கண் இமைக்காமல் களத்தையே கவனித்துக் கொண்டிருந்தனர். யாருக்கு கார் என்ற கமிட்டியினரின் குரல் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருந்தது.

கார்த்தியும், ராம்குமாரும் முதலிடத்தை தக்கவைத்துக் கொள்ள போராடுகிறார்கள். கார்த்தியை ஒரு காளை நெஞ்சில் முட்டித் தூக்கி எறிந்தது. எல்லோரும் பதறி கூச்சலி்ட, கார்த்தி அந்த வலியை பொருட்படுத்தாது, மீண்டும் இரண்டு காளைகளை பிடித்து முதலிடத்தை தக்க வைத்தார். கார்த்தியின் துணிச்சல் மிகுந்த ஆட்டத்தை ஊக்குவித்த அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் மூன்று தங்க மோதிரங்களை பரிசளித்தார்கள்.

போட்டியை முடிக்கும் கட்டாயத்தில் மாவட்ட நிர்வாகம் ஒரு புறம்... யார் முதல் பரிசை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மறுபுறம்... மீண்டும் ஒரு முறை கார்த்தியை முட்டிப் பந்தாடியது ஒரு காளை. களத்திலிருந்த நண்பர்கள் உதவியுடன் மீண்டும் எழுந்து நின்றார் கார்த்தி.
அதே நேரம் மூன்றாம் இடத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன் ஒரு காளையை பிடிக்க முற்படுகையில், அவரை தூக்கி பந்தாடிய காளை ஒன்றின் கொம்பில் அவரது உடை சிக்கி, மாட்டிடம் இருந்து தப்பிக்க முடியாமல் திணறினார். சக வீரர்கள் அவரை விடுவிக்க போராடினார்கள். நீண்ட போராட்டத்திற்கு பின்பு அவரது உடை மட்டும் கொம்பில் சிக்கி கழன்ற நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

முதல் மூன்று இடத்தில் இருந்த வீரர்கள் அனைவரும் காளைகளின் ஆக்ரோஷ பாய்ச்சலுக்கும், தாக்குதலுக்கும் ஈடுகொடுக்க முடியாமல் தவித்தாலும் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் விடாமல் தாங்கிக் கொண்டிருந்தனர். 21 காளையை அடக்கி முதல் பரிசை கார்த்தியும், 18 காளைகளை அடக்கி இரண்டாம் பரிசை ராம்குமாரும், 12 காளைகளை அடக்கி மூன்றாம் பரிசை கோபாலகிருஷ்ணனும் வசமாக்கினர்.

போட்டி முடிந்த கணத்தில் களத்தில் நிகழ்ந்த கரவொலியிலும், கொண்டாட்டத்திலும் மதுரையே அதிர்ந்தது. சுமார் 11 மணி நேரம், 1,020 காளைகள், 300 வீரர்கள் என நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச்சுற்று ஏற்படுத்திய பரபரப்பும், எதிர்பார்ப்பும், கொண்டாட்டமும் ஜல்லிக்கட்டு வரலாற்றில் யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது என்பதில் ஐயமில்லை.
Published by:Karthick S
First published:

Tags: Jallikattu, Madurai

அடுத்த செய்தி