மதுரை மாந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்ட 30 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் சாப்டூர் சாலையில் தொட்டணம்பட்டியை சேர்ந்த குமார் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பு உள்ளது. மாந்தோப்பை ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அருண் பாண்டியன் என்பவர் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருவது போல் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மதுரை சரக டி ஐ ஜிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மதுரை சரக டிஐஜி பொன்னி மாவட்ட எஸ்பி பாஸ்கர் உத்தரவின்பேரில் சார்பு ஆய்வாளர் கௌதம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை மற்றும் தனிப்பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் சோதனையிட்டபோது குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
தோப்பில் உள்ள அறைக்குள் சந்தேகப்படும் படியாக மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதனை பிரித்து பார்த்தபோது கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கணேஷ், வேல், விமல், கூல் லீப் உள்ளிட்ட நிறுவனங்களின் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 133 மூடைகளில் இருந்த 1872 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரொக்கப்பணம் ரூபாய் 87 ஆயிரத்தையும் பறிமுதல் செய்த போலீசார் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட வந்த இரண்டு கார்கள், சரக்கு வாகனத்தையும் ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் (வயது 27) அவருடன் தங்கியிருந்த விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள நென்மணியைச் சேர்ந்த சரவண மணிகண்டன் (வயது 33) ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 25) ஆகிய மூவரையும் சாப்டூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு ரூ.30 லட்சம் வரை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மாந்தோப்பில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பல லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தியாளர் : சிவக்குமார் (மதுரை)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Gutka Pan masala Seized, Madurai, Tamil News, Tamilnadu