மதுரையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சி 70 வது வார்டு நேதாஜி ரோடு நேரு நகரில் உள்ள மாநகராட்சி கழிவு நீர் வெளியற்றும் தொட்டியில் (பம்மிங் ஸ்டேஷன்) அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன், மாடக்குளம் பகுதியை சேர்ந்த சிவகுமார் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கழிவு நீர் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், 3 பெரும் எதிர்பாராத விதமாக கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து விஷவாயுவால் தாக்கப்பட்டனர். தொட்டிக்குள்ளே அவர்களின் அலறல் சத்தம் கேட்டுள்ளது, உடனடியாக அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 பேரையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிவகுமார், லட்சுமணன் ஆகியோரை சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மூன்று மணி நேரத்திற்கு பிறகு சரவணகுமாரையும் மீட்டு, மூவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் என்பவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ALSO READ | திருச்சியில் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை கூடத்தில் கிடந்த பெண்ணின் பிணம்... சிசிடிவி மூலம் துப்புதுலக்கும் போலீஸ்!
தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன், மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக கழிவுநீர் அடைப்பை சரிசெய்யும் பணியில் மூன்று தொழிலாளர்களும் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒப்பந்த நிறுவனமான M.S VRG construction நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ், லோகநாதன், உரிமையாளர் விஜயானந்த் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் போதிய மின்விளக்கு வசதி இல்லாமலும், உரிய மேற்பார்வை இன்றியும் பணி செய்ததாலேயே உயிரிழப்பிற்கு காரணம் என மதுரை மாநகராட்சி இளநிலை பொறியாளர் சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர் : ஆர்.எஸ். ஹரிகிருஷ்ணன் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.