Home /News /tamil-nadu /

பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் மீண்டும் சர்ச்சைகள்- குழப்பங்கள் தொடரும் மதுரை மாநகராட்சி

பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் மீண்டும் சர்ச்சைகள்- குழப்பங்கள் தொடரும் மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி

மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாதக் கூட்டத்தில் நிதி ஒதுக்கீடு, மேயர் ஆலோசகர் நியமனம் உள்ளிட்ட விவகாங்கள் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டத்தில் மேயரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிப்படுத்திய எதிர்ப்பு, தனி நபரை மேயரின் ஆலோசகராக நியமனம் செய்வதற்கான தீர்மானம், விஷவாயு உயிரிழப்பு சம்பவ விசாரணையில் அலட்சியம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளன.

மதுரை மாநகராட்சியின் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த மே 12-ம் தேதி மேயர் இந்திராணியால் தாக்கல் செய்யப்பட்டது.

அன்றைய தினம், பட்ஜெட் அறிக்கையில் நிதி நிலை குறித்த புள்ளி விபரங்களில் தவறுகள் இருந்தது; இருக்கை ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக - திமுக உறுப்பினர்கள் இடையே கூச்சல், குழப்பம் ஏற்பட்டது; திமுக பிரமுகர்கள் சிலர் ஊடகத்தினரை தாக்கியது உள்ளிட்ட விவகாரங்கள் கடும் சர்ச்சையை கிளப்பி அது மக்கள் மத்தியில் மாநகராட்சியின் நிர்வாகத்திறன் குறித்து பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், 5 நாட்களுக்கு பின்னர் இன்று நடைபெற்ற பட்ஜெட் விவாத கூட்டத்திலும் பல புதிய சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

ரூ.1,000 கோடி கடன் :

பட்ஜெட் அறிக்கையில், ஒவ்வொரு வார்டுக்கும் ஆண்டு தோறும் வழங்கப்படும் வார்டு மூலதன பணிகள் நிதி 3 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுவதாக மேயர் இந்திராணி குறிப்பிட்டிருந்தார்.

அது குறித்து பேசிய அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் சோலைராஜா, 3 லட்சம் ரூபாய் நிதி அடிப்படை வசதிகளை மேற்கொள்ள போதாது என்றும் கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் 10 லட்சம் ரூபாயாக இருந்த நிதி ஒதுக்கீடு தற்போது 3 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அதை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

மதுரை மேயர்


அதற்கு பதிலளித்த மேயர், மதுரை மாநகராட்சிக்கு 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் நிலுவை உள்ளதாகவும் அதனால் நிதி நிலை நெருக்கடியில் உள்ளதாகவும், அதன் காரணமாகவே மூலதன பணிகள் நிதி குறைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிமுக - திமுக உறுப்பினர்கள் அமளி :

தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் குழுத் தலைவர், ‘மாநகராட்சி சொத்து வரி உயர்வு விபரங்களில் குளறுபடிகள் உள்ளதாகவும், சொத்து வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து, அதனை எதிர்த்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தார். தொடர்ந்து, மேயருக்கு முன்பாக கூடத்தின் மையத்தில் வந்து நின்ற அதிமுக உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது, திமுக உறுப்பினர்கள் பலரும் அதிமுக உறுப்பினர்களின் செயலை கண்டித்து அவர்களை வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பினர். திமுக உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதில் மேயர் செய்த கால தாமதத்தால் மன்றத்தினுள் சுமார் 10 நிமிடங்கள் கூச்சல், குழப்பங்களுடன் கூடிய பதற்றமான சூழல் நிலவியது.

விஷவாயு விசாரணையில் அலட்சியம் :

கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு மாநகராட்சி கழிவுநீர் கிணற்றில் மோட்டாரை பழுது நீக்கும் பணியின் போது 3 ஒப்பந்த பணியாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விசிக உறுப்பினர் முனியாண்டி கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஆணையர் கார்த்திக்கேயன், சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என கூறினார்.

கழிவுநீர் கிணற்றில் விதிமீறி மேற்கொள்ளப்பட்ட பணிகளால் மூன்று அப்பாவி உயிர்கள் பலியான சோகம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை அந்த சம்பவம் குறித்த விசாரணை நிறைவடையாமல் இருப்பது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.

மேயரின் ஆலோசகர் நியமன தீர்மானம் :

புதிய அதிகாரிகள் நியமன விபரங்கள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கான தீர்மானங்கள் உள்ளிட்ட 5 பொருள்கள் இன்று மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அதில், மேயர் இந்திராணிக்கு பிரத்யேகமாக ஒரு தனிநபர் ஆலோசகரை நியமிப்பது தொடர்பான தீர்மானமும் வைக்கப்பட்டிருந்தது.

பாஜக தலைவர் ஹெச்.ராஜா திண்டுக்கல்லில் கைது ?

அந்த குறிப்பில், சிறப்பு ஆலோசகர் ஒருவரை நியமனம் செய்ய மேயர் கேட்டதாகவும், அதனடிப்படையில் அவருக்கு மாநகராட்சி செயல்முறை, திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்குதல்; ஆய்வுகள், தணிக்கைகள், கூட்டங்கள் ஆகியவற்றில் மேயருடன் கலந்து கொள்ளுதல்; அரசு உயர் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உடனான பணிகள் குறித்து மேயருக்கு தகவல் பரிமாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக அர்ச்சனா தேவி என்கிற பட்டதாரி நியமிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், அந்த நபர் மாநகராட்சி சார்பில் ஊதியமோ, செலவினமோ ஏதும் இன்றி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், இப்பொறுப்பில் அவர் ஐந்து ஆண்டுகாலமோ அல்லது மேயர் விரும்பும் வரையோ நீடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேயருக்கு ஒரு தனி நபரை ஆலோசகராக நியமனம் செய்யும் நடைமுறை இதுவரை இல்லாத ஒன்று எனவும், மேயருக்கான உதவியாளர்களாக அரசு அலுவலர்கள் சிலர் ஏற்கனவே உள்ள போது அரசுக்கு சம்பந்தமில்லாத ஒருவரை அரசு அலுவலகத்திற்குள் மேயரின் ஆலோசகராக நியமனம் செய்திருப்பது மாநகராட்சி நிர்வாகத்தில் வெளிநபர் தலையீட்டுக்கான வாய்ப்பை அளிக்கும் எனவும், அதனால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் சூழல்கள் உள்ளதாகவும் எதிர்கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு :

மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களை உள்ளடக்கிய 100 வார்டுகளில், பெரும்பாலான இடங்களில் அடிப்படை வசதிகளில் பற்றாக்குறை நீடித்து வருகின்றன. அவை குறித்து பட்ஜெட் கூட்டத்தில் விவாதிப்பதற்கு மாமன்ற உறுப்பினர்களிடம் முன்கூட்டியே கேள்விகள் பெறப்பட்டருந்தன.

கூட்டத்தில், மண்டல தலைவர்கள் 5 பேருக்கு முதலில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து சில திமுக உறுப்பினர்களுக்கும், அதிமுக, விசிக, காங்கிரஸ், பாமக சார்பில் தலா ஒரு உறுப்பினருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காலை 10:30 மணிக்கு துவங்கிய கூட்டம் மதியம் 1:30 மணி அளவில் நிறைவுறுவதாக மேயர் அறிவித்த போது சில திமுக உறுப்பினர்கள் எழுந்து, அவர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படாததை கண்டித்து குரல் எழுப்பினர்.

அதற்கு மேயர் இந்திராணி எந்தவித பதிலும் அளிக்காமல் சென்றதால் கோபமடைந்த திமுக உறுப்பினர்கள் சிலர் மேயரின் அறைக்கு நேரில் சென்று முறையிட்டனர்.

தமிழகத்தின் பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான மதுரை மாநகராட்சியில் நிலவும் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் குறித்து பட்ஜெட் கூட்டத்தில் அதிகமான உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு அளிப்பது குறித்து மேயர் கவனம் செலுத்த தவறுவதாகவும், மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் போதிய வசதிகளை உறுதி செய்வதற்கு பட்ஜெட் விவாத கூட்டத்தின் நாள், நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், அதிகமான உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநகராட்சியில் தொடரும் இதுபோன்ற நிர்வாக குழப்பங்கள் குறித்து மக்கள் மத்தியில் பெரும் அதிருப்திகள் தொடரும் நிலையில், வரும் நாட்களில் அதனை தவிர்க்க தேவையான ஆக்கப்பூர்வ நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
Published by:Karthick S
First published:

Tags: Madurai

அடுத்த செய்தி