முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரை மாநகராட்சி பட்ஜெட் - புதிய அறிவிப்புகள் மற்றும் குளறுபடிகள் என்னென்ன?

மதுரை மாநகராட்சி பட்ஜெட் - புதிய அறிவிப்புகள் மற்றும் குளறுபடிகள் என்னென்ன?

மதுரை மாநகராட்சி பட்ஜெட் - புதிய அறிவிப்புகள் மற்றும் குளறுபடிகள் என்னென்ன?

மதுரை மாநகராட்சி பட்ஜெட் - புதிய அறிவிப்புகள் மற்றும் குளறுபடிகள் என்னென்ன?

Madurai Corporation Budget | மதுரை மாநகராட்சியின் 2022-2023 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் இந்திராணி இன்று தாக்கல் செய்தார்.

  • Last Updated :

மதுரை மாநகராட்சி பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், குடிநீர், கழிவு நீர் மேலாண்மை உள்ளிட்டவற்றில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ள நிலையில், நிதி நிலை குறித்த புள்ளி விபரங்களில் குளறுபடிகளும் ஏற்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியின் 2022-2023 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் இந்திராணி இன்று தாக்கல் செய்தார். அதன்படி, ரூ.1251 கோடியே 9 லட்சம் ரூபாய் வரவாகவும், ரூ.1251 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவாகவும் இருக்கும் எனவும், 67 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் பற்றாக்குறையாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரால் அறிவிக்கப்பட்ட ரூ.500 கோடி மதிப்பிலான புதிதாக இணைக்கப்பட்ட வார்டுகளுக்கான பாதாள சாக்கடைத் பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், மதுரையின் மையப் பகுதியில் உள்ள மொத்த விலை மார்க்கெட்டுக்களை இடமாற்றம் செய்வதற்காக புறவழிச்சாலையை ஒட்டி நிலம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறை வாரியாக வெளியிடப்பட்டுள்ள பிற முக்கிய அறிவிப்புகள்:

• கல்வி:

மாநகராட்சி பள்ளி மாணவர்களின் மன அழுத்தம், உளவியல் பிரச்சனைகளை தீர்க்க ஆசிரியர்கள், மன நல ஆலோசகர்கள் கொண்ட குழு அமைக்கப்படும்.

அழகர் கோவில் சாலையில் உள்ள சிறப்புத் திறன் பூங்காவில் ரூ.25 லட்சம் மதிப்பில் சிறப்புத்திறன் குழந்தைகள் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

• நூலகங்கள்:

நீச்சல் குளம் அருகே நமக்கு நாமே திட்டத்தில், டைடல் பார்க் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் ரூ.45 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் படிப்பக பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதே போல பிற இடங்களிலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுரையில் ஆண்டுதோறும் அரசால் நடத்தப்படும் புத்தகத் திருவிழாவுடன், இலக்கிய திருவிழாவையும் நடத்த அரசுக்கு கோரிக்கை வைக்கப்படும்.

• பூங்கா:

கோச்சடை பகுதியில் வைகை கரையில் பழந்தமிழ் பாடல்களை நினைவு படுத்தும் பூங்கா, இலக்கிய கூட்டங்கள் நடத்த திறந்தவெளி அரங்கம் மற்றும் அங்குள்ள பாரம்பரிய நீரேற்று நிலையத்தில் சிறு அருங்காட்சியகம் ஆகியவை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

• சுற்றுலா:

வைகை கரை சாலை, தெப்பக்குளம் பகுதிகளில் சைக்கிள் டிரக்குகள் அமைக்க நடவடிக்கை.

மதுரையின் பாரம்பரிய இடங்களை கான Heritage walk & Heritage cycling திட்டம் செயல்படுத்தப்படும்.

•குடிநீர் வழங்கல்:

அம்ருத் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டம் பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டம் அடுத்தாண்டு மே மாதத்தில் நிறைவடையும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் மதுரையில் முழுமையான குடிநீர் விநியோகம் நடைபெறும்.

• கழிவு நீர் மேலாண்மை:

(சமீபத்தில் மாநகராட்சி கழிவுநீரேற்ற கிணற்றில் விஷவாயு தாக்கி 3 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் எதிர்காலத்தில் அவற்றை தவிர்க்கும் நோக்கில் கழிவு நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது)

கழிவு நீரேற்று நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கட்டாயம் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன் பணிபுரிவது உறுதி செய்யப்படும்.

கழிவு நீர் அகற்றல் பணிக்காக ரூ.3.62 கோடி மதிப்பில் ஜெட் ராடிங் வாகனங்கள், உறிஞ்சும் இயந்திர கனரக வாகனங்கள் உள்ளிட்டவை வாங்கப்படும்.

கழிவு நீரேற்று மையத்தில் கிணறு பராமரிப்புக்கென மாநகராட்சியால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன தானியங்கி இயந்திரம் அமைக்கப்படும்.

பொது சுகாதாரம் & திடக்கழிவு மேலாண்மை:

மதுரை மாநகராட்சியில் தினமும் 750-850 டன் குப்பைகள் அகற்றப்படும் நிலையில், வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து பெற்று, மக்கும் குப்பைகளை உரமாக்கும் பணிகள் அடுத்த 15 மாதங்களில் அனைத்து வார்டுகளிலும் செயல்படுத்தப்படும்.

வைகை நதியை பராமரிக்க பொது மக்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் பங்களிப்புடன் தொடர் தூய்மை பணி ஜூன் மாதம் முதல் துவங்க உள்ளது.

குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் வெள்ளக்கல் திடக்கழிவு மையத்தில் 200 மெட்ரிக் டன் அளவில் செயல்படுத்த திட்ட அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

நகரில் அமைக்கப்படும் பொது கழிப்பிடங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஆகியோருக்கு தனித்தனி கழிப்பறைகள் அமைக்கப்படும்.

மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்களின் டெண்டர் காலம் முடிந்தவுடன் அவை இலவச பயன்பாட்டுக்கு அளிக்கப்படும்.

வார்டு பணிகள் நிதி :

வார்டு மூலதன பணிகளுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் நிதி அளவு 1 லட்சம் ரூபாயில் இருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது.இதே போல, ஒவ்வொரு மண்டலத்துக்கும் அவசர கால செலவின நிதியாக மாதம் தோறும் 2 லட்சம் ரூபாய் என ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

• பணியாளர் நலன்:

மாநகராட்சி பணியாளர்களுக்கான பணப்பலன் நிலுவைகள் விரைந்து வழங்குதல், தூய்மை பணியாளர்கள் குடியிருப்பை புதுப்பித்தல்/புதிய குடியிருப்பு கட்டுதல், முழு உடல் பரிசோதனை முகாம், மாதம் தோறும் குறைதீர் கூட்டம், பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கல், ஊதியத்தை இணைய வழியில் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

•குளறுபடிகள் :

மதுரை மாநகராட்சியில் சமீப காலமாக குளறுபடிகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது. அந்த வகையில் மேயர் தாக்கல் செய்த நிதி நிலை புள்ளி விபரங்களிலும் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளன.

மாமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் மாநகராட்சி சார்பில் வரவு - செலவு திட்ட கையேடு அளிக்கப்பட்டது. அத்தோடு, மேயர் வாசித்து தாக்கல் செய்வதற்காக தனியே ஒரு அறிக்கையும் தயாரிக்கப்பட்டிருந்தது. இரண்டிலும் குறிப்பிடப்பட்டிருந்த வரவு தொகை விபரங்களில் குளறுபடிகள் இருந்தது குழப்பத்தை ஏற்படுத்தின.

கையேட்டில் வரவுத்தொகை என ரூ.1251 கோடியே 9 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மேயர் வாசித்த அறிக்கையில் வரவு தொகை ரூ.1259 கோடியே 10 லட்சம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு குறிப்புகளிலும் வரவு தொகையில் இருந்த தவறு காரணமாக மேயர் வாசித்த அறிக்கையின் படி உபரியாக ரூ.7 கோடியே 33 லட்சம் இருக்கும் என கருதப்பட்டது. பின்னர், மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டதை தொடர்ந்து அறிக்கை திருத்தி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் நிதி பற்றாக்குறை ரூ.67 லட்சத்து 44 ஆயிரமாக இருக்கும் என தெளிவு படுத்தப்பட்டது.

இது தவிர அறிக்கையின் பல இடங்களில் வார்த்தை பிழைகள் இருந்தன. இதற்கெல்லாம் காரணம்,அவசர கதியில் பட்ஜெட் அறிக்கை/கையேடு தயாரிக்கப்பட்டதே என மாநகராட்சி வட்டாரம் தகவல் அளித்துள்ளது.

top videos

    நிதி அமைச்சர் வழியில், தனது செயல்பாட்டு அறிக்கையை மக்கள் மன்றத்தில் சமர்பிப்பதாக அறிவித்து பொறுப்பேற்ற மேயர் இந்திராணி தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டிலேயே குளறுபடிகள் ஏற்பட்டிருப்பது, மக்களிடம் மாநகராட்சி மீதான நிர்வாக திறனை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

    First published:

    Tags: Madurai, Madurai corporation