மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவில் கூட்டம் அலைமோதியதால், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
மதுரையில் புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு, பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, ஜல்லிக்கட்டில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்க அரசு அனுமதி அளித்துள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு உடற்தகுததி மற்றும் கொரோனா நெகடிவ் சான்றிதழ்கள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிடி, மாடுபிடி வீரர்களுக்கான உடற்பரிசோதனை அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு பகுதிகளில் தொடங்கியுள்ளது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றுள்ளனர்.
அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் வழங்கப்பட்ட டோக்கன்களை பெற்றவர்கள் மட்டுமே, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவின் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், டோக்கன்கள் இல்லாத பலரும் அங்கு கூடியதால், பரிசோதனை மையங்களில் கூட்டம் அலைமோதியது. அறிவுறுத்தலையும் மீறி மக்கள் அதிகளவில் கூடியதால், போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டினர்.
மாடுபிடி வீரர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களது உடல் எடை, உயரம், ரத்த அழுத்தம் தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அந்த முடிவுகளின் அடிப்படையில் 300 வீரர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.