டி.ஜி.பியாக டி.கே.ராஜேந்திரன் பணி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள தமிழக டி.ஜி.பி.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியதை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த கதிரேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
குட்கா முறைகேடு தொடர்பான ஆவணங்களை திட்டமிட்டு மறைத்து டி.கே.ராஜேந்திரன் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
சென்னை போயஸ் தோட்டத்தில் 2017 நவம்பரில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில், சசிகலாவின் அறையில் இருந்து மறைக்கப்பட்ட ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. அப்போது, டி.கே.ராஜேந்திரனை டிஜிபியாக பணி நீட்டிப்பு செய்ய மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்திற்கு பரிந்துரைத்த போது, லஞ்சப்புகார் தொடர்பான ஆவணங்கள் ஏதும் தங்களிடம் இல்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
லஞ்சப்புகார் தொடர்பான ஆவணங்கள் கிடைக்கப்பெற்ற பின்னராவது பணி நீட்டிப்பினை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாமே? என மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.