Home /News /tamil-nadu /

"ஆஸ்பத்திரிக்கு இலவசம்'' ரியல் மாணிக்கமாகவே வாழும் மதுரை ஆட்டோக்காரர்!

"ஆஸ்பத்திரிக்கு இலவசம்'' ரியல் மாணிக்கமாகவே வாழும் மதுரை ஆட்டோக்காரர்!

ஆட்டோ ஓட்டுநர் லெட்சுமணன்

ஆட்டோ ஓட்டுநர் லெட்சுமணன்

மதுரையில் மருத்துவ அவசரத்திற்கு செல்லும் நோயாளிகளிடமும், ஏழைகளிடமும் ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் இலவசமாக ஆட்டோ ஒட்டி சேவை செய்து கொண்டிருக்கிறார் லெட்சுமணன்.

பாட்ஷா திரைப்படத்தில் உள்ள பாடல் ஒன்றில், "அம்மா தாய்மாரே ஆபத்தில் விட மாட்டேன், வெயிலோ புயல் மழையோ மாட்டேன்னு சொல்ல மாட்டேன்.... நான் பிரசவத்துக்கு இலவசமா வாரேம்மா உன் பிள்ளைக் கொரு பேரு வச்சும் தாரேம்மா..." என்ற வரிகள் இடம்பெற்றிருக்கும். அதை நடைமுறையில் சாத்தியப்படுத்தி நிஜ மாணிக்கமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் மதுரையை சேர்ந்த லெட்சுமணன்.

ஊரடங்கு காலம் என்பதால் அடிப்படையிலேயே பொருளாதார நெருக்கடிகளை ஆட்டோ ஓட்டுனர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதிலும், மூன்று குழந்தைகளையும், கூலி வேலைக்கு செல்லும் மனைவியையும் கொண்ட லெட்சுமணன் பெரும் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறார்.

அந்த நெருக்கடிகள் எல்லாம் வயிற்றுக்கு தானே, மனதுக்கு இல்லையே என்று நினைத்த லெட்சுமணன், தன்னுடைய ஆட்டோவில் "ஆஸ்பத்திரி அவசரத்திற்கு இலவசம்" என்ற வாசகங்களை எழுதிக்கொண்டு மருத்துவமனை வாயில்களில் உதவிக்கரம் நீட்டி காத்திருக்கிறார். யார் வந்து ஏறினாலும் பத்திரமாக வீட்டிற்கும், வீட்டிலிருந்து மருத்துவமனைக்கும் கொண்டு சேர்க்கிறார்.

இவருடைய சேவையை கவனித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இவருடைய புகைப்படத்துடன் வாழ்த்தி அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அதன் பின்னர் அவருடைய உதவியை நாடுபவர்களும், அவருக்கு உதவுபவர்களும் அதிகரித்து விட்டார்கள்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாயிலில் உதவ காத்திருந்த லட்சுமணனிடம் பேசினோம் "இரண்டரை ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டிக் கொண்டிருக்கிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாததால் ஆட்டோ கடன் தவணை கட்ட முடியவில்லை. ஆட்டோவை வீட்டில் சும்மா நிறுத்தி வைத்திருக்காமல் நம்மால் முடிந்த உதவியை மக்களுக்கு செய்யலாம் என்ற நோக்கத்தில் கடந்த 25 நாட்களாக இலவசமாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். யார் போன் செய்து அழைத்தாலும் வீட்டிற்கே போய் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பேன். அவர்களாக விருப்பப்பட்டு ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்வேன். ஆனால், ஏழைகளிடம் ஒரு ரூபாய் கூட வாங்க மாட்டேன்“ என்றார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஐயாவை எனக்கு தெரியவில்லை. திடீரென்று அவர் காரிலிருந்து இறங்கி வந்து போட்டோ எடுக்கவும் நான் பைனான்ஸ் நிறுவன நபர்களோ என நினைத்து பயந்து விட்டேன். பின்னர், தான் அவர் என்னுடைய சேவையை மனதார பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது தெரிந்தது. அதை பார்த்த சென்னையை சேர்ந்த ஒரு பெண் ஆட்டோ பராமரிப்பு செலவிற்கு வைத்துக் கொள்ளுங்கள் என கொஞ்சம் பணம் அனுப்பியுள்ளார். அந்த பணத்தை கொண்டு சாலையில் ஆதரவற்று இருக்கும் நபர்கள் சிலருக்கு உணவு வாங்கிக் கொடுத்தேன். இதை நான் விளம்பரத்திற்கு செய்யவில்லை, மனதார செய்கிறேன்.

கொரோனா காலம் முழுவதும் இந்த உதவியை தொடர்ந்து செய்ய வேண்டும் என நினைக்கிறேன். ஆனால், காவல்துறை கெடுபிடிகளை தவிர்க்க, மாவட்ட நிர்வாகம் எனக்கு அனுமதி பாஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒருசில ஆட்டோக்கார்ரகள் பாராட்டினாலும், மற்ற பல ஆட்டோகாரர்கள் எங்கள் பிழைப்பை கெடுக்காதீர்கள் என விரட்டுகிரார்கள். அது தான் எனக்கு வருத்தமாக உள்ளது" என்றார்.

கொரோனா குறித்து எல்லோரும் தேவையற்ற பயம் ஏற்படுத்துவதாகவும், தான் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருந்தாலும், மக்களுக்கு நல்லது செய்வதால் தனக்கு கொரோனா வராது என்றும் அதீத நம்பிக்கையுடன் கூறுகிறார் லெட்சுமணன்.
அவருடைய உதவியை பெறவும், அவருக்கு உதவவும் 9498822696 இந்த எண்ணிற்கு அழைக்கலாம்:
Published by:Vijay R
First published:

Tags: CoronaVirus, Madurai

அடுத்த செய்தி