மதுரை விமான நிலையத்திற்கு 2ஆம் இடம்... பயணிகள் சேவைகளுக்கான ஆய்வில் தகவல்

மதுரை விமான நிலையத்திற்கு 2ஆம் இடம்... பயணிகள் சேவைகளுக்கான ஆய்வில் தகவல்

மதுரை விமான நிலையம்

பயணிகளுக்கு திருப்தி அளிக்கும் விமான நிலையங்கள் எவை எவை என்பது குறித்து இந்தியாவிலுள்ள 50 விமான நிலையங்களில் இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வில் மதுரை விமான நிலையம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

  • Share this:
இந்திய விமான நிலையங்களின் சேவை நிலை குறித்து ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை இந்திய விமான நிலைய ஆணையம் ஆய்வு நடத்தும். அதன்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை முதல் டிசம்பர் வரை இந்தியாவில் உள்ள 50 விமான நிலையங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 5 மதிப்பெண்ணுக்கு 4.84 மதிப்பெண் பெற்று உதய்பூர் விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மதுரை விமான நிலையமும், தூத்துக்குடி விமான நிலையமும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஆய்வின் முடிவில்,  மதிப்பெண் பெற்று மதுரை விமான நிலையம் இரண்டாம் இடம் பிடித்துள்ள நிலையில், 4.42 மதிப்பெண் பெற்று தூத்துக்குடி விமான நிலையம் 29 ஆவது இடம் பிடித்துள்ளது.

விமான இயக்கங்கள் குறித்த அறிவிப்புகள், வாகன நிறுத்துமிட வசதி, பயணிகள் தங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கான டிராலி இருப்பு, பணியாளர்களின் கனிவான உபசரிப்பு, செக் இன் செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கை, காத்திருக்கும் நேரம், விமான நிலையத்திற்குள் வழிகளை கண்டறிவது உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது.

மதுரை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறுகையில், "கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மதுரை விமான நிலையம் பலவேறு அம்சங்களிலும் சிறந்து விளங்குகிறது. இருந்தும் ஒருசில விஷயங்களில் சில சிக்கல்கள் உள்ளன. உணவு உண்பதற்காக வசதி, பாதுகாப்பு சோதனையில் தாமதம், உடமைகளை ஒப்படைப்பதில் தாமதம் ஆகியவை சரி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன. இந்த குறைகளும் நிவர்த்தி செய்யப்பட்டால், அடுத்த ஆண்டில் மதுரை விமான நிலையம் பயணிகள் சேவையில் முதலிடம் பிடிக்கும்" என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், பாரம்பரிய முறையில் பயணிகளை வரவேற்று உபசரிக்கும் திட்டமும் உள்ளதாகவும், அது நடைமுறைப்படுத்த பட்டால் பயணிகள் மேலும் திருப்தி அடைவர் என்றார். இது தவிர, மதுரையின் வரலாற்று சிறப்பம்சங்கள், சுற்றுலா பெருமைகள் உள்ளிட்டவைகள் அடங்கிய வீடியோக்களையும் காத்திருக்கும் இடங்களில் பயணிகளுக்கு ஒளிபரப்பி அவர்களை மகிழ்விக்கும் திட்டமும் உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க... கருவாட்டை ஏற்றுமதி செய்ய முடியாமல் தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள்... காரணம் என்ன?

விருந்தினரை உபசரிப்பதில் மதுரை எப்போதும் தோற்காது என்பதை மதுரை விமான நிலையம் மற்றுமொரு முறை நிரூபித்துள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: