மருமகளை வரவேற்க மற்றொருவரின் மகளை கொன்று விட்டீர்கள் என ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், தனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது..
அப்போது,உங்கள் வீட்டு மருமகளை வரவேற்க மற்றொருவரின் மகளை கொன்று விட்டீர்கள் என கண்டனம் தெரிவித்த நீதிபதி, தவறிழைக்கவில்லை என்றால் ஏன் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தீர்கள் எனவும் ஜெயகோபால் தரப்பிற்கு கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஜெயகோபால் தரப்பில், விபத்து நடந்த பிறகு தான் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய அரசு தரப்பில் அவகாசப் கேட்கபட்டதால், வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banners