மதுரை டி. கல்லுப்பட்டி பேரூராட்சி தேர்தலில் அரசியல் கட்சி சார்பாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மாநிலத் தேர்தல் ஆணையத்தை
சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி பேரூராட்சிக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி எண்ணப்பட்டன. 10 வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும், சுயேட்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும் தலா 284 வாக்குகளை பெற்றனர். இதனால் குலுக்கல் மூலம் வார்டு உறுப்பினர் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென தி.மு.க வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதுசம்பந்தமாக தேர்தல் அதிகாரி பிறப்பித்த அறிவிப்பை ரத்து செய்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க கோரி பழனிச்செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, குலுக்கல் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இன்று, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வீடியோ பதிவுகள் தாக்கல் செய்யப்பட்டன. அதை பார்வையிட்ட நீதிபதிகள், மனுதாரரை வெற்றி பெற்றவராக அறிவித்திருக்க வேண்டும் எனவும், தேர்தல் முடிவை மாற்றியது நிரூபணமாகியுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், தேர்தலை உயர் நீதிமன்றம் கண்காணித்த நிலையில், தேர்தல் அதிகாரி எப்படி அரசியல் கட்சி சார்பாக செயல்பட்டார் எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மாநிலத் தேர்தல் ஆணையம் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தனர்.
கார்த்தி சிதம்பரத்துக்கு பத்தாண்டுகள் செல்லக்கூடிய பாஸ்போர்ட் வழங்கவேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு
மாநில தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட்டு இருக்க வேண்டும் எனக் கூறி, தி.மு.க வேட்பாளர் வெற்றி என்ற உத்தரவை மாற்றி வெளியிட வேண்டும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரியை திங்கள் கிழமை (மார்ச் 7) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர். அதேபோல வீடியோ பதிவை நகல் எடுத்து பாதுகாக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.