12-ம் வகுப்பு தேர்வு ரத்து முடிவுக்கு தடைவிதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவுக்கு தடைவிதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

  கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதைக் கருத்தில் கொண்டு கடந்த ஜூன் ஒன்றாம் தேதி மத்திய அரசின் சிபிஎஸ்இ 12 ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து தமிழக அரசும் கடந்த ஐந்தாம் தேதி அன்று 12 ம் வகுப்பு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. மதிப்பெண்கள் வழங்க உரிய வழிமுறைகளை வெளியிட குழு ஒன்றை ஏற்படுத்தியது.
  இந்த நிலையில் 12-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

  அந்த வழக்கில், 2020 - 2021 கல்வியாண்டில் 90% அரசுப் பள்ளிகளிலும் 80% அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும்,50% ஆங்கிலவழி தனியார் பள்ளிகளிலும் இணையவழி கல்வி வகுப்புகள், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறவில்லை. ஆனால் சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கும் 90% பள்ளிகளில் இணையவழிக் கல்வி வகுப்புகள், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடை பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

  கடந்த ஆண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது சிபிஎஸ்இ, சிஐஎஸ்இ மற்றும் அனைத்து மாநில கல்வி இயக்கங்களும் பன்னிரண்டாம் வகுப்புகளை நடத்தி முடித்து இருந்தனர். அதனால் அனைத்து வகையான மேல் படிப்புகளுக்கும் அவர்களின் பள்ளி இறுதித் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.

  தற்போது பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாத சூழலில், மேற்படிப்பு வகுப்புகளின் கல்வி சேர்க்கை தகுதியை நிர்ணயம் செய்து மேற்படிப்பு கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்தும் யுஜிசி, மெடிக்கல் கவுன்சில், ஏஐசிடிஇ, நர்சிங் கவுன்சில், டெண்டல் கவுன்சில், பார் கவுன்சில் உடன் கலந்து முடிவு எடுக்காமலும் தமிழ் நாடு அரசின் கல்வித் துறை பன்னிரெண்டாம் வகுப்பு இறுதித் தேர்வை ரத்து செய்தது தவறு என்று தெரிவித்துள்ளார்.

  தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் இன்னும் ஒரிரு மாதங்கள் கழித்து தேர்வு நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜியிடமிருந்து நீதிபதிகள் செந்தில்குமார், ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கு விசாரணையை நாளை ஒத்தி வைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை நீதிபதிகள் நாளை ஒத்தி வைத்திருந்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த நிலையில் அனைத்து வழக்குகளும் முடியும் தருவாயில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை இன்றே விசாரிக்க வேண்டும் கேட்டுக்கொண்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் இதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
  Published by:Karthick S
  First published: