முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முருகன் கோவில் இல்லாத பகுதிகளில் யாத்திரை செல்வது ஏன்? பா.ஜ.கவுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

முருகன் கோவில் இல்லாத பகுதிகளில் யாத்திரை செல்வது ஏன்? பா.ஜ.கவுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

முருகன் கோவிலுக்கு செல்வது மட்டும் தான் நோக்கம் என்றால் முருகன் கோவில் இல்லாத பகுதிகளில் யாத்திரை செல்வது ஏன்? என பாரதிய ஜனதா கட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

தமிழக பா.ஜ. கட்சி சார்பில் நாளை முதல் துவங்க உள்ள வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரி பா.ஜ.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. தமிழக பா.ஜ.க பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தாக்கல் செய்த மனுவில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்ட பின், நவம்பர் 16ம் தேதிக்கு பின் மத நிகழ்ச்சிகளுக்காக நூறு பேர் வரை கூடலாம் என அரசாணையாக தமிழக அரசு பிறப்பித்துள்ளது. ஆனால், அக்டோபர் 15க்கு பின் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வழிகாட்டு விதிகளை பின்பற்ற அறிவுறுத்தி, மத்திய அரசு அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 30 ம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை செல்லாது என அறிவித்து, ரத்து செய்ய வேண்டும் எனவும், நவம்பர் 8 முதல் துவங்க உள்ள வேல் யாத்திரையை தடுக்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

வேல் யாத்திரை சுமூகமாக செல்ல ஏதுவாக அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க தமிழக தலைமைச் செயலாளருக்கும், டிஜிபிக்கும் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, கோவில்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு தடை விதிப்பது தவறு எனவும் கோவிலுக்குள் நுழைவதை முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் இது அரசியல் யாத்திரை அல்ல எனவும் தெரிவித்தார்.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், யாத்திரைக்கு அனுமதி கோரிய விண்ணப்பத்தில் எந்த விவரமும் இல்லை எனவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்படவில்லை எனக் கூறிய அவர், கொரோனா இரண்டாவது அலை பரவ வாய்ப்புள்ளதாகவும், நேற்று யாத்திரையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முகக் கவசம் அணியவில்லை எனவும் புகார் தெரிவித்தார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மத்திய அரசின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், யாத்திரையில் எத்தனை பேர் பா.ஜ.க தலைவருடன் செல்ல இருக்கின்றனர்? அதில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினர்.

மேலும், முருகன் கோவிலுக்கு செல்வதாக இருந்தால் முருகன் கோவில் இல்லாத பகுதிகளுக்கு யாத்திரை செல்வது ஏன்? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அனுமதி கோரிய விண்ணப்பத்தில் முழு விவரங்கள் இல்லை எனவும், கொரோனா மட்டுமல்லாமல், பருவமழையும் துவங்கியுள்ளதால் அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் அப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

பொது அமைதி சம்பந்தப்பட்டுள்ளதால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் யாத்திரையை நிறைவு செய்வதாக கூறப்பட்டுள்ளதாகவும், அந்த தேதியை கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறினர்.

இதையடுத்து, எத்தனை பேர் யாத்திரையில் கலந்து கொள்வர்? எத்தனை பேர் 60 வயதைக் கடந்தவர்கள்? எத்தனை வாகனங்கள் யாத்திரையில் பங்கேற்கும் என அனைத்து விவரங்களுடன் விரிவான விண்ணப்பம் அளிக்கப்படும் எனவும், அரசு நிபந்தனை விதித்தால் அதை மீற மாட்டோம் என உத்தரவாதம் அளிக்க தயார் எனவும், டிசம்பர் 6ம் தேதி தான் பிரச்னை என்றால், டிசம்பர் 5 ம் தேதி முடித்து கொள்ளவும் தயார் என பா.ஜ.க தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், அனைத்து விவரங்களுடன் முழுமையான விண்ணப்பத்தை அரசுக்கும், காவல் துறைக்கும் அளிக்க பா.ஜ.க தரப்புக்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை, நவம்பர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

First published:

Tags: BJP, Chennai High court, Vel Yatra