தமிழகத்தில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பது, மேற்கு தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கக் கோரியது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டித்தது குறித்து மின்சார வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 44 செங்கற்சூளைகளில், 32 சூளைகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாகவும், மீதமுள்ள சூளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 118 செங்கற்சூளைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும், அவற்றின் மின் இணைப்பை துண்டிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
மின் இணைப்பை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்க கூடாது; ஆதரிக்க கூடாது என அரசுத்தரப்புக்கு அறிவுறுத்தினர். மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்கக் கூறியுள்ள நிலையில், 44 சூளைகள் மட்டும் சட்டவிரோதமாக செயல்படுகிறது என எப்படி கூற முடியும் எனவும் நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். அப்போது மீதமுள்ள செங்கற்சூளைகளின் மின் இணைப்பு இரண்டு நாட்களில் துண்டிக்கப்படும் என அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிமன்றம் உத்தரவிட்டும், சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன எனவும், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின்படி, 118 சட்டவிரோத செங்கற்சூளைகளுக்கான மின் இணைப்பை ஒரு நாளில் துண்டித்து, மார்ச் 6ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மின்சார வாரியத்துக்கு உத்தரவிட்டனர். இல்லாவிட்டால், மின்சார வாரிய தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
தடாகம் பள்ளத்தாக்கில் மூடப்பட்ட சூளைகள் இரவில் செயல்படுவதாக மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்டதை அடுத்து, தடாகம் பள்ளத்தாக்கில் மூடப்பட்ட சூளைகளின் மின் இணைப்பையும் துண்டிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்பகுதிகளில் மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட குழிகளை மூடுவதற்கு இறுதி வாய்ப்பாக, அரசுக்கு மூன்று மாத அவகாசம் வழங்கிய நீதிபதிகள், மேற்கொண்டு எந்த அவகாசமும் வழங்கப்படாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.