Home /News /tamil-nadu /

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது- உயர் நீதிமன்றம் உறுதி

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது- உயர் நீதிமன்றம் உறுதி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

    கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி என அறிக்கை வருகிறது எனவும், கடந்த 15 நாட்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக வாதிட்டனர்.

    தேர்தலின் போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க செல்வர் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்களும், வாக்களிக்காதவர்களும் பாதிக்கப்படுவர் என்றும், தொற்று பரவலை பேரிடராக அறிவித்துள்ள நிலையில், தேர்தல் நடத்த தற்போது உகந்த நேரமல்ல என்றும் அரசியல் சாசனத்தின்படி, பொது சுகாதாரத்தை பேணுவது அரசின் கடமை என்பதால் நிலை சீராகும் வரை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் தேர்தல் நடத்தாத நிலையில், தற்போது நடத்த அவசரமில்லை எனவும் கொரோனா மூன்றாவது அலை தணியும் வரை காத்திருக்கலாம். திருமணம், இறுதிச்சடங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் எனவும் குடியரசு தினத்தை ஒட்டி நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டனர்.

    பொது தேர்தலை பொறுத்தவரை வாக்களிக்க இயலாத மாற்றுத் திறனாளிகள், முதியோர், கொரோனா பாதித்தவர்களுக்கு தேர்தலில் பங்களிக்க வகை செயப்பட்டதாகவும், உள்ளாட்சி தேர்தலில் இதுபோன்ற விதிகள் இல்லை என்றும் தெரிவித்தனர். மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், தேர்தல் அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாகவும், உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    தமிழக அரசு தரப்பில், தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் நீதிமன்ற உத்தரவின்படி மாநில அரசு செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் நடத்தப் போவதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என தெரிவித்தனர்.

    அரசியல் சட்டத்தை பின்பற்ற தவறியதால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட தேதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்காவிட்டால் அது நீதிமன்ற அவமதிப்பு எனச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா தடுப்பு விதிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதாகவும், தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட முடியாது எனவும் தெரிவித்தனர்.

    2 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதிபதிகள், அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், பிரச்சாரத்துக்கு செல்லும் வேட்பாளர் மூன்று பேருக்கு மேல் செல்லக் கூடாது என கொரோனா தடுப்பு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

    இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!



    நான்கு மாதங்களில் தேர்தலை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், நீதித்துறை ஒழுங்குபடி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உயர் நீதிமன்றம், தேர்தலை தள்ளிவைக்கும்படி உத்தரவிட முடியாது என திட்டவட்டமாக மறுத்து விட்டனர். தேர்தலில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு விதிகள், கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


    மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், மாநிலத் தேர்தல் ஆணைய கொரோனா தடுப்பு விதிகளை அனைத்து கட்சிகளும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும், விதிமீறல் இருந்தால் நீதிமன்ற கவனத்துக்கு கொண்டு வரலாம் எனவும் உத்தரவிட்டனர். தேர்தல் 5 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அதை தொடரக் கூடாது எனவும், தேர்தலை அறிவித்தால் அது கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.

    மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த கொரோனா விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தி, வழக்குகளை முடித்து வைத்த நீதிபதிகள், தேர்தல் அறிவிப்புக்கு பின் இந்த வழக்குகளை விசாரணைக்கு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local Body Election 2022

    அடுத்த செய்தி