நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அறப்போர் இயக்கம் கருத்து தெரிவிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22ம் தேதி புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது.
இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும், தன்னை பற்றி அவதூறாக பேசுவதற்கு தடைவிதிக்கக்கோரியும்அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாள ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இய்ஜையும் படிக்க : மருத்துவமனை லிப்டில் அமைச்சர் சிக்கிய விவகாரம் : இரு பொறியாளர்கள் தற்காலிக பணிநீக்கம்!
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், எதன் அடிப்படையில் டெண்டர் ஒதுக்குவது என்பது அரசின் கொள்கை முடிவு எனவும் இதில் அறப்போர் இயக்கம் தலையிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒரு நிறுவனத்திற்க்கு ஆதரவாக டெண்டர் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் நிலையில் அந்த நிறுவனம் டெண்டரில் கலந்துகொள்ளவில்லை எனவும் மேலும் டெண்டரில் கலந்து கொண்ட நிறுவனங்கள் எதுவும் டெண்டருக்கு எதிராக வழக்கு தொடரவில்லை எனவும் வாதிடப்பட்டது. தம்முடைய புகழுக்கு களங்கும் விளைவிக்கவும், மலிவான விளம்பரத்திற்காகவும் குற்றம்சாட்டப்படுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதிட்டது.
அறப்போர் இயக்கம் சார்பில், ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரை தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி குறித்து தனிப்பட்ட முறையில் எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை எனவும், பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறப்போர் இயக்கம் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், ஜனநாயகத்தில் மாற்று கருத்து என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று எனவும் அதுதான் வலுவான ஜனநாயகத்தின் அடி நாதம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
2018-19 ஆண்டில் போடப்பட்ட சாலையை மீண்டும் போடுவதற்காக ரூ.276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும் அனுபவம் இல்லாத நிறுவனங்களுக்கு விதிமுறைகளை மீறி டெண்டர் ஒதுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், டெண்டர் குறித்த முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்ததால் எடப்பாடி பழனிச்சாமி இதற்கு பொறுப்பு எனவும் முறைகேடு நடைபெற்றதற்கான ஆதாரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்றதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, எடப்பாடி பழனிச்சாமி குறித்து அறப்போர் இயக்கம் அவதூறாக பேச இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மானநஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arapor iyakkam, Arappor Movement, Edappadi Palaniswami, Madras High court