முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் இல்லை என கூறி பணியாற்றுவதற்கு மறுக்க முடியாது - உயர் நீதிமன்றம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் வசதிகள் இல்லை என கூறி பணியாற்றுவதற்கு மறுக்க முடியாது - உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் தங்கள் படிப்புக்கு இணையான வசதிகள் இல்லை எனக் கூறி பணியாற்ற முடியாது  என மறுக்க முடியாது என  மேற்படிப்பு முடித்த மருத்துவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்கள், இரண்டாண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனை அமலில் உள்ளது. இதனடிப்படையில் தங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்ட பணி நியமனத்தை எதிர்த்து  ஸ்ரீஹரி விக்னேஷ், ஸ்ருதி உள்ளிட்ட 19 மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் தான் நியமிக்க வேண்டும் எனவும், அடிப்படை வசதி இல்லாத ஆரம்ப சுகாதார மையங்களில் நியமிக்கக் கூடாது என்றும் வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசு தரப்பில், 19 மனுதாரர்களில் 8 பேர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மீதமுள்ளவர்கள் கூடுதல் ஆரம்ப சுகாதார மையங்களில் பணியமர்த்தப்பட்டு இருப்பதாகவும், கலந்தாய்வில் இந்த இடங்களை அவர்கள்தான் தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்காக மாநில அரசு அதிக செலவு செய்வதாகவும், அதற்கு பிரதிபலனாக சமுதாயத்திற்கு இந்த மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். இந்த சேவையை இலவசமாக செய்யப்போவதில்லை என்றும், ஊதியத்தை பெற்றுக்கொண்டுதான் செய்யப்போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏழை மக்களுக்காக ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவரும் சூழலில், தங்கள் படிப்பிற்கு இணையான வசதிகள் இல்லை எனக் கூறி ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்ற முடியாது என மருத்துவர்கள் மறுக்க முடியாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற பகுதிகளில் உள்ள ஏழை மக்களும் சிறப்பு நிபுணத்துவ சிகிச்சை பெற வேண்டுமென குறிப்பிட்டுள்ள நீதிபதி, மருத்துவர்களை நோயாளிகள் கடவுளுக்கு நிகராக மதிக்கக் கூடிய சூழலில், அந்த கடவுள்கள் தங்கள் நேரத்தை வழக்குகளில் செலவழிக்க வேண்டாம் என நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், நியமன உத்தரவில் தலையிட எவ்வித காரணமும் இல்லை எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி,  பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஒதுக்கப்பட்ட இடங்களில் பணியில் சேர வேண்டுமனவும் உத்தரவிட்டார்.

First published:

Tags: Chennai High court, Madras High court