நீட் தேர்வில் விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டாம்: உயர் நீதிமன்றம் அறிவுரை

நீட் தேர்வில் விலக்கு பெறுவதாக வாக்குறுதி அளிக்க வேண்டாம்: உயர் நீதிமன்றம் அறிவுரை

அனிதா குடும்பத்திற்கு வழங்கிய நிவாரணம் போல பிற மாணவிகளின் குடும்பங்களுக்கும் வழங்க முடியுமா என்பது குறித்தும் அரசு விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அனிதா குடும்பத்திற்கு வழங்கிய நிவாரணம் போல பிற மாணவிகளின் குடும்பங்களுக்கும் வழங்க முடியுமா என்பது குறித்தும் அரசு விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுகிறோம் என வாக்குறுதி அளித்து கொண்டே இருக்க வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

  அகில இந்திய போட்டித் தேர்வுகளை மாணவ - மாணவிகளுக்கு எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும், தற்கொலை எண்ணம் தோன்றாமல் இருக்க மன நல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளை நீதிபதி கிருபாகரன் பிறப்பித்திருந்தார்.

  2017-ம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதால், தமிழக அரசுக்கு எதிராக வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார்.

  இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, இந்த ஆண்டு நீட் தேர்வு தோல்வியால் திருப்பூர் ரீத்துஸ்ரீ, விழுப்புரம் மோனிஷா, தஞ்சாவூர் வைஷ்யா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சூரியபிரகாசம் கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக அரசு இன்று விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.

  இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் இழப்பீடு மற்றும் நீட் பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய இரண்டு வார காலம் அவகாசம் கேட்கப்பட்டதால் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

  அப்போது நீட் தேர்வு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டு, உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளதால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்று தருவோம் என ஆளும் கட்சியோ, எதிர்கட்சிகளோ வாக்குறுதிகளை மட்டுமே அளித்து கொண்டிருக்க வேண்டாமென கேட்டுக் கொண்டார். விலக்கு பெறுவதில் தீர்க்கமாக இருந்தால் அதில் கவனத்தை செலுத்தும்படியும் கேட்டுக்கொண்டார்.

  கல்வித்துறையில் முன்னேறாத பிற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக்கொண்ட நிலையில், கல்வியில் சிறந்து விளங்கும் தமிழகம் எதிர்ப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். மேலும், 9 மற்றும் 11-ம் வகுப்பு பாடங்களை நடத்தாமல், நேரடியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்கள் நடத்தப்படுவது தான் நீட் தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்களுக்கு மிகப்பெரும் சிக்கலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

  அனிதா குடும்பத்திற்கு வழங்கிய நிவாரணம் போல பிற மாணவிகளின் குடும்பங்களுக்கும் வழங்க முடியுமா என்பது குறித்தும் அரசு விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: