Home /News /tamil-nadu /

அ.தி.மு.க அலுவலக சாவியை ஈ.பி.எஸ்ஸிடம் ஒப்படைத்த உயர் நீதிமன்றம்- பழனிசாமிக்கு சட்ட அங்கீகாரமா? ஓர் அலசல்

அ.தி.மு.க அலுவலக சாவியை ஈ.பி.எஸ்ஸிடம் ஒப்படைத்த உயர் நீதிமன்றம்- பழனிசாமிக்கு சட்ட அங்கீகாரமா? ஓர் அலசல்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தற்போதைய சூழலில் அ.தி.மு.கவின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அது மட்டும் கட்சியின் தலைமைப் பதவியில் நீடிக்க அவருக்கு போதாது. அவர், சட்ட அங்கீகாரத்தையும் அரசியல் அங்கீகாரத்தையும் பெறவேண்டிய அவசியம் உள்ளது.

மேலும் படிக்கவும் ...
ஒற்றைத் தலைமை விவகாரம் அ.தி.மு.கவில் பெரும் புயலைக் கிளப்பியது. ஒற்றைத் தலைமை என்ற எடப்பாடி பழனிசாமியின் முன்னெடுப்புக்கு ஓ.பன்னீர் செல்வம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். நிர்வாகிகள் மட்டத்தில் 95 சதவீதத்திற்கும் கூடுதலான நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி வளைத்துவிட்ட நிலையில் நீதிமன்றத்தை நாடினார் ஓ.பன்னீர் செல்வம். கடந்த மாதம், ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைபெறவிருந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தைக் கொண்டுவரக் கூடாது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்றார் ஓ.பன்னீர் செல்வம்.

பின்னர், ஜூலை 11ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வம் தடைகோரி நீதிமன்றம் சென்றார். ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. ஜூலை 11ஆம் தேதி அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதற்கு சட்ட அங்கீகாரம் என்ன என்பதற்கு இதுவரையில் தெரியாமலே உள்ளது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடந்த அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம், அவரது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அப்போது, அ.தி.மு.க அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ.பன்னீர் செல்வம் வருகையை தடுக்க முயன்றனர். அப்போது பெரும் கலவரம் ஏற்பட்டது. தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அ.தி.மு.க அலுவலகத்தின் கதவை உடைத்துக் கொண்டு ஓ.பன்னீர் செல்வம் அலுவலகத்துக்குள் சென்றார். அதனையடுத்து, கலவரம் மூண்டதைக் காரணம் காட்டி வருவாய் துறையினர் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

அ.தி.மு.க அலுவலகத்திற்கு வருவாய் துறையினரால் வைக்கப்பட்ட சீலை நீக்க வேண்டும், அலுவலக சாவியைத் தங்கள் தரப்பிடம் கொடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றத்தால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கவேண்டும், மேலும், ஒரு மாத காலத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read | குடியரசுத் தலைவர் தேர்தல்: தமிழ்நாட்டிலிருந்து திரவுபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா பெறும் வாக்குகள் எவ்வளவு?

எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இது மிக முக்கியமான வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியைக் அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் பொதுச் செயலாளராக ஒப்புக்கொண்டாலும், அரசியல் களத்திலும், சட்ட ரீதியாகவும் பொதுச் செயலாளர் என்ற இடத்தைப் பெற்றுவிட்டாரா என்பது கேள்விக் குறியாகவே இருந்து வருகிறது. அ.தி.மு.கவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டார். அதில், ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஜி.கே.வாசன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதேநேரத்தில் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அல்லது அண்ணாமலையோ அதனை உறுதிப்படுத்தவில்லை. எனவே, பா.ஜ.க சார்பில் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் நியமனத்திலிருந்து விலகி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். மேலும், அ.தி.மு.க விவகாரத்தில் பா.ஜ.க, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகவே இருப்பதாக சூழல்கள் தெரிகின்றன.

அதன் பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர், விரைந்து குணமடைய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசியல் நாகரீகம் கருதி கூட மு.க.ஸ்டாலின் கொரோனாவிலிருந்து மீண்டெழ வேண்டும் என்று கருத்தைத் தெரிவிக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்துக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்’ என்று ஓ.பி.எஸ்ஸை அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்றே பதிவிட்டிருந்தார். இந்த கருத்துகள்,  மத்தியிலுள்ள பா.ஜ.க, மாநிலத்தில் ஆட்சியிலுள்ள தி.மு.க எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக ஒப்புக்கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. தற்போதைய சூழலில் அ.தி.மு.கவின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அது மட்டும் கட்சியின் தலைமைப் பதவியில் நீடிக்க அவருக்கு போதாது. அவர், சட்ட அங்கீகாரத்தையும் அரசியல் அங்கீகாரத்தையும் பெறவேண்டிய அவசியம் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் செய்த முறையீடு இன்னமும் நிலுவையில்தான் உள்ளது. இந்த நேரத்தில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒப்படைக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒருவகையில் பழனிசாமிக்கு கிடைத்த சட்ட அங்கீகாரமாகவே கருதமுடியும். ஒரு பொருளுக்கு இருவர் சொந்தம் கொண்டாடும் பொழுது, ஒருதரப்புக்கு அந்தப் பொருளை வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறதென்றால் அவரை அந்தப் பொருளின் உரிமையாளராக நீதிமன்றம் ஒப்புக்கொள்கிறது என்றே கருதலாம். அந்த அடிப்படையில், கட்சி அலுவலகத்தின் சாவி கிடைப்பது என்பது அவருடைய பதவிக்கு கிடைத்த சட்ட அங்கீகாரமும்தான். ஆனால், அலுவலக சாவி ஒப்படைப்பு விவகாரத்துக்கு எதிரான ஓ.பன்னீர் செல்வத்தின் மேல்முறையீடு, தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் என்னவாக இருக்கும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல முடியும்.
Published by:Archana R
First published:

Tags: ADMK, Edappadi Palanisami, EPS, Madras High court, OPS

அடுத்த செய்தி