Home /News /tamil-nadu /

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு: விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு: விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி கலவரம்

கள்ளக்குறிச்சி கலவரம்

'மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில், மருத்துவக் குழுக்களை நியமித்த தமிழக அரசுக்கு பாராட்டு' - சென்னை உயர்நீதிமன்றம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kallakkurichi (Kallakurichi) | Chennai
    கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு வழக்கில் விரைந்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி-க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அவரது தந்தை தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மூன்று அறிக்கைகளை சீலிடப்பட்ட உறையில் வைத்து அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா தாக்கல் செய்தார்.

    பள்ளிக் கல்வித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கச் செய்யும் வகையில் புதிய திட்டம் ஒன்றை முதலமைச்சர் வகுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல, கலவரம் தொடர்பாக விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு, தங்களது விசாரணை குறித்த விவரங்களை அளித்துள்ளது. அப்போது, விசாரணை அறிக்கைகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

    ஆனால், ஜிப்மர் ஆய்வறிக்கை மற்றும் விசாரணை நிலை குறித்த அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க மறுத்த நீதிபதி, மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில், மருத்துவக் குழுக்களை நியமித்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். புலன் விசாரணையை விரைந்து மேற்கொண்டு, விரைவில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிசிஐடி தரப்புக்கு உத்தரவிட்டார்.மேலும், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    ALSO READ | ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையில் என்ன இருக்கிறது? ஆறுமுகசாமி எக்ஸ்கிளூசிவ் பேட்டி

    இதனிடையே, மாணவி உயிரிழப்பு வழக்கில் கைதுசெய்யப்பட்ட பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்ட 5 பேருக்கும் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது. இந்த உத்தரவில், தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் மதுரையில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல, கைதான இரு ஆசிரியைகளும் சேலத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவியை ஆசிரியர்கள் தற்கொலைக்கு தூண்டியதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
    மாணவியை நன்றாக படிக்க வேண்டும் என்று கூறியதற்காக ஆசிரியர்கள் தற்போது சிறைவாசம் அனுபவிப்பது துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Chennai High court, Kallakurichi, Madras HC

    அடுத்த செய்தி