காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தென்கலையினர் மட்டும் பாட அனுமதித்த உதவி ஆணையர் உத்தரவையும், வடகலையினரும் பாட அனுமதித்த தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், தென்கலை பிரிவினர் மட்டும் பிரபந்தம் பாட அனுமதித்து கோவில் உதவி ஆணையர், கடந்த 14ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து வடகலை பிரிவைச் சேர்ந்த நாராயணன் என்பவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதல் மூன்று வரிசைகளில் தென்கலை பிரிவினரும், அவர்களுக்குப் பின்னர் வடகலை பிரிவினரும், சாதாரண பக்தர்களும் அமர அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
தென்கலை பிரிவினர் முதலில் ஸ்ரீ சைல தயாபத்ரம் வாசிக்கவும், அதன்பின்னர் வடகலை பிரிவினர் ஸ்ரீ ராமானுஜ தயாபத்ரம் வாசிக்கவும், அதன் பின்னர் தென்கலை, வடகலை, பிற பக்தர்கள் இணைந்து நாலாயிர திவ்விய பிரபந்தம் பாட அனுமதிக்க வேண்டும் எனவும், அதன்பின்னர் தென்கலை பிரிவினர் மணவாள மாமுனிகள் வாலி திருநாமமும், வடகலை பிரிவினர் தேசிகம் வாலி திருநாமமும் பாட அனுமதிக்க வேண்டுமென உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தென்கலை பிரிவைச் சேர்ந்த ரங்கநாதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், கோவிலில் பிரபந்தம் பாட தென்கலை பிரிவினருக்கு என தனிப்பட்ட உரிமை உள்ளது எனவும், அந்த உரிமை 1915, 1963ம் ஆண்டுகளில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீசைல தயாபத்திரத்துடன் பிரபந்தம் பாடவும், இறுதியாக மணவாள மாமுனிகள் வாழி திருநாமமும் மட்டுமே பாடப்பட வேண்டும் என்பது மரபு எனவும், இதைத் தவிர வேறு எந்த மந்திரங்களும் பாட வடகலை உள்ளிட்ட எந்த பிரிவினருக்கும் எந்த உரிமையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகலை பிரிவினரை பிரபந்தம் பாட அனுமதித்தது என்பது உயர் நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்புகளுக்கும், மரபுக்கும் எதிரானது என்பதால், கடந்த 17ம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் இளந்திரையன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏதேனும் குறை இருந்தால் சட்டப்படி இணை ஆணையரை தான் அணுக முடியும் எனவும், 300 ஆண்டுகளாக பின்பற்றப்படும் உரிமை இது என தென்கலை பிரிவினர் தரப்பில் வாதிடப்பட்டது.
Also read... அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி மனு
ஸ்ரீராமனுஜ தயாபத்திரம் பாடவும், வேதாந்த தேசிகர் வாழி திருநாமம் பாடவும் மட்டுமே அனுமதி கோருவதாகவும், 10 நொடிகள் இவற்றை பாட வடகலை பிரிவினருக்கு உரிமை இல்லையா வடகலை பிரிவினர் தரப்பு வழக்கறிஞர்கள் கேள்வி எழுப்பினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், காஞ்சிபுரம் கோவில் வழக்கு தொடர்பான அனைத்து வழக்குகளையும் தலைமை நீதிபதியிடம் ஒப்புதல் பெற்று இதே அமர்வு முன்பு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அதுவரை, கோவிலில் தென்கலையினர் மட்டுமே பாட வேண்டுமென்ற உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவையும், வடகலையினரும் பாட அனுமதித்த தனி நீதிபதி உத்தரவையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். இரு நீதிபதிகளின் இன்றைய உத்தரவு மூலம் தென்கலை மற்றும் வடகலை என இரு தரப்பினரும் பாடமுடியாத நிலை உருவாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kancheepuram, Madras High court