காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து: ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

 • News18
 • Last Updated :
 • Share this:
  காவல் நிலையத்தில் கட்டபஞ்சாயத்து செய்த விவகாரம் தொடர்பாக, அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தனியார் நிறுவனம் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், அம்பத்தூரை சேர்ந்த கணேசன் என்பவருக்கு பூந்தமல்லி நீதிமன்றம், ஓராண்டு சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து கணேசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், மூன்று மாத இடைவெளியில் இரு தவணைகளில் 10 லட்சம் ரூபாயை கணேசன் டிபாசிட் செய்ய வேண்டும் எனவும், பணத்தை வழங்காவிட்டால் ஜாமீனை ரத்து செய்யக் கோரி புகார்தாரர், பூந்தமல்லி நீதிமன்றத்தை அணுகலாம் என்ற நிபந்தனைகளுடன் 2016-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

  பணத்தை செலுத்தாததால் கணேசனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் மனு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கணேசனுக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்தது.

  அதன்படி, அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய ஆய்வாளர், கணேசனை பிடித்துச் சென்று வழக்கு தொடர்ந்த தனியார் நிறுவன நிர்வாகிகளையும் வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். கணேசனின் தந்தையின் பெயரில் நெல்லையில் உள்ள சொத்துக்கள் மீதான அதிகாரத்தை (பவரை) புகார்தாரர் தரப்புக்கு எழுதிக் கொடுத்துள்ளனர்.

  இதுதொடர்பாக, கணேசன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். பின்னர், இந்த வழக்கு தொடர்பாக, அக்டோபர் 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அம்பத்தூர் எஸ்டேட் காவல் ஆய்வாளருக்கு நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.
  Published by:Vinothini Aandisamy
  First published: