சமூக வலைதள பதிவுகள்... உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து

சென்னை உயர்நீதிமன்றம்.

யாரைப் பற்றியும் யார் வேண்டுமானாலும் எந்தப் பதிவையும் சமூக வலைதளத்தில் வெளியிடலாம் என்பதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமூக வலைதளத்தில் யாரைப் பற்றியும், யார் வேண்டுமானாலும் எந்தப் பதிவையும் வெளியிடலாம் என்பதை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பற்றி, முகநூல் பக்கத்தில் அவதூறாக கருத்து பதிவிட்டதாகக் கூறி கடலூர் மாவட்டம், மழவராயன்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்துவை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் குறித்து உள்நோக்கத்துடனோ, ஆபாசமான படமோ பதிவு செய்யாத நிலையில், தன் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறி அதனை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வீரமுத்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு எதிராக நடைபெறும் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஒருவர் யோசிக்காமல் ஒரு தவறை செய்து விட்டு, பின்னர் மன்னிப்பு கோருவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்.

யாரைப் பற்றியும் யார் வேண்டுமானாலும் எந்தப் பதிவையும் சமூக வலைதளத்தில் வெளியிடலாம் என்பதை ஏற்க முடியாது என்பதால், அமைச்சருக்கு எதிராக கருத்து பதிவிட்ட மனுதாரர் வீரமுத்துவுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து தனது மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை நீதிபதி ஏற்றுக் கொண்டார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published: