கஜா புயல் நிவாரணம் தொடர்பாக வரும் 29-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த கஜா புயல், கடந்த 16-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கரையை கடந்தது. நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
கஜா புயலுக்கு இதுவரை 46 பேர் பலியாகியுள்ளதாகவும், 2.5 லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
88,120 ஹெக்டேர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஒரு லட்சத்து 70,000 மரங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும், ஒரு லட்சத்து 17,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதித்த நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தஞ்சை நாகை திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக உணவு, குடிநீர், மின்சார வசதி இல்லாமல் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளதாகவும், பலியான விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தாததால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
மேலும், அரசு நிவாரண நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும், மத்திய அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்து கிடப்பதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த கால்நடைகள், சேதமடைந்த பயிர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்கு பதில் புது வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு கடந்த செவ்வாய் அன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புயல் நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் எனத் தெரிவித்தனர்.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், புயல் பாதிப்பு குறித்து பிரதமர், முதல்வரிடம் கேட்டறிந்துள்ளதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளதாக கூறிய நீதிபதிகள், ஒரே இரவில் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள முடியாது எனக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசு நிவாரணம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளை வரும் 29-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.