போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

மருத்துவர்கள் வேலைநிறுத்தம் (கோப்புப்படம்)

 • News18
 • Last Updated :
 • Share this:
  அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை பணிமாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

  ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் ஐந்து நாட்கள் அரசு மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

  அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் திரும்ப பெறப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு சார்ஜ் மெமோ எனும் குற்றச்சாட்டு குறிப்பாணையும், சிலருக்கு பணிமாறுதல் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.

  இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட மருத்துவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

  இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கை நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

  இந்நிலையில், இந்த வழக்கில் இறுதி தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை எனத் தெரிவித்தார்.

  மேலும், போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு மருத்துவர்களை பணிமாற்றம் செய்தும், சார்ஜ் மெமோ வழங்கியும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

  நீண்டகாலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து அரசு மருத்துவர்களும், அரசும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் எனவும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, வழக்குகளை முடித்து வைத்தார்.

  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் பணியிடமாறுதல் ரத்து செய்யப்பட்டதிற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
  Published by:Sankar
  First published: